கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளன.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்கிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 73.12 புள்ளிகள் சரிந்து, 43,879.59 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 27.80 புள்ளிகள் சரிந்து 12,846.40 ஆகவும் இருந்தது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 111.01 புள்ளிகள் சரிந்து 43,841 ஆகவும், இதே நிஃப்டி 30.70 புள்ளிகள் குறைந்து, 12,843 ஆகவும் காணப்பட்டது. இதில் 594 பங்குகள் ஏற்றத்திலும், 420 பங்குகள் சரிவிலும், 72 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

என்ன காரணம்
இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இன்று இந்திய சந்தைகள் கடந்த சில திணங்களாக ஏற்றத்தில் இருந்தது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் இதுவரையில் 38,137.7 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்டோபர் மாதத்தில் 14,537.40 கோடி ரூபாய் முதலீடுகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு முதலீடுகள் சரிவு
அன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரித்திருந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்துள்ளது. சொல்லப்போனால் நவம்பர் 17 நிலவரப்படி 24,130.23 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன. ஆனால் அக்டோபர் மாதத்தில் 17,318.44 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியது கவனிக்கதக்கது. இது சந்தை புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் செய்துள்ளதால் வந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதனாலேயே கடந்த சில வர்த்தக அமர்வுகளில் புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி சரிவு
தமிழகத்தினை அடிப்படையாகக் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கிக்கு, மத்திய நிதியமைச்சகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு மாதத்திற்கு இவ்வங்கி வாடிக்கையாளர் அவசர தேவை தவிர, 25,000 ரூபாய்க்கு மேல் பணத்தினை எடுக்க முடியாது. பெரியளவிலான பரிவர்த்தனைகளை செய்ய முடியாது என்று அறிவித்ததையடுத்து இவ்வங்கி லோவர் சர்கியூட் ஆகியுள்ளது. தற்போது 20% குறைந்து 12.40 ரூபாயாக காணப்படுகிறது. ஆக இதுவும் சந்தையின் சரிவுக்கு ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில் பல சிவப்பு நிறத்திலும், பல மாற்றமில்லாமலும் காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், லார்சன், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பிபிசிஎல்,பிரிட்டானியா, ஹெச் யு எல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் எஸ்பிஐ, இந்தஸ்இந்த் வங்கி, எம் & எம், லார்சன், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே நெஸ்டில், ஹெச் யு எல், டைட்டன் நிறுவனம், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 11 புள்ளிகள் குறைந்து, 43,964.41 ஆகவும், இதே நிஃப்டி 2.55 புள்ளிகள் குறைந்து, 12,871.65 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.48 ரூபாயாக சரிந்து காணப்படுகிறது.