சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த சூப்பர் ஹீரோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

21ஆம் நூற்றாண்டின் உலகில் செல்வாக்கு மிக்க மனிதர்களுள் ஒருவராக மார்க் ஜூக்கர்பெர்க் திகழ்கிறார். இவர்தான் முகநூல் - Facebook - என்னும் சமூக வலைதள ஊடகத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என்பது கணிப்பொறியை மடியிலும் செல்போனைக் காதிலும் வைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.

ஹார்வேர்டு பல்கலைக் கழகக் கல்லூரியில் படிப்பைப் பாதியில் நிறுத்திய இவர், தன்னுடைய 19ஆவது வயதில் முகநூல் என்னும் சமூகவலைதளத்தைத் தொடங்கினார். இன்று, இந்த பூமிப்பந்தில், இந்நிறுவனத்தின் வெற்றிக் கொடி இவருடைய பெயரைச் சொல்லிப் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக பேஸ்புக் மற்றம் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தகவல் திருட்டு மார்க் ஜூக்கர்பெர்க் மீதான மதிப்பை பதம் பார்த்துள்ளது.

 

இருப்பினும் இந்தப் பெரும் கோடீஸ்வர இளைஞரைப் பற்றிய தகவல்கள் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன.

தந்தைக்காக 12 வயதில் உருவாக்கிய மென்பொருள்

இவர் தன்னுடைய 12ஆவது வயதில் ஜீக்நெட் (Zucknet) என்னும் குறுந்தகவல் மென்பொருளை உருவாக்கினார். இது இவருடைய தந்தைக்காக உருவாக்கப்பட்டது. இவருடைய தந்தை ஒரு பல் மருத்துவர். நோயாளிகள் யாராவது இவருடைய கிளினிக்கில் காத்திருந்தால் அது பற்றிய தகவலைத் தெரிவிப்பதற்காக இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டது.

முடக்கப்பட்ட இணையதளம் ஏலத்திற்கு வந்த கதை

ஹார்வேர்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, ‘FaceMash' என்னும் பெயரில் ஒரு இணையதளத்தை உருவாக்கினார். இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவோர், ஹார்வேர்டு கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுள் வசீகரமான தோற்றத்தில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதற்காக விடுதியில் தங்கிப் படிப்பவர்களின் புகைப்படங்கள் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அவர்களுடைய தனிப்பட்ட உரிமைகளையும் மீறும் வகையிலும் இருப்பதாகக் கூறிக் கல்லூரி நிர்வாகம் இந்த இணைதளத்தின் செயல்பாட்டை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த இணையதளத்தை இணையம் வழி ஏலத்தின் மூலம் 30,201 டாலருக்கு மார்க் ஜூக்கர்பெர்க் விற்றுவிட்டார்.

பார்வைக் குறைபாடு
 

பார்வைக் குறைபாடு

மார்க் ஜூக்கர்பெர்க் சிவப்பு மற்றும் பச்சை நிறப் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இவருக்குப் பிடித்த நிறம் நீலம்.

ஃபேஸ்புக்கின் தொடக்கம்

மார்க் ஜூக்கர்பெர்க் 2004 ஆம் ஆண்டு ஹார்வேர்டு கல்லூரி விடுதியில் உள்ள மாணவர்களை இணையம் வழி இணைப்பதற்காக ‘thefacebook.com' என்னும் நெட்வொர்க்கை நிறுவினார்.

ஃபேஸ்புக்கும் கேஸ்புக்கும் (Casebook on Face book)

முகநூல் நிறுவனம் தொடர்பாக பல வழக்குகளை மார்க் ஜூக்கர்பெர்க் சந்திக்க வேண்டியிருந்தது. அதில் மிக நீண்ட சட்டப் போராட்டமாக அமைந்தது, கேமரூன் மற்றும் டெய்லர் வின்க்லோவ்ஸ் என்னும் இரட்டைச் சகோதரா்களுக்கு எதிரான வழக்கு ஆகும்.

இவர்கள் இருவரும், தங்களுடைய ஐடியாவைத் திருடித்தான் மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக் நிறுனவத்தைத் தொடங்கினார் என்று குற்றம் சாட்டினர். இருப்பினும் 2009 ஆம் ஆண்டு 60 மில்லியனுக்கும் மேலான டாலர்களைப் பெற்றுக்கொண்டு இவர்கள் இருவரும் வழக்கினைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

தேடிவந்த வாய்ப்புகளும் நாடிச் சென்ற ஹார்வேர்டும்

மார்க் ஜூக்கர்பெர்க் பள்ளிக் கூடத்தில் படிக்கும் பொழுது ‘Synapse Media Player' என்னும் செயலியை உருவாக்கினார். இச்செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் திறன், பயன்பாட்டாளர்களின் இசையை விரும்பிக் கேட்கும் பழக்கத்தை ஆராயும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மற்றும் அமெரிக்கா ஆன் லைன் நிறுவனம் ஆகியவை இந்தச் செயலியை வாங்கவும் மார்க் ஜூக்கர்பெர்க்கை தங்களுடைய நிறுவனத்தில் பணியமர்த்தவும் வலைவிரித்தன. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களின் ஆஃபர்களையும் புறக்கணித்த மார்க் ஜூக்கர்பெர்க் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார்.

நீண்ட நாள் காதலியும் சீன மொழியும்

மார்க் ஜூக்கர்பெர்க் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பிரிஸில்லா ஷான் என்பவைரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் குழந்தைகள் நல மருத்துவர். ஒரு விழாவில் சந்தித்துக் கொண்ட இவர்கள் இருவரும் 2003 ஆம் ஆண்டிலிருந்து காதலிக்கத் தொடங்கினர். பிரிஸில்லா ஷானின் பெற்றோர் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மனைவியின் குடும்பத்தினருடன் பழகுவதற்காகவே சீனமொழியைக் கற்றுக் கொண்டார் மார்க் ஜூக்கர்பெர்க்.

சின்ன வயது … பெரிய மனது …

சமூகச் சேவையில் மிகுந்த அக்கரையுள்ளவர் மார்க் ஜூக்கர்பெர்க். அதனால்தான் 2010 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் மற்றும் வாரன் பப்பட்டுடன் இணைந்து ‘Giving Pledge' என்னும் சமூகசேவை உறுதி மொழித்திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த உறுதி மொழியின்படி, ஒரு மனிதர் தன்னுடைய சொத்தின் பெரும்பகுதியை சமூகத்தின் நலத்திற்காகத் தானம் செய்ய வேண்டும்.

பிறந்த குழந்தையும்.. உயிலாய் அமைந்த கடிதமும்..

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதை அதிகாரப்பூா்வமாக அறிவித்தனர். இந்த அறிவிப்பைத் தெடர்ந்து அவர்கள் தங்களுடைய செல்ல மகளுக்கு ஒரு கடிதத்ததையும் எழுதி வைத்தனர். தாங்கள் உயிருடன் இருக்கும் பொழுதே, ஃபேஸ்புக் நிறுவனத்தின் 99 சதவிகிதப் பங்குகளை சமூகநல அறக்கட்டளைக்கு வழங்குவதாகவும், அதன் மூலமாக இந்த பூமியை சிறப்பாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்ற உதவப் போவதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தனர். 2015, டிசம்பர் 1 ஆம் நாளைய மதிப்பீட்டின்படி ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 45 பில்லியன் டாலர்களாகும்.

இணையதள நாயகனும் காவிய வரிகளும்

இத்தாலியைச் சேர்ந்த வெர்ஜில் என்பவர், கி.மு. 29ஆம் நூற்றாண்டுக்கும் கி்.மு. 19ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதிய "The Aeneid' என்னும் கவிதை வடிவில் அமைந்த காவியம்தான் முகநூலின் நாயகன் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு மிகவும் பிடித்தமான நூல். இக்காவியத்தில் இடம் பெற்றிருந்த "துணிச்சல் மிக்கவரைத் தேடித்தான் செல்வச்செழிப்புச் சேரும்" (Fortune favors the bold) என்னும் வரிகள் இவருக்குப் பிடித்தமான வரிகளுள் ஒன்று.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்தல்

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2008 ஆம் ஆண்டு முதல் மார்க் ஜூக்கர்பெர்க் இடம்பிடிக்கத் தொடங்கினார். பட்டியலில் 23 ஆம் இடம்பிடித்த இவர், உலகம் இதுவரை கண்ட, சொந்த உழைப்பில் உயர்ந்த பெருங் கோடீஸ்வரர்களில் மிகவும் இளமையானவர் என்னும் பெருமையைப் பெற்றார்.

உயர்ந்து கொண்டேயிருக்கும் சொத்து மதிப்பு

2011 ஆம் ஆண்டில் இவருடைய சொத்து மதிப்பு, 17.5 பில்லியன் டாலராக இருந்தது. அந்த ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்களுள் முதல் 20 இடங்களுக்குள் மார்க் ஜூக்கர்பெர்க்கும் இடம் பிடித்திருந்தார். 2017 ஆம் ஆண்டில், 56 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 5 ஆம் இடம் பிடித்திருந்தார்.

முயற்சித்துப் பாருங்கள்

முகநூல் தளத்தில் உள்ள கமென்ட் பாக்ஸில் @[4:0] என்று பதிவிட்டால் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பெயா் தானகத் தோன்றும். முயற்சித்துப் பாருங்கள் !

காதல் மனைவிக்காக வடிவமைத்த கணையாழி

பெரும் செல்வச் செழிப்புமிக்க நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான இவர், தன்னுடைய மனைவிக்குப் பரிசளிக்க மணநாள் மோதிரத்தை தானே வடிவமைத்தார். நடுவில் சிவப்பு நிற மாணிக்கக் கல்லும் இரு புறமும் வெண்மையாய்ப் பளிச்சென ஜொலிக்கும் வைரக் கற்களும் கொண்ட இம்மோதிரத்தின் மதிப்பு வெறும் 25,000 டாலர் மட்டுமே.

முயன்றாலும் முடியாது

ஃபேஸ்புக் தளத்தில் ஜூக்கர்பெர்க்கை பிளாக் (block) பண்ண முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

செல்லமாய் வளரும் செல்வப் பிராணி

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ‘Sheep Dog' என்னும் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டிதான் இவருடைய செல்லப் பிராணி. இல்லை! இல்லை! செல்வப் பிராணி. ஆம், இதற்கென்று தனியாக உருவாக்கப்பட்ட முகநூல் பக்கத்தில் 2.6 மில்லியன் லைக்குகளை அள்ளியுள்ளது இச்செல்ல விலங்கு. இதனுடைய பெயர் ‘Beast'.

சிலிகான் வேலிக்கு 910 மில்லியன் டாலர் தானம்

2013 ஆம் ஆண்டில் ஜூக்கர்பெர்க்கும் இவருடைய மனைவியும் ஃபேஸ்புக் நிறுவனத்தில் உள்ள தங்களுடைய 18 மில்லியன் பங்குகளை சிலிக்கான் வேலி சமூக நல அறக்கட்டளைக்கு வழங்கினார்கள். அதனுடைய மதிப்பு, 970 மில்லியன் டாலருக்கும் மேலிருக்கும்.

ஜூக்கர்பெர்க்கை கவர்ந்திழுக்கும் இசைப் புயல்கள்

இவருடைய அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த தகவலின்படி, இவருக்குப் பிடித்த இசையமைப்பாளர்களாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரட்டை இசையமைப்பாளர்களான, Draft Punk மற்றும் பெண் இசையமைப்பாளர்களான, அமெரிக்காவைச் சேர்ந்த Lady Gaga, Beyonce, வட அமெரிக்காவின் பார்போடா என்னும் தீவினைச் சேர்ந்த Rihanna, கொலம்பியாவைச் சேர்ந்த Shakira ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ரிங்டோனாய் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு வாசகம்

"ஒரு வேலையை எவ்வளவு இயல்பாகவும் எளிமையாகவும் செய்ய முடியுமோ அவ்வளவு எளிதாகச் செய்யுங்கள் ஆனால் நாம் செய்கின்ற வேலை எளிமையானதாக இருக்கக்கூடாது" என்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்ன ஒரு வாசகம், ஜூக்கர்பெர்க்குக்கு திருவாசகமாய் தெரிகிறது.

கூகுள் இவரைத் தேடுகிறது.. பின்தொடர..

2011 ஆம் ஆண்டில், கூகுள் சமூக வலைதளத்தில், பயனாளர்களால் அதிகமாகப் பின்தொடரும் நபராக ஜூக்கர்பெர்க் திகழ்ந்தார். 2017 ஆம் ஆண்டு, மே மாதத் தரவுகளின்படி, கூகுள் தளத்தை நிறுவிய லாரி பேஜ் மற்றும் செர்ஜரி பிரின் ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளி அதிகமான பயனாளர்களால் பின்தொடரும் நபராக மார்க் ஜூக்கர்பெர்க் விளங்குகிறார்.

டுவிட்டரிலும் இருக்கிறார் எப்போதாவது டுவிட்டுகிறார்

2009, பிப்ரவரி முதல் டுவிட்டர் சமூக வலைதளத்திலும் கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கியுள்ளார். இத்தளத்தில், இவரை 4,31,000 நபர்கள் பின்தொடர்கிறார்கள். இவர், இத்தளத்திலிருந்து 815 நபர்களைப் பின்தொடர்கிறார். இதுவரை இவர் 19 முறை மட்டுமே டுவிட்டரில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவுக்கு உதவி

2014ஆம் ஆண்டு, மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புக்கு உதவும் வகையில், அங்கு செயல்பட்டு வந்த நோய்க் கட்டுப்பாட்டு மையத்திற்கு 25 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கினார் மார்க் ஜூக்கர்பெர்க்.

மாதம் ஒரு டாலர் போதும் ……

2013 ஆம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றுவதற்கான ஊதியமாக மாதம் ஒரு டாலர் மட்டுமே பெற்றுக் கொள்கிறார். இந்நிறுவனத்தில் மிக மிகக் குறைவாக சம்பளம் பெறுபவர் இவர் ஒருவர் மட்டுமே.

2010 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்

2010 ஆம் ஆண்டு டைம் பத்திரிக்கையால் அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்டைலுக்கு நேரமில்லை

பெரும்பாலும் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டி சர்ட் அணிந்து வலம் வருகிறார் மார்க் ஜூக்கர்பெர்க். நியூயார்க் நகரிலிருந்து வெளிவரும் GQ என்னும் சர்வதேச மாத இதழ் இவரை, 2011 ஆம் ஆண்டு, சிலிகான் பள்ளத்தாக்கில் மிக மோசமாக ஆடை அணியும் நபராக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் சக்தி வாய்ந்த நபர்களுள் ஒருவர்

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த ஃபோர்ப்ஸ் இதழ் இவரை, உலகின் சக்தி மிக்க நபர்களுள் பத்தாவது நபராகத் தேர்ந்தெடுத்திருந்தது.

இன்னும் இருக்கு வரலாறு..

என்ன.. மார்க் ஜூக்கர்பெர்க்கைப் பற்றிய தகவல்கள் போதுமா? பிட்டு பிட்டாய் இவரைப் பற்றிச் சொன்னதெல்லாம் கொஞ்சம்தான். இவர் வருகின்ற மே 14 ஆம் தேதிதான் 35 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறார். மெகா பைட், ஜிகாபைட்டைத் தாண்டி வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிக்க இவருக்கு இன்னும் வாலிபம் இருக்கு.. வயதும் இருக்கு. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை உயர்த்திய சமூகத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்யவேண்டும் என்கின்ற வானத்தைப் போன்ற மனசும் இருக்கு. அப்புறம் என்ன? காத்திருப்போம் வரலாற்றை வாசிப்பதற்கு!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Super hero who left shocking the silicon valley

Super hero who left shocking the silicon valley
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more