டெல்லி: அமெரிக்காவின் எச்-1பி விசா கெடுபிடிகள் காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 9100 புதிய வேலை வாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக அதன் தலைமை இயக்க அதிகாரியான பிரவீன் ராவ் ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களுக்கு தொடர்ந்து எச்-1பி விசா மறுக்கப்பட்டு வந்த காரணத்தினாலேயே அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் இக்கூட்டத்தில் பிரவீன் ராவ் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து புகுத்தவும், கணினி நுண்ணறிவுவை கற்றுக்கொண்டு, அதிகரித்துக்கொள்ளவும், வளர்ந்து வரும் புதிய புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதற்கும், கிளவுட் தொழில்நுட்பத்தில் அதிகப்படியான தரவுகளை பராமரிப்பதற்கும் தேவையான பணியாளர்களை தேர்வு செய்து பணியமர்த்தப்போவதாக கடந்த 2017ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கதிகலங்கி நிற்கும் அமேசான் வணிகர்கள்.. அமெரிக்கா தான் காரணம்.. கடுப்பில் நிறுவனங்கள்

சோதனைக் காலம்
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்த பிறகு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சோதனைக்காலம் ஆரம்பமாகிவிட்டது என்றுதான் அனைவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்காக அமெரிக்கா செல்வதற்கு வழங்கப்படும் எச்-1பி விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவரத் தொடங்கினார்.

எச்-1பி விசா நிராகரிப்பு
அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னரிமை வழங்கும் நோக்கத்தில் அமெரிக்கனாக இரு, அமெரிக்கனையே வேலைக்கு அமர்த்து என்று சொல்லிச் சொல்லியே தொடர்ந்து எச்-1பி விசா வழங்குவதை நிராகரிக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எச்-1பி விசா வழங்குவதை படிப்படியாக குறைக்கத் தொடங்கியதால் இந்தியாவில் இருந்து எச்-1பி விசாவில் அமெரிக்கா செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கிவிட்டன.

கறார் காட்டும் ட்ரம்ப்
இந்தியாவில் தகவல்தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் காக்னிசென்ட் போன்ற நிறுவனங்கள்தான் தங்கள் ஊழியர்களை எக்-1பி விசாவில் அமெரிக்காவுக்கு தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றன. இந்நிலையில் ட்ரம்பின் கறார் நடவடிக்கையினால் மேற்கண்ட நிறுவனங்கள் அனைத்துமே எச்-1பி விசா பிரச்சனையில் மாட்டி அவஸ்தைப்பட்டு வருகின்றன.

இன்ஃபோசிஸ் அதிக பாதிப்பு
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் எச்-1பி விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் 43957 எச்-1பி விசா விண்ணப்பங்களும், 2018ஆம் ஆண்டில் 22429 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் தான் சுமார் 50 சதவிகித விண்ணப்பங்களுக்கு எச்-1பி விசா மறுக்கப்பட்டுள்ளன. இதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சார்பாக விண்ணப்பித்ததில் மட்டுமே சுமார் 26 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எச்-1பி விசாவிற்க்கு 95000 டாலர் சம்பளம்
கடந்த 2016ஆம் ஆண்டில் ட்ரம்ப் அதிபரான பின்னர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக எச்-1பி விசா வேண்டுமானால் விசா விதிமுறைகளில் உள்ள உயர் தகுதி இருக்கவேண்டும் என்றும், குறைந்த பட்ச ஆண்டு வருமானம் 95 ஆயிரம் டாலர்கள் இருக்கவேண்டும் என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் காட்டத் தொடங்கிய பின்பு, இன்ஃபோசிஸ் நிறுவனமும் தன்னுடைய பாதையை அதற்கேற்ப மாற்றிக்கொண்டது.

அமெரிக்கர்களுக்கு தாரைவார்ப்பு
எச்-1பி விசா கெடுபிடிகளால், இன்ஃபோசிஸ் நிறுவனமும், தங்களின் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்காகவும், அமெரிக்க தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்களின் திறமையை வலுப்படுத்தவும், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலும் 9100 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதனால் எச்-1பி விசாவை நம்பியிருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான யுபி பிரவீன் ராவ் தெரிவித்துள்ளார்.

10000 வேலைவாய்ப்பு இலக்கு
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 10000 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவதாக இன்ஃபோசிஸ் அறிவித்திருந்தது. சொன்னது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 9100 அமெரிக்க இளைஞர்களை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைக்கு அமர்த்தியுள்ளது.

கிளவுட் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம்
வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து புகுத்தவும், கணினி நுண்ணறிவுவை கற்றுக்கொண்டு, அதிகரித்துக்கொள்ளவும், வளர்ந்து வரும் புதிய புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதற்கும், கிளவுட் தொழில்நுட்பத்தில் அதிகப்படியான தரவுகளை பராமரிப்பதற்கும் தேவையான பணியாளர்களை தேர்வு செய்து பணியமர்த்தப்போவதாக கடந்த 2017ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வருவாய் தான் அதிகம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கடந்த 2018-19ஆம் ஆண்டு வருவாயில் சுமார் 61.20 சதவிகிதம் வடஅமெரிக்க சந்தையில் இருந்துதான் கிடைத்துள்ளது. இதற்கு பின் ஐரோப்பிய யூனியனில் இருந்து சுமார் 24 சதவிகிதமும், பிற நாடுகளில் இருந்து 12.5 சதவிகிதமும், இந்தியாவிலிருந்து வெறும் 2.3 சதவிகிதமும் கிடைக்கிறது. இதன் காரணமாகவே இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது உத்தியை மாற்றி அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை அள்ளி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் தான் முன்னிலை
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்து 123 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இதில் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் மட்டும் 20.4 சதவிகிதம் அதாவது சுமார் 24 ஆயிரத்து 016 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதலாகும்.

லாபம் அதிகம் தான்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபம் என்பது சுமார் 4 ஆயிரத்து 78 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் காலாண்டைக் காட்டிலும் சுமார் 10.51 சதவிகிதம் கூடுதலாகும். கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் காலாண்டில் நிகர லாபம் சுமார் 3 ஆயிரத்து 690 கோடி ரூபாய் ஆகும். அதேபோல் வருவாயைப் பொருத்தவரையில் கடந்த மார்ச் காலாண்டில் சுமார் 21 ஆயிரத்து 539 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் காலாண்டைக் காட்டிலும் சுமார் 19.10 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் காலாண்டில் வருவாய் சுமார் 18 ஆயிரத்து 083 கோடியாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்.