கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் கேரள முதலமைச்சரின் துயர நிவாரண நிதியில் செலுத்தும் தொண்டு நிறுவனங்களின் நன்கொடைகளுக்கு 50 சதவிகித வருமான வரி தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியோரிடமிருந்து பெறும் பங்களிப்புக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியை வங்கிகளில் நேரடியாகச் செலுத்தலாம் என்றும், pmnrf@gov.in மூலமும் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வருமான வரி விலக்கு
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் வரி விலக்கு வழங்கப்படும் என்றும், வருமான வரிச்சட்டம் 80 ஜி பிரிவின்படி 50 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரள முதலமைச்சரின் துயர நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்கொடை தடையில்லை
சட்டம் மற்றும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றும்போது வெளிநாட்டில் உள்ள தனியார்கள் நன்கொடை அளிக்கத் தடையில்லை. அதேநேரம் இந்தியாவில் நிகழும் இயற்கைப் பேரழிவுகளுக்கு அயல்நாட்டு அரசாங்கங்கள் வழங்கிம நன்கொடைகளை அரசு ஏற்காது.

நிபந்தனைகள்
வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்யலாம். FCRA-வில் பதிவு செய்த அரசு சாரா நிறுவனங்களுக்கும் தடையேதும் கிடையாது

மத்திய அரசு மறுப்பு
உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குக் கேரள அரசு 2,000 கோடி ரூபாய் நிவாரண உதவிக் கோரியது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு அளித்த 700 கோடி ரூபாயை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.

309 கோடி உதவி
வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு நேற்று ரூ .600 கோடி ரூபாயை விடுவித்தது.ஆன்லைன் மற்றும் வைப்புத்தொகை மூலம் 309 கோடி ரூபாய் வரை நன்கொடை கிடைத்துள்ளது.

இழப்பு
கேரள வெள்ளத்தில் 231 பேர் உயிரிழந்துள்ளதோடு,32 பேர் மாயமாகி விட்டதாகப் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.3879 முகாம்களில் 14.50 லட்சம் மக்கள் தங்கியுள்ளனர்.