இந்தியாவில் உற்பத்தித் துறையில் ஊழியர்களின் நலனைக் காக்க தொழிலாளர் சங்கம் இருக்கும், இதன் மூலம் நிறுவனத்தில் ஏற்பட்டும் பிரச்சனைகளுக்கு மத்திய மற்றும் மாநில தொழிலாளர் அமைச்சகத்தின் துணையுடன் தீர்வு காணமுடியும்.
ஆனால் ஐடி, தனியார் வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் இத்தகைய தொழிலாளர் சங்கம் இருப்பதில்லை. இதனால் இத்துறைகளில் இருக்கும் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லாமல் ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
உதாரணமாகத் தற்போது ஐடி துறையில் செய்யப்படும் பணிநீக்கத்திற்கு யூனியன் இருந்திருந்தால் அனைத்தையும் கட்டுப்படுத்திருக்க முடியும்.
ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் தொழிலாளர் சங்கம் அமைப்பது சாத்தியமா..?

கண்டிப்பாகச் சாத்தியமே
உதாரணமாக 2014ஆம் ஆண்டின் கடைசியில் நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 30,000 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்தது.
இதன்பின் தேவையற்ற, அர்த்தமில்லாத காரணங்களைக் கூறி ஊழியர்களை வெளியேற்றத் துவங்கியது டிசிஎஸ் நிர்வாகம். இதில் அதிகளவிலான பணிநீக்கம் சென்னை அலுவலகங்களில் இருக்கும் என அறிவித்தது டிசிஎஸ்.

ஊழியர்கள் எதிர்ப்பு
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து சில நாட்களில் சென்னை டிசிஎஸ் ஊழியர்கள் சமுக வலைத்தளங்கள் மற்றும் இணையதள வாயிலாக ‘We are against TCS layoff' என்ற பெயரில் போராட்டங்கள் நடத்தினர்.

டிசிஎஸ் நிர்வாகம்
ஆன்லைன் போராட்டத்தைத் துவக்கத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத டிசிஎஸ் நிர்வாகம், சென்னை ஊழியர்களின் விடா முயற்சி இந்தியாவில் உள்ள அனைத்து டிசிஎஸ் ஊழியர்களையும் போராட்டத்தில் இணைத்தது.
மேலும் இணையத்தளத்தில் கையெழுத்துப் போராட்டம் என மத்திய அரசின் காதுகளில் விழும் அளவிற்குப் போராட்டம் பெரியதாக வெடித்தது.

அமைப்பு
இதன் பின் சென்னையை மையமாகக் கொண்டு ஐடி ஊழியர்களுக்காகக் குரல்கொடுக்க எந்த ஒரு நிறுவன சாயலும் இல்லாமல் தனியொரு அமைப்பாக FITE உருவானது. இப்போது கூடச் சென்னை காக்னிசென்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 10 ஊழியர்கள் இந்த அமைப்பு வாயிலாகத் தான் தொழிலாளர் அமைப்பில் பணிநீக்கம் குறித்துப் புகார் அளித்துள்ளது.

டிசிஎஸ் பின்வாங்கியது.
இந்தியா முழுவதும் டிசிஎஸ் ஊழியர்கள் செய்யப் போராட்டத்தின் வாயிலாகப் பணிநீக்கம் குறித்த தனது முடிவை டிசிஎஸ் நிர்வாகம் பின்வாங்கியது.

மிகவும் அவசியமான ஒன்று..
தற்போது பல்வேறு காரணங்கள் கூறி, ஐடி நிறுவனங்கள் புல்கட்டுக்களை வீசுவது போல் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர்கள் ஒன்றிணைந்து தொழிலாளர் சங்கங்களை உருவாக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக நின்றால் நிறுவனங்களால் பணிநீக்கம் செய்ய முடியாது.
ஐடி ஊழியர்கள் நினைத்தால் ஒரே இரவில் செய்து முடிக்க முடியும், ஐடி ஊழியர்களே சற்று யோசியுங்கள்.

பிற துறைகளிலும்
வங்கித்துறையில் எடுத்துக்கொண்டால் கூட அரசு வங்கி ஊழியர்களுக்குக் குரல் கொடுக்கப் பல அமைப்புகள் உண்டு. ஆனால் தனியார் வங்கிகளில் பெயருக்கு சில இருந்தாலும், உண்மையாகவும், நேர்மையாகவும் குரல் கொடுக்க எந்த ஒரு அமைப்பும் இல்லை.
பொதுவாக இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களுக்குக் கைகொடுக்க எந்த ஒரு பிடிமானமுமில்லை. நிர்வாகம் சொல்வது அனைத்திற்கும் தலையாட்ட வேண்டிய நிலையில் தான் அனைவரும் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு இதிலும் முன்னோடி..
சில மாதங்களுக்கு முன்பு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்ற மாநில தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அரசுக்கு ஐடி நிறுவனங்களில் தொழிலாளர் சங்கத்தை அமைப்பது குறித்து மனு ஒன்றை அளித்தது.
அதற்குத் தமிழ்நாடு அரசு ஒரு மாநிலத்தில் இருக்கும் நிறுவன ஊழியர்களின் நலனுக்காக இந்நிறுவனத்தின் செயல்பாட்டையும், சட்டதிட்டத்தையும் மாற்ற அம்மாநில அரசுக்கு உரிமை உண்டு.
இதன்படி இனி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஐடி மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களும் தொழிலாளர் சங்கத்தை அமைக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வாமாக அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரமும், உரிமையும் அவர்களுக்கு உண்டு என்பதையும் தெரிவித்துள்ளது.

பிற மாநிலங்கள்
தமிழ்நாட்டைப் போல் இந்தியாவில் பிற மாநிலங்களும் இத்தகையை உரிமையை அளிக்க வேண்டும் என்பது தமிழ் குட்ரிட்டன்ஸ் -இன் வேண்டுகோள்.
நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியவை
இந்தியாவில் என்ன தான் நடக்கிறது.. புல்லுக்கட்டை போல் தூக்கி எறியப்படும் 'ஐடி' ஊழியர்கள்
ஆயிரம் சொல்லுங்க.. தமிழ்நாடு கெத்து தான்..!