டெல்லி: கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான இபிஃஎப் வட்டி விகிதம் 8.65 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருந்துது. நடைபெறும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாதச் சம்பளதாரர்களை குஷிப்படுத்துவதற்காகவே வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல் 2017-18ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 8.55 சதவிகித வட்டி விகிதமே கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகக்குறைவான வட்டி விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.11 லட்சம் கோடி
தொழிலாளர் சேமநல நிதித்திட்டம் எனப்படும் இபிஎஃப்ஒ அமைப்பில் சுமார் 6 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். மாதச் சம்பளம் வாங்குவோரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் இபிஎஃப் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி அளிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. தற்போதைய கணக்கின்படி இபிஎஃப்ஒ அமைப்பில் உள்ள ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள தொகை சுமார் 11 லட்சம் கோடி ரூபாயாகும்.

1989 முதல் 2000ஆம் ஆண்டு வரை 12 சதவிகிதம்
இபிஎஃப் சந்தாதாரர்களின் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது ஆண்டு தோறும் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் உள்ள நிதிச்சூழல் மற்றும் அரசியல் சூழ்நிலையைப் பொருத்து வட்டி விகிதம் அடிக்கடி மாறும். இபிஎஃப் அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து அதிகபட்ச வட்டிவிகிதமானது கடந்த 1989-90ஆம் ஆண்டு முதல் 1999-2000ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் 12 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.

1954-55ஆம் ஆண்டில் 3 சதவிகிதம்
குறைந்த பட்ச வட்டி விகிதமாக இப்எஃப் அமைப்பு தொடங்கப்பட்ட புதிதில் 1952-53 முதல் 1954-55ஆம் ஆண்டுகளில் மட்டுமே 3 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்தது. இபிஎஃப்ஒ அமைப்பில் இதுவரையிலும் கோரப்படாமல் உள்ள பணமே கோடிக்கணக்கில் உள்ளது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பங்குச்சந்தையில் முதலீடா
தங்களின் இபிஎஃப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குமாறு தொழிற்சங்கங்களும் அடிக்கடி கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால் இபிஎஃப்ஒ அமைப்பு அதை காதில் வாங்கிக்கொள்வதும் இல்லை. ஆனால், இபிஎஃப் அமைப்பில் உபரியாக உள்ள பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் ஏற்பாடுகள் நடந்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி 8.65 சதவிகிதம்
கடந்த பிப்ரவரி மாதத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் காங்வார் தலைமையிலான அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதியமைச்சக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தல் எதிரொலி
மத்திய நிதியமைச்சகமும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இபிஎஃப் சந்தாதாரர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்து ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச வட்டி விகிதமாகும். ஆனால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் லோக்சபா தேர்தலை ஒட்டியே இந்த வட்டி விகித உயர்வு என்று எதிர்கட்சிகள் முனுமுனுப்பதாக தெரிகிறது.

வந்ததை வரவில் வைப்போம்
மத்திய நிதியமைச்சகத்தின் வட்டி உயர்வு குறித்து வருமான வரித்துறையும் மத்திய தொழிலாளர் நலத்துறையும் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகித அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், இபிஎஃப்ஒ அமைப்பும் நாடு முழுவதும் உள்ள இபிஎஃஒ கிளை அலுவலகங்களுக்கும் வட்டி விகித உயர்வு பற்றி தெரிவித்து இபிஎஃப்ஒ சந்தாதாரர்களின் கணக்கில் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டித் தொகையை வரவு வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

உபரியாக உள்ள தொகை ரூ.151.67 கோடியாம்
புதிதாக இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதப்படியே செட்டில்மென்ட் செய்யப்படும். கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகக்குறைவான வட்டி விகிதமாகும். தற்போது அறிவித்துள்ள 8.65 சதவிகித வட்டி அளித்தது போக, இபிஎஃஒ அமைப்பில் உபரியாக மட்டுமே ரூ.151.67 கோடி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.