இன்று தமிழ்நாடு சட்டசபையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைச் சரியாக 10.30 மணிக்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது 8வது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட் அறிக்கையில் என்ன கிடைத்தது..?

ஆரம்பமே எதிர்ப்பு தான்..
காவிரி பிரச்சனையில் மத்திய அரசுக்குச் சரியான அழுத்தம் கொடுக்காமல் மெத்தனமாகத் தமிழக அரசு செயல்படுகிறது என்பதை உணர்த்தித் திமுகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர். இதுமட்டும் அல்லாமல் பட்ஜெட் அறிக்கையைத் துவங்கும் முன் அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.

மானிய விலை ஸ்கூட்டர்
வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக மானிய விலையில் ஸ்கூட்டர் அளிக்கும் திட்டமானது அன்மையில் துவங்கப்பட்ட நிலையில் தற்போது 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவக் காப்பீடு
மத்திய அரசு உதாரணமாக விளங்கிய தமிழ்நாட்டு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு 2018-19ஆம் நிதியாண்டில் ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்திக்கடவு-அவினாசி
தமிழக மக்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு, தமிழகப் பட்ஜெட்டில் அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை
2018-2019 நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 1.76 லட்சம் கோடியாகவும், செலவுகள் 2.04 லட்சம் கோடியாக இருக்கும் எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையின் அளவு 17,490 கோடி ரூபாயாக இருக்கும்.

ஏழைகளுக்கு வீடு
தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என 2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஜிஎஸ்டியால் பாதிப்பு
மத்திய அரசு நாட்டின் மறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றி ஜிஎஸ்டியை அமலாக்கம் செய்த காரணத்தால் தமிழகப் பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் கூறினார்.
மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் இனி வரும் காலத்தில் அதிகரிக்கும் எனக் கணிப்பதாகவும் கூறினார்.

சத்துணவுத் திட்டம்
தமிழ்நாட்டில் கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்திய சத்துணவுத் திட்டத்துக்குச் சமூக நலத்துறை வாயிலாக ரூ. 5,611.62 கோடி ரூபாய் அளவிலான நிதியை 2018-19ஆம் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி
இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கீட்டை கொண்டுள்ள தமிழ்நாடு 2018-19ஆம் நிதியாண்டில் 9 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் எனப் பட்ஜெட்டில் அறிக்கை தாக்கலில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மத்திய அரசு
2018-19ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வரையில் உயரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ஆனால் உலக வங்கியோ 7.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டு வளர்ச்சி கணிப்புகளை விடவும் குறைவான அளவாகும்.

8000 கோடி பயிர்க்கடன்
2018-19ஆம் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்குச் சுமார் ரூ. 8000 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடன் வழங்கப்படும் எனத் தமிழகப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மானியத்துக்கு ரூ6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ. 70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளது.

இலவச வேட்டி சேலை திட்டம்
பண்டிகை காலங்களில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 490.45 ரூபாய் கோடி திட்டமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லேப்டாப்பிற்கு 758 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

3,000 புதிய பஸ்கள்
2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். மேலும் 4000 பழைய பேருந்துகளையும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள்
முதன்மை சுகாதார மையங்கள் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சானிட்டரி நாப்கின் திட்டத்திற்கு ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

திறன் மேம்பாடு
2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு இயக்கத்துக்குச் சுமார் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் பாதிப்பு
நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18இல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது என நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி
தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் தமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.

உழவன் செயலி
2018-2019 நிதி ஆண்டிற்கான தமிழ் நாடு நிதி நிலை அறிக்கையினை வாசித்து வரும் நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாடு
இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்தும் கார்ப்ரேட் நிறுவனங்களை அழைத்து முதலீடுகளைப் பெறும் உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு உலக முதலீட்டாலர் மாநாட்டினை நடத்தி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன.

நெடுஞ்சாலை திட்டம்
2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் 54 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ மாவட்ட சாலைகள் ரூ. 80 கோடி செலவில் அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.