இந்திய பங்கு சந்தைகள் இன்று சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 470.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 48,564.27 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 152.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 14,281.30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதே கடந்த இரண்டு அமர்வில் மட்டும் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.
இது சந்தையில் காணப்படும் செல்லிங் பிரசரையே காட்டுகிறது. குறிப்பாக இன்று மிட்கேப் மற்றும் ஸ்மால் குறியீடுகள் கிட்டதட்ட 2% வீழ்ச்சி கண்டுள்ளன.

விதிகள் கடுமையாகிறதா?
அதெல்லாம் சரி என்ன காரணம் தொடர்ந்து புதிய உச்சத்தினையே தொட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளதே? ஹெச்டிஎஃப்சி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனங்கள் 2.5 - 3.5% வீழ்ச்சி கண்டுள்ளன. இது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் மாற்றப்படலாம் என்றும் அச்சத்தில் இந்த வீழ்ச்சியினை கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆர்பிஐ பரிந்துரை செய்யலாம்
இந்த வாரத்தில் பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பணப்புழக்க விகிதத்தினையும், பண இருப்பு விகிதத்தினையும் பராமரிக்க பரிந்துரைக்கலாம். இதற்காக ஒரு திட்டத்தினை ரிசர்வ் வங்கி அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த துறையில் மிகப்பெரிய வடிகாலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சப்போர்ட் லெவல்
சென்செக்ஸ் குறியீட்டில் இன்று ஓஎன்ஜிசி மிகப்பெரிய இழப்பீட்டாளராக உள்ளது. சுமார் 5% வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் லாபத்தினையும் பதிவு செய்துள்ளன.
நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் விகிதமான 14,350 புள்ளிகளை உடைத்து காட்டியுள்ளது. இதற்கடுத்த சப்போர்ட் லெவல் 14,150 மற்றும் 14,000 புள்ளிகளை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை அதிக ஏற்ற இறக்கத்தினை கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் கட்டாயம் ஸ்டாப் லாஸினை வைத்துக் கொள்ள வேண்டும். ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 14,500 என்ற லெவலில் உள்ளது. எனினும் நிஃப்டி மீடியம் டெர்மில் சற்று குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சந்தை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும்
வரவிருக்கும் பட்ஜெட், சர்வதேச சந்தை காரணமாகவும் சந்தை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். நல்ல பொருளாதார வளர்ச்சி காரணமாக கடந்த 11 வாரங்களில் சந்தை நன்கு ஏற்றம் கண்டது. எனினும் குறுகிய கால திருத்தம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது நீண்டகால சந்தைக்கு ஏற்ப இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய சந்தைகள் சரிவு
ஐரோப்பிய பங்கு சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இதுவும் சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஜனவரி 11 அன்று கண்ட கேப் அப் இன்று நிரப்பப்பட்டுள்ளது. அதோடு அமெரிக்க பங்கு சந்தைகள் இன்று மார்ட்டின் லூதர் கிங் விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளது. எனவே இதுவும் சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

நிஃப்டியின் அடுத்த சப்போர்ட்
நிஃப்டியின் அடுத்த சப்போர்ட் விகிதம் 14,040 - 14,0215 என்ற விகிதத்தில் உள்ளது, இதே ஏற்றம் காணும் எனில் 14,358 ரெசிஸ்டன்ஸ் ஆக செயல்படக்கூடும்.
இன்று ஹெச்டிஎஃப்சி வங்கி 1.1% அதிகரித்து வரலாற்று சாதனை படைத்தது. இது கடந்த சனிக்கிழமையன்று வலுவான லாபத்தினை பதிவு செய்த நிலையில் இந்த ஏற்றத்தினை கண்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2.4% ஏற்றம் கண்டது. இது இதன் ரீடெயில் ஆன்லைன் வர்த்தகமான ஜியோமார்டினை, வாட்ஸப்புடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து ஏற்றம் கண்டது.