டெல்லி: ஒரு பில்டர், ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தைத் தொடங்குகிறார். அந்த திட்டத்தில் இணைபவர்கள் அனைவரிடமும் வீட்டின் திட்டம் மற்றும் வசதிகளைச் சொல்லி ஒவ்வொரு வீடாக விற்கிறார்.
அப்படி வீட்டை முன் கூட்டியே விற்று வந்த பணத்தில் தான் ரியல் எஸ்டேட் திட்டத்தை நிறைவு செய்து வீட்டைக் கட்டி முடிக்கிறார்கள். இது தான் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது.
ஆனால் சில ரியல் எஸ்டேட் திட்டங்களில் இப்படி வீட்டை முழுமையாக விற்று முடிப்பதற்கே சில பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன. எனவே முதலில் பணம் கொடுத்தவர்கள் ஆண்டுக்கணக்கில் வீட்டுக் காண பணத்தைக் கொடுத்துவிட்டு காத்திருக்க வேண்டி இருக்கிறது.
மோடிக்கு டாட்டா..! காளையா..? கரடியா..? போட்டுப் பார்க்கும் தேர்தல்..!

நீதிமன்றம்
இப்படி வீட்டுக்காக பணத்தைக் கொடுத்து விட்டு ஆண்டுக் கணக்கில் வாடிக்கையாளர்களை காக்க வைக்கக் கூடாது, காக்க வைக்கவும் முடியாது என கடுமையாக பில்டர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வந்தது நீதிமன்றங்கள். ஆனால் நீதிமன்றங்களோ மற்ற குறை தீர்ப்பு அமைப்புகளுக்கு அதற்கான காலத்தை நிர்ணயிக்கவில்லை. இப்போது தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், இந்த கால அவகாசத்தைப் பற்றி, ஒட்டு மொத்த இந்தியாவுக்கும், ஒரு தெளிவைக் கொடுத்திருக்கிறது.

புதிய தீர்ப்பு
இனி ரியல் எஸ்டேட் திட்டங்களைத் தொடங்கும் பில்டர்கள், தங்கள் திட்டத்தைக் காட்டி வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி, ஒரு வருடத்துக்குள் அவர்களுக்கான உரிய வீட்டைக் கொடுத்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால், வாடிக்கையாளர், தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கச் சொல்லி பில்டர்களிடம் கேட்கலாம் என ஒரு தீர்ப்பை சலாப் நிகம் வழக்குக்கு கொடுத்திருக்கிறது தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்.

வழக்கு உதாரணம்
சலாப் நிகம் என்பவர், டிசம்பர் 2012-ல், குருகிராமத்தில் Orris Infrastructure மற்றும் 3C company என்கிற பில்டர்கள் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு அபார்ட்மெண்டை புக் செய்கிறார். வீட்டின் விலை ஒரு கோடி ரூபாய். இந்த ஒரு கோடி ரூபாயை 10 இன்ஸ்டால்மெண்ட்களாக பணம் கொடுக்க சம்மதிக்கிறார். 2012-ல் இருந்து 36 மாதங்களில் வீடு கட்டி முடிக்கப்படும். ஒருவேளை தாமதித்தால் கூட அடுத்த 6 மாதங்களில் வீட்டைக் கொடுத்து விடுவோம். ஆக 2016-ம் ஆண்டுக்குள் எப்படியும் வீட்டைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை.

பணம் போச்சே
ஆனால் சலாப் நிகம், பில்டர்களிடம் சொன்ன படி 7 இன்ஸ்டால்மெண்ட்களில் 90 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டார். ஆனால் வீட்டை கட்டுவது போலவே தெரிய வில்லை. 2012-ல் அவர் வாங்குவதற்காகப் பார்க்கச் சென்ற போது எப்படி இருந்ததோ அதே போலத் தான் இப்போது வரை வீடு இருக்கிறது. எனவே நுகர்வோர்ர் நீதிமன்றத்தின் படியேறி வழக்கு தொடுத்திருக்கிறார்.

அபராதங்கள்
இவருடைய வழக்கை அடிப்படையாக வைத்து தான், மேலே சொன்ன தீர்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம். ஆனால் சலாப் நிகம் விஷயத்தில் மேலும் சில சுவாரஸ்ய அபராதங்களையும் விதித்திருக்கிறார்களாம்.

வீட்டைக் கொடு
சலாப் நிகத்தை இத்தனை நாள், பணம் வாங்கிக் கொண்டு, மனதளவில் துன்பப்படுத்திக் கொண்டிருந்த Orris Infrastructure and 3C company வரும் செப்டம்பர் 2019-க்குள் வீட்டை முழுமையாகக் கட்டி முடித்துக் கொடுக்க வேண்டும். அதோடு Occupancy certificate-கலையும் வாங்கி முறையாக சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு தான் அந்த வீட்டை சலாப் நிகத்துக்கு கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

தண்டனை
அதோடு சொன்ன நேரத்தில் 42 மாதங்களுக்குள் வீட்டைத் தராத Orris Infrastructure and 3C company, தாமதமான மாதங்களுக்கு, ஒரு மாதத்துக்கு 0.5 சதவிகிதம் என 90 லட்சம் ரூபாய்க்கு வட்டி கணக்கிட வேண்டும். அதாவது 90 லட்சம் ரூபாய்க்கு 0.5% என 39 மாதங்களுக்கு கணக்கிட்டு சுமார் 17.55 லட்சம் ரூபாயை வீட்டுடன் கொடுக்க வேண்டும் என கராறாகச் சொல்லி இருக்கிறது தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம். ஆக இப்போது சலாப் நிகத்துக்கு தன் 1 கோடி ரூபாய் வீடு + 17.55 லட்சம் ரூபாய் பணமும் கிடைக்கப் போகிறது.

அபராதம்
அப்படி ஒருவேளை சொன்ன படி செப்டம்பர் 2019-க்குள் வீட்டைக் கட்டி முடித்துக் கொடுக்கவில்லை என்றால், சலாப் நிகம் கொடுத்த பணத்துக்கு ஆண்டுக்கு 10% வட்டியுடன் (சலாப் நிகம் கொடுத்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு) திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் வெறித்தனமாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்.

மகிழ்ச்சி
இனி இந்த தீர்ப்பினால் ரியல் எஸ்டேட் பில்டர்கள் மக்களிடம் வாங்கிய பணத்துக்கு விரைவாக வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டி இருக்கும் அல்லது சலாப் நிகத்துக்கு கொடுப்பது போல வட்டியுடன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கும் என மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள் வீடு வாங்கப் போகும் சம்பள ஏழைகள்.