கடந்த செப்டம்பர் 20, 2019 வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் ஒரே நாளில் வாண வேடிக்கை காட்டியது போல சுமார் 1,920 புள்ளிகள் அதிகரித்தது. அதற்கு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியைச் குறைத்தது தான் காரணம் என நமக்கு நன்றாகத் தெரியும். அதற்கு அடுத்த நாளில் கூட மீண்டும் இழுத்துப் பிடித்து சென்செக்ஸ், சுமாராக 1,100 புள்ளிகள் மீண்டும் ஏற்றம் கண்டது.
சுருக்கமாக கார்ப்பரேட் வரி என்கிற ஒரு செய்தியை வைத்து சந்தை இரண்டு வர்த்தக நாளில் சுமாராக 8.3 சதவிகிதம் உயர்ந்தது. அதன் பின், இன்ஸ்டால்மெண்டில் இ எம் ஐ செலுத்துவது போல ஏறிய ஏற்றம் எல்லாம் சரியத் தொடங்கியது. சரிவு என்றால் சாதாரண சரிவு அல்ல, சுமார் 39,090 புள்ளிகளில் இருந்து 37,531 புள்ளிகள் வரைக்குமான பெரிய சரிவு. ஆனால் நல்ல வேளையாக 37,410-ஐ சப்போர்ட் எடுத்து சென்செக்ஸ் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது.
1. ரெசிஸ்டென்ஸ் 39,500
கடந்த அக்டோபர் 07, 2019-ல் இருந்து இன்று வரை சென்செக்ஸ் பெரிய சரிவுகளைக் காணாமல் அப்படியே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதோடு கடந்த 08 ஜூலை 2019 அன்றுக்குப் பின் சென்செக்ஸ் 39,500 புள்ளிகளைத் தொடவில்லை. ஆனால் இன்று தொட்டிருக்கிறது என்பது டெக்னிக்கலாக ஒரு வலுவான விஷயமாக இருக்கிறது.
2. கப் அண்ட் சாசர் பேட்டன்
அதே போல கடந்த 08 ஜூலை 2019, 23 செப்டம்பர் 2019, 27 அக்டோபர் 2019 ஆகிய தேதிகளில் சென்செக்ஸ், சுமாராக 39,500 புள்ளிகளைத் தொட்டு ஒரு கப் அண்ட் சாசர் பேட்டனைக் காட்டுகிறது. இந்த பேட்டனை உடைக்கும் விதத்தில் சென்செக்ஸ் இன்று 39,650 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே சென்செக்ஸ் மேற்கொண்டு ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
3. இலக்கு காரணம்
ஏற்கனவே சில குளோசிங் பெல் செய்திகளில், இந்த கப் அண்ட் சாசர் பேட்டனில், கப்பின் கைப்பிடி போல் இருக்கும் ஆழத்தை மட்டும் கணக்கிட்டால் கூட சுமார் 1,500 புள்ளிகள் வருகிறது. (39,298 - 37,531 = 1,445). எனவே, சென்செக்ஸ் தன்னுடைய 39,000 புள்ளிகளில் இருந்து சுமாராக 40,500 புள்ளிகள் வரை ஏற்றம் காணலாம் எனச் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த ஏற்றப் பாதையில் சென்செக்ஸ் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
இவை எல்லாம் டெக்னிக்கலாக சென்செக்ஸுக்கு சாதகமாக இருக்கிறது. சந்தை ஏற்றத்துக்கு என்ன ஃபண்டமெண்டல் காரணங்கள் இருக்கின்றன..?
4. காலாண்டு முடிவுகள்
ஃபண்டமெண்டலாகப் பார்த்தால், கடந்த சில வாரங்களாக வெளி வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான நிறுவனங்களின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகளில் ஏறத்தாழ சுமார் 34 சதவிகித நிறுவன பாசிட்டிவ்வான முடிவுகளையே வெளியிட்டு இருக்கிறார்கள் என்கிறது பி எஸ் இ. அதோடு 39 சதவிகித நிறுவனங்கள் ஃப்ளாட்டான முடிவுகளையே வெளியிட்டு இருக்கிறார்கள். ஆக மொத்தம், இதுவரை வெளியான செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகளில், 73 சதவிகித நிறுவன முடிவுகள் பாசிட்டிவாகவோ அல்லது ஃபளாட்டாகவோ தான் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே ஃபண்டமெண்டலாகவும் சந்தையை உயர்த்தும் விதத்தில் இன்னும் சில நல்ல செய்திகள் வரும் என எதிர்பார்க்கலாம்.
5. அமெரிக்க டாலர் & கச்சா எண்ணெய்
அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.75-க்கு நிலைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 03, 2019 அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.39 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலையும் 60.95 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த செய்திகளும் சந்தைக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
40,000-த்தை நோக்கி சென்செக்ஸ்..!
எனவே நாம் கணித்தது போல சந்தை தன் 40,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை கடந்து 40,500 புள்ளிகளைத் தொடும் என எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் சர்வதேச அளவில் மேக்ரோ பொருளாதார காரணிகளோ அல்லது நம் இந்திய பொருளாதாரம் தொடர்பாக ஏதாவது பெரிய நெகட்டிவ் செய்தி வந்தாலோ, இந்த ஏற்றம் தடைபடலாம். எனவே முதலீட்டாளர்கள் உஷாராக, முழு விவரங்களை தெரிந்து கொண்டு வியாபாரம் செய்யவும்.