மாப்ள பட்ஜெட்ல ஏதாவது புது வரி (Tax) அறிவிப்பு வருமா? - அல்வா தராம இருந்தா சரிதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வரி (Tax) விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சமாகவே இருந்தாலும், ஐந்து லட்சம் ரூபாய் வரையான வருமானத்துக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

 

தற்போது தாக்கல் செய்யப்படவிருக்கும் முழு பட்ஜெட்டில் வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

மாப்ள பட்ஜெட்ல ஏதாவது புது வரி (Tax) அறிவிப்பு வருமா? - அல்வா தராம இருந்தா சரிதான்..!

ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டில் (Budget) தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களுக்கு வரி விலக்குகான உச்சவரம்பு மேலும் உயர்த்தப்படுமானால், தனி நபர் பிரிவில் வருமான வரி செலுத்தும் சுமார் 70 சதவிகித பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிச்சயமாக மோடி, மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்க்கும் நற்செய்தியை அறிவிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

அள்ளிக்கொடுக்கும் மாதச் சம்பளதாரர்கள்

மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் சுமார் 70 சதவிகிதம் தனிநபர் மற்றும் மாதச் சம்பளம் வாங்குவோர் செலுத்துவதன் மூலம் தான் கிடைக்கிறது. மீதம் உள்ள வரி வருவாய் தான் கார்பரேட் என்னும் பெரு நிறுவனங்கள் செலுத்தும் வரி வருவாயின் மூலமாக கிடைக்கிறது. ஒவ்வொது பட்ஜெட்(Budget) தாக்கல் செய்யப்படும் போதும் தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது வரி விலக்கு இருக்குமா இல்லையா என்பதுதான்.

யானைப் பசிக்கு சோளப்பொறிதான்

இப்படி ஒவ்வொரு பட்ஜெட்டின் (Budget) போதும் இலவு காத்த கிளியாக தனிநபர் மற்றும் மாதச் சம்பளம் வாங்கும் பிரிவினர் காத்திருக்கையில் யானைப் பசிக்கு சோளப்பொறியை காண்பிப்பது போல, பெயருக்கு வரி விலக்கு என்ற பெயரில் சின்னதொரு தொகையை வரி விலக்காக அறிவித்துவிட்டு, பெரு நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வாடிக்கையாகும்.

 

தொழில் வளர்ச்சிக்கு அவிங்க தான்

இதற்கு காரணம் கேட்டால் நிதியமைச்சர் என்னவோ, வருமான வரி செலுத்துவதில் வேண்டுமானால் உங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கலாம். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் (Budget) பெரு நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை அளிப்பதற்கு முக்கிய காரணம், அவர்களால் தான் நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிப்பதாகவும், வேலை வாய்ப்பு கூடியிருப்பதாகவும் மார் தட்டிக்கொள்கிறார்.

ஓட்டுக்கான தூண்டில்

ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் (Budget) தனி நபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் பிரிவினருக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 2.50 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிரடியாக உயர்த்தினார் நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல். இதற்கு காரணம் கேட்டால் எங்களுக்கு மாதச்சம்பளம் வாங்குவோரின் நலனும் முக்கியம் என்று தத்துவம் பேசினார். அதோடு அடுத்து தாக்கல் செய்யும் முழு பட்ஜெட்டில் இன்னும் கூடுதலாக வரி விலக்கு இருக்கும் என்றும் பெரிய ஐஸ் கட்டியை மாதச் சம்பளதாரர்களின் தலையில் வைத்தார்.

மீண்டும் மோடி ராஜ்ஜியம்

நிதியமைச்சர் வைத்த ஐஸ் கட்டி கரைவதற்கு முன்பாகவே தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களில் பெரும்பாலானவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே தங்கள் வாக்குகளை அள்ளி வழங்கி வெற்றி பெற வைத்துவிட்டனர். மீண்டும் மோடியே பிரதமராக வந்து உட்கார்ந்துவிட்டார். ஆனால், ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டில் (Budget) அறிவித்த வரி விலக்கு உச்சவரம்பு என்பது அமலுக்கு வருமா என்பது தான் பெரும்பாலான மாதச் சம்பளதாரர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மோடியின் இரண்டாவது இன்னிங்ஸில் நிதியமைச்சராக இந்த துறைக்கு முற்றிலும் புதியவரான முந்தைய மோடியின் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் அமர்த்தப்பட்டுள்ளார். புதிய நிதியமைச்சரும் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை(Budget) வரும் ஜூலை 5ஆம் தேதியன்று தாக்கல் செய்யவிருக்கிறார்.

அது என்ன பிரிவு 87A

புதிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் முழு பட்ஜெட்டில் (Budget), தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களுக்கான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு இருந்தாலும், அது சில வரையறைகளுக்கு உட்பட்டுதான் பிரிவு 87ஏ (87A) படியே வரி விலக்கு பெறவேண்டும் என்று அறிவித்துள்ளதால் பெரும்பாலான வருமான வரி தாக்கல் செய்வோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நம்ம நெனச்சது நடக்காது

இதனால், ரூ.5 லட்சத்திற்கு குறைவாக வருவாய் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது. அதனால் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கடும் சரிவை சந்திக்கும் என்பதால், ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் முழு பட்ஜெட்டில் வரி விலக்கு உச்சவரம்பை கண்டிப்பாக 5 லட்சமாக உயர்த்தி அறிவிக்காது என்றே பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

வரி ஆலோசகர்களின் யோசனை

இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, வரும் ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையையும் வரி வருவாயையும் கணிசமாக உயர்த்தவேண்டும் என்று திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கூடவே சில அதிமேதாவிகளான வரி ஆலோசகர்கள் மாதச் சம்பளதாரர்களின் கஷ்டங்களைப் பற்றி அறியாமல் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை அதிகரிப்பது எந்தவிதமான நல்ல பலனையும் தராது என்று மோடிக்கு ஆலோசனை தெரிவித்திருக்கின்றனர். எனவேதான் புதிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், வரும் பட்ஜெட்டில் (Budget) நிச்சயம் வரி விலக்குக்கான உச்சவரம்பை மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பது போல் உயர்த்தி அறிவிக்கமாட்டார் என்பது நிதர்சனமான உண்மை.

பொன் முட்டையிடும் வாத்து

இப்போதைக்கு அரசுக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் கற்பக விருட்சமாக, பொன் முட்டையிடும் வாத்தாக விளங்குவது மாதச்சம்பளதாரர்களும் தனிநபர் பிரிவில் வரி செலுத்துபவர்கள் மட்டுமே. எனவேதான் மோடி நிச்சயமாக பொன் முட்டையிடும் வாத்தை இழக்க விரும்பமாட்டார். எனவேதான் வரும் பட்ஜெட்டில் (Budget) வரி விலக்கு வரம்பை நிச்சயமாக உயர்த்தமாட்டார் என்று பெரும்பாலான வரி நிபுணர்கள் கணித்துச் சொல்கிறார்கள்.

இனிப்பான செய்தி இருக்காது

வரி நிபுணர்கள் இன்னொன்றையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, ஆண்டு வருவாய் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் உள்ளவர்களுக்கு பிடித்தம் செய்யும் 30 சதவிகித வரியை 20 சதவிகிதமாகவும், ரூ.15 லட்சத்திற்கும் கூடுதலான வருவாய் உள்ளவர்களுக்கு 30 சதவிகித வரி விதிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள். எனவேதான் வரும் பட்ஜெட்டில் நிச்சயமாக மாதச் சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி எதுவும் இருக்காது என்றே தெரிகிறது.

வரி சேமிப்பு சலுகைதான்

ஒன்று மட்டும் நிச்சயம். ஏற்கனவே வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சமாக உயர்த்தியதால் மத்திய அரசுக்கு எதிர்பார்த்த வருமான வரி வரவில்லை. இதையும் ஒரு நொண்டிச் சாக்காக வைத்துக்கொண்டு வரி விலக்கு உச்சவரம்பை பட்ஜெட்டில் உயர்த்தி அறிவிக்காது. அதே சமயத்தில் மாதச் சம்பளதாரர்களின் ஆத்ம திருப்திக்காக வேண்டுமானால், வரி சேமிப்பு (80C) பிரிவில் வேண்டுமானல் போனால் போகிறது என்று கொஞ்சமே கொஞ்சம் சலுகையை அளித்து மாதச் சம்பளதாரர்களின் வாயை அடைக்கலாம். இது மட்டுமே நிச்சயம் நடக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: Any Tax slabs or rates revision is possible for Individuals

In the interim budget for the fiscal year 2019-20, filed last February, the personal tax exemption ceiling was increased to 5 lakhs. The expectation that the tax-exempt ceiling will be further enhanced in the entire budget to be presented.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X