இந்தியாவில் ஒரு கார் புரட்சி என பேசப்பட்ட டாடா நானோவை ஏப்ரல் 2020 உடன் நிறுத்த டாடா குழுமம் முடிவு செய்திருக்கிறது. இது இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் கனவு திட்டம்.

பாரத் ஸ்டேஜ் 6
வரும் ஏப்ரல் 01, 2020-ல் இருந்து பாரத் ஸ்டேஜ் 6 உள்ள வாகனங்கள் மட்டுமே அரசு பதிவு செய்யும். மற்ற வாகனங்களை பதிவு செய்யாது. பாரத் ஸ்டேஜ் 6 விதிகளுக்கு உட்பட்டு, நானோ கார் இன்ஜின்களில் மாற்றம் செய்து, மீண்டும் சந்தைக்கு கொண்டு வர வேண்டும்.

தயார் இல்லை
நானோ காரில் முதலீடு செய்வதற்கு பதிலாக, நானோ ரக கார்களின் உற்பத்தியையே நிறுத்திவிடலாம் என டாடா குழுமம் முடிவு செய்திருப்பதாக டாடா கார் தயாரிப்பு பிரிவின் தலைவர் மயங்க் பரீக் செய்தியாளரிடம் கூறினார்.. ரத்தன் டாடாவின் கனவு நானோ கார்கள் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

அறிமுகம்
2009-ம் ஆண்டில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. அப் போது இது ரூ. 1 லட்சத்துக்கு விற்கப் படும் என அறிவிக்கப்பட்டது. மலிவு விலைக் கார், ஏழைகளின் கார் என எல்லாம் விளம்பரங்களுடன் நன்றாகவே களம் இறங்கியது. ஆனால் கல்லா கட்டவில்லை. அதோடு மக்களுக்கும் நானோ ரக கார்கள் மீது அதிக விருப்பம் இல்லை. சொல்லப் போனால் நானோ வியாபாரமும் தொடர்ந்து குறைந்து வருகிறதாம்.

இன்னும் சில கார்கள்
இன்னும் டாடா குழுமத்தில் உள்ள 5 -6 ரக கார்கள் இந்த பாரத் ஸ்டேஜ் 6 சோதனைக்கு உட்பட வேண்டி இருக்கிறது. நானோ ரகத்தை மட்டும் தான் டாடா கைவிட இருக்கிறார்களாம். மற்ற கார்களை பாரத் ஸ்டேஜ் 6-க்கு தகுந்தாற் போல வடிவமைத்து அனுமதி பெற்ரு ஏப்ரல் 01, 2020-க்குப் பிறகும் விற்க இருக்கிறார்களாம்.

டாடா குழுமம்
ஒட்டு மொத்தத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பாக வளர்ந்திருக்கிறதாம். இந்திய ஆட்டோமொபைல் சந்தை 4.4 வளர்ந்திருந்த போதிலும் டாடாவின் விற்பனை 22.4 சதவிகிதமாக உயர்ந்து நிற்கிறதாம். 2021 - 2022 காலங்களில் இன்னும் நிறைய புது ரக கார்களை சந்தைக்கு கொண்டு வர இருக்கிறார்களாம். சமீபத்தில் கூட டாடா ஹரியர் (TATA Harrier) ரக காரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்களாம்.