அமெரிக்கா: கைல் ஜென்னர் (kylie jenner) அதிகாரபூர்வமாக உலகின் இளம் வயது பில்லியனர் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் நேற்று (மார்ச் 05, 2019) அறிவித்திருக்கிறது. அட்டைப் படத்திலும் போட்டு கெளரவித்திருக்கிறார்களாம்.
2008-ம் ஆண்டு நம் ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஸுக்கர்பெக், தன் 23-வது வயதில் இதே ஃபோர்ஸ் நிறுவனத்தால் இளம் வயது பில்லியனராக அறிவிக்கப்பட்டார்.
மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு முன் பிரபல நம்பர் 1 பணக்காரர் பில் கேட்ஸ் தான் உலகின் இளவயது பில்லியனர். தன் 31-வது வயதில் பில் கேட்ஸின் சொத்து பத்துக்கள் எல்லாம் சேர்த்து ஒரு பில்லியனுக்கு மேல் போனதால் இளம் வயது பில்லியனராக பட்டியலிடப்பட்டார்.

எப்படி
ஃபோர்ப்ஸ் நிறுவனம் நம் கைல் ஜென்னரின் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பீடு மட்டுமே 900 மில்லியன் டாலருக்கு மேல் போய் இருக்கிறதாம். பாக்கி உள்ள உதிரி சொத்துக்களை எல்லாம் சேர்த்து தான் நம் கைல் ஜென்னர் உலகின் இளம் வயது பில்லியனராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறாராம்.

மற்ற வருமானங்கள்
கைல் ஜென்னருக்கு காஸ்மெட்டிக்ஸில் இருந்து வரும் வருமானங்கள் போக அவரின் அதிகாரபூர்வமான அப்ளிகேஷன்களில் இருந்து வரும் வருமானம், கைல் ஷாப்களில் இருந்து வரும் வருமானம், சகோதரி கெண்டில் ஜென்னரின் பொடிக்குகளில் (Botique) இருந்து வரும் வருமானம், புத்தகம், டிவி, விளம்பரங்கள் போன்றவைகளில் இருந்து எல்லாம் வருமானம் வந்து கொண்டிருக்கிறதாம்.

விற்பனை சாதனைகள்
ஏதோ இந்த சின்ன பெண் அழகாக இருக்கிறாள் அதனால் வியாபாரம் போய் கொண்டிருக்கிறது, ஒருநாள் அவளே விழுந்து விடுவாள் என நினைப்பவர்களாக இருந்தால் மேற்கொண்டு படியுங்கள். கைல் காஸ்மெட்டிக்ஸ் தொடங்கிய சில நாட்களிலேயே, நம் கைல் தாயி ஆசையாக வடிவமைத்த லிப்ஸ்டிக் கிட் (Liquid Lipstick & matching lip pencil) ஒரு நிமிடத்தில் மொத்தமாக விற்றுத் தீர்ந்தது. அதன் தரம் மற்றும் வாடிக்கையாளர்களை அழகாகக் காட்டுவதில் இருந்த நேர்த்திக்கு விடை கிடைத்தது. கடந்த 18 மாதங்களில் இந்த ஒரு லிப்ஸ்டிக் கிட்டில் இருந்து மட்டும் சுமார் 420 மில்லியன் டாலர் கல்லா கட்டி இருக்கிறாள் குட்டிச் செல்லம் கைல் ஜென்னர். ஒரு பொருளை ஒரு முறை ஏமாந்து வாங்கலாம் அதே பொருளை 420 மில்லியன் டாலருக்கு 18 மாதங்கள் தொடர்ந்து வாங்குவார்களா என்ன..?

ஒரு நாளில்
கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் தரத்துக்கு இன்னொரு உதாரணம். 2016-ம் ஆண்டில் ஹாலிடே கலெக்ஷன் என்கிற பெயரில் ஒரு மேக் அப் கிட்டை வெளியிட ஒரே நாளில் 19 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது. அவ்வளவு ஏன் நம் கைல் குட்டி, கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தை தொடங்கும் போது வெளியிட்ட மேக் அப் கிட் கூட 14.4 மில்லியன் டாலர் வரை விற்பனை ஆகி திக்குமுக்காடச் செய்ததாம்.

புரளிகள்
அமெரிக்காவில் கூட "என்னய்யா ஒரு சின்ன பொன்ன சொல்ற பொருள் எல்லாம் மில்லியன் கணக்குல வித்துருச்சுன்னு நம்பவா முடியுது..? என்ன கதை விடுறீங்களா" என பல நெட்டிசன்கள் கொந்தளித்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு புதிய மேக் அப் சாதனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, போதுமான எண்ணிக்கையில் தங்கள் சில்லறை வணிகர்களிடம் அந்தப் புதிய பொருட்களைக் கொண்டு போய் சேர்த்துவிட்டு தான் புதிய பொருட்கள் விற்பனை குறித்து பேசுகிறாராம். ஆக இந்த புரளிகளை எல்லாம் புறந்தள்ளச் சொல்கிறார்கள் அமெரிக்க பத்திரிகைகள்.

மார்க்கெட்டிங்
நம் கைல் குட்டியைச் சுமாராக 125 மில்லியன் பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கிறார்கள். லட்டுக் குட்டி ஒரு கலரில் லிப்ஸ்டிக்கை தடவிக் கொண்டு எப்படி இருக்கு என வாயை கொஞ்சம் ஒருக்களித்துச் சொல்லும் போதே பல இளசுகள் மயங்கி விடுகிறார்கள். அடுத்து என்ன எங்கு கிடைக்கும் என்கிற அட்ரஸையும் உடனே கீழே பதிவிட்டு விற்பனையைத் தொடங்குகிறார் கைல் ஜென்னர். "நான் ஒன்றை சொல்வதற்கு முன்பே அது என் ரசிகர்களைச் சென்று சேர்ந்து விடுகிறது. இது தான் சமூக வளைதளத்தின் பலம்" என ஃபோர்ப்ஸ் பேட்டியில் கூடச் சொல்லி இருக்கிறார் கைல் ஜென்னர்.

விற்பனை கூடுதல்
சமீபத்தில் கைல் ஜென்னரின் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் அல்டா லாஸ்ட் சம்மர் என்கிற நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி அல்டா லாஸ்ட் சம்மர் நிறுவனமும் கைல் ஜென்னரின் காஸ்மெட்டிக் பொருட்களை விற்கத் தொடங்க விற்பனை எதிர்பார்த்ததை விட பயங்கரமாக சூடுபிடித்துவிட்டது.

மதிப்பீடு உயர்வு
அல்டா லாஸ்ட் நிறுவன ஒப்பந்தத்தின் படி விற்பனை செய்யத் தொடங்கிய ஆறு வாரத்திலேயே 54.5 மில்லியன் டாலர் அளவுக்கு கைல் காஸ்மெட்டிக்ஸின் பொருட்களை விற்றுத் தீர்த்துவிட்டார்கள். அதனால் தான் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பீடும் அதிகரித்திருக்கிறது என ஃபோர்ப்ஸ் ஆச்சர்யத்தோடு தெரிவித்திருக்கிறது. இப்படி கைல் ஜென்னரைப் பார்த்து சொக்கிப் போனவர்கள், அவளைப் போல நானும் அழகாவேன் என மேக் அப் கிட் வாங்குபவர்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கைலின் வெற்றியை எதிர்ப்பவர்களும் உண்டு.

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
"Youngest self made billionaire - kylie jenner" என்று தான் ஃபோர்ஸ் விளம்பரப் படுத்துகிறது. ஆனால் நம் கைல் ஜென்னர் வளமான கிம் கர்தாஷியன் குடும்பத்தில் பிறந்தவர் இவரை எப்படி நீங்கள் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர் எனச் சொல்வீர்கள். என தாளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

கணக்கு சொல்லு
ஃபோர்ப்ஸ் நிறுவனம் எப்படி கைல் ஜென்னரின் சொத்துக்களைக் கணக்கிடுகிறது, சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர்கள் என்பதன் விளக்கம் அல்லது வரையறை என்ன என ஃபோர்ப்ஸ் நிறுவனத்தை டேக் செய்து சமூக வலைதளங்களில் ஒரு ஓரத்தில் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் ஃபோர்ப்ஸ் நிறுவனமும் தன்னால் முடிந்த வரை விளக்கிக் கொண்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்
என்ன இருந்தாலும் ஒரு 21 வயது இளைஞர் உலகின் பில்லியனர்களில் இடம் பிடித்தது கொண்டாடப் பட வேண்டியது. அதுவும் ஒரு பெண் உலகின் பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்கை முந்திக் கொண்டு இடம் பிடித்தது இன்னும் ஆச்சர்யமாகவும், வரவேற்கத் தக்கதாகவுமே இருக்கிறது. வாழ்த்துக்கள் கைல் ஜென்னர்.