உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக முதலீட்டு சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதே வேளையில் மார்ச் மாத இறுதிக்குள் அமெரிக்கப் பெடரல் வங்கி அந்நாட்டுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கப் பெடரல் வங்கி 0.50 சதவீதம் வரையிலான வட்டியை உயர்த்த திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு சந்தை
இதேவேளையில் பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தையும் அதிகப்படியான உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.

அன்னிய முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) மார்ச் 2 முதல் மார்ச் 4 வரையிலான 3 நாட்களில் மட்டும் பங்குச்சந்தையில் இருந்து ரூ.14,721 கோடியும், கடன் சந்தை இருந்து ரூ.2,808 கோடியும், ஹைப்ரிட் கருவிகளில் இருந்து ரூ.9 கோடியும் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியுள்ளதாக டெபாசிட்டரிகளின் தரவுகள் கூறுகின்றன.

ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்களின் முதலீட்டுக் கொள்கையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

17,537 கோடி ரூபாய்
இதன் வாயிலாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் முதல் மூன்று வர்த்தக நாளில் மட்டும் இந்திய சந்தைகளில் இருந்து சுமார் 17,537 கோடி ரூபாய் வரையிலான தொகையை வெளியேற்றியுள்ளனர்.

இந்திய சந்தை
இந்திய பங்குச் சந்தைகளின் உயர் மதிப்பீடுகள், பெருநிறுவன வருவாய்க்கான ஆபத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மந்தமான வேகம் ஆகியவற்றின் காரணமாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

2022 பிப்ரவரி
2022 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவைத் தவிர, வளர்ந்து வரும் சந்தைகளில் FPI-க்களின் முதலீடுகள் வளர்ச்சி பாதையிலேயே உள்ளது. உதாரணமாக இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பிப்ரவரி மாதம் 1,220 மில்லியன் டாலர், 141 மில்லியன் டாலர், 418 மில்லியன் டாலர் மற்றும் 1,931 மில்லியன் டாலர் எனத் தத்தம் நாடுகளில் அதிக முதலீடுகள் குவிந்துள்ளது.