தமிழக உணவகங்களில் பெரும் பெயர் எடுத்த Saravana Bhavan உணவகத்தின் உரிமையாளர் பி ராஜகோபால் கடந்த ஜூலை 18, 2019 அன்று காலை மாரடைப்பால் காலமானார்.
இறப்பதற்கு முன்பில் இருந்தே கடுமையான உடல் நலக் குறைவு மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிப்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் Saravana Bavan உரிமையாளர் ராஜகோபாலுக்கு வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

2009-ல் வழக்கு
இதற்கு முன் 2009-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ராஜகோபால் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஐந்து பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கியது உயர் நீதிமன்றம். அந்த தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். இன்று காலை தான் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்தது.

சரணடையும் தேதி
கடந்த ஜூலை 7, 2019-க்குள் ராஜ கோபாலும் அவரோடு சாந்தகுமாரை கொலை செய்ய உதவியாக இருந்த ஐந்து பேரும் காவலர்களிடம் சரணடையச் சொல்லி உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். உடல் நலக் கோளாறு காரணமாக சரணடைய கால அவகாசம் கேட்டு விண்ணப்பித்ததையும் நிராகரித்துவிட்டது நீதிமன்றம். ஆகையால் வேறு வழியில்லாமல் கடந்த ஜூலை 09, 2019 அன்று சரணடைந்தார்.

ராஜகோபால்
1947-ல் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் புன்னையாடி கிராமத்தில் பிறந்தவர். வழக்கம் போல பெரிய பண பலம் இல்லாத சாதாரண விவசாயக் குடும்பம். பெரிய கல்வி அறிவு கிடையாது. ஆனால் கடுமையாக உழைக்கக் கூடியவர். இயல்பாகவே வியாபாரம் அவர் ரத்தத்தில் இருந்தது. எனவே 1973-ல் பிழைப்புக்காக சென்னை வந்தவர் எங்கும் வேலைக்குப் போகவில்லை. சொந்தமாக ஒரு மளிகை கடை போடுகிறார்.

கொஞ்சம் வரலாறு
1981 வரை பி ராஜகோபால் ஒரு சாதாரண மளிகைக் கடை வியாபாரி தான். கே கே நகரில் தான் மளிகை கடை நடத்தினார். அப்போது சென்னை ஒரு பெரிய வளரும் நகரம். அதாவது வளர்ந்து கொண்டிருந்த நகரம். பல மாவட்ட மக்கள் மற்றும் மாநில மக்கள் வந்து போகும் இடம். எத்தனையோ பேர் "சென்னைக்கு வந்தா எங்கங்க நல்ல சோறு தண்ணி கிடைக்கும்" என முனுமுனுப்பதை வெளிப்படையாக கேட்டிருக்கிறார் நம் ராஜகோபால்.

நல்ல உணவு
நல்ல வாழை இழையில், தரமான அரிசிச் சோறு, நல்ல மனமான சாம்பார், செறிக்கும் ரசம், தரமான தயிர், அருமையாக ஒரு கூட்டு, ஒரு பொறியல் போட்டால் நன்றாக ஓடும் போல் இருக்கிறதே என நினைத்தவர், தன் மளிகைக் கடை போட்ட கே கே நகரிலேயே ஒரு ஹோட்டலையும் போட்டார். அது தான் இன்று வரை தென் இந்தியாவில் தொடங்கி உலகம் முழுக்க கட்டி ஆளும் Saravana Bhavan.

வெற்றிடம் நிரப்புதல்
சென்னையில் நல்ல உணவகங்கள் இல்லாத வெற்றிடத்தை புரிந்து கொண்ட நம் ராஜகோபால் கே கே நகரில் மட்டும் கடை நடத்தினால் பத்தாது என்பதையும் அடுத்த சில ஆண்டுகளிலேயே புரிந்து கொண்டு சென்னையில் தன் சாம்ராஜ்யத்தை பரப்பத் தொடங்கினார்.

சாம்ராஜ்யம் விஸ்தரிப்பு
அன்று Saravana Bhavan தொடங்கப்பட்டு சாம்ராஜ்யம், வியாபாரத்தில் செழித்து, இன்று உலகிலேயே குறிப்பிடத் தகுந்த சைவ உணவக Restaurant chain-களில் ஒன்றாக வளம் வந்து கொண்டிருக்கிறது. இன்று வரை உலக நாடுகளில் 43 நகரங்களில் கடை போட்டு தன் சுவையால் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது Saravana Bhavan.

ஜீவ ஜோதி
Saravana Bhavan தொடங்கப்பட்டு நல்ல பெயர், அருமையான சுவை, செழிப்பான வாழ்கை, அளவுக்கு அதிகமான காசு பணம் என எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 1990-களின் கடைசி காலங்களில், Saravana Bhavan உரிமையாளர் ராஜகோபால் ஜீவ ஜோதி என்கிற பெண்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவ ஜோதி சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக சரவண பவன் ஹோட்டலில் வேலை பார்த்த ப்ரின்ஸ் சாந்த குமாரை திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

மிரட்டல்
Saravana Bhavan உரிமையாளர் ராஜகொபால் விருப்பப்பட்ட ஜீவ ஜோதி மற்றும் சாந்த குமாரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முறை மிரட்டி இருக்கிறார் ராஜ கோபால். அதோடு விவாகரத்து வாங்குமாறும் ஜீவ ஜோதியையும், ப்ரின்ஸ் சாந்த குமாரையும் கடுமையாக வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் இருவருமே சம்மதிக்கவில்லை. இந்த பிரச்னையை புரிந்து கொண்ட ஜீவ ஜோதி மற்றும் சாந்த குமார் இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் விளக்கமாக புகார் கொடுத்திருக்கிறார்கள். வழக்கம் போல காவல் துறை சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர் என்பதால், அண்ணாச்சி மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக விட்டது.

ப்ரின்ஸ் கொலை
ஜீவ ஜோதி மற்றும் ப்ரின்ஸ் சாந்த குமார் இருவரும் கணவன் மனைவியாக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அடுத்த சில நாட்களிலேயே ப்ரின்ஸ் சாந்த குமாரை ஒரு மர்ம கும்பல் கடத்திச் சென்று, கொடைக்கானல் மலைப் பகுதியில் வைத்து கொலை செய்துவிடுகிறார்கள். ப்ரின்ஸ் சாந்த குமார் காணாமல் போன விஷயம் காவல் துறைக்கு தெரிய வருகிறது. சில பல வாரங்களுக்குப் பின் ப்ரின்ஸ் சாந்தகுமாரின் உடலை வனத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்கு கொடுக்கிறார்கள்.

கொலை தான்
முறையாக நடந்த பிரேத பரிசோதனையில் ப்ரின்ஸ் சாந்த குமார் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது நிரூபனமாகிறது. உடனே வழக்கு ராஜகோபால் மீது பாய்கிறது. அதற்கு ஜீவ ஜோதியும், ப்ரின்ஸ் சாந்த குமாரும் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்துகிறது காவல் துறை. விசாரணையில் ராஜ கோபால் சொல்லித் தான், ஐந்து பேர், சாந்த குமாரை கடத்திச் சென்று கொடைக்கானல் மலைப் பகுதியில் வைத்துக் கொன்ற உண்மைகள் தெரிய வருகிறது.

அந்த ஐந்து பேர் யார்
டேனியல், கார்மேகன், ஹூசேன், காசி விஸ்வநாதன், பட்டுரங்கன் என்கிற இந்த ஐந்து பேருமே ராஜகோபாலின் சொல் படி ஜீவ ஜோதியின் கணவர் ப்ரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்ய உதவியர்கள் என்பதால் இவர்களுக்கும், ராஜகோபாலுக்கு கொடுத்த ஆயுள் தண்டணையை அப்படியே கொடுத்திருக்கிறார்கள். வழக்கு உக்கிரமாக நடந்ததால் அடுத்த மாதமே ராஜகோபால் காவலர்களிடம் சரணடையை வேண்டி இருந்தது. ஒருவழியாகப் போராடி ஜூலை 2003-ல் ஜாமீனில் வெளியே வந்தார் ராஜகோபால். ஆனால் வழக்கில் இருந்து நிரந்தரமாக வெளியே வரமுடியவில்லை.

2009-ல்
கடந்த 2009-ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கும், அவரோடு கொலையில் சம்பந்தபட்ட ஐந்து பேருக்கு வாழ் நாள் சிறை தண்டனை கொடுத்தது. அதோடு 55 லட்சம் ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றத்திடம் செலுத்தவும், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையை ஜீவ ஜோதிக்கு கொடுக்கும் படியும் உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

இறுதி தீர்ப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு தோற்றுப் போனது. எல்லா சட்ட ரீதியான கதவுகளும் அடைபட்ட நிலையில் கடந்த ஜூலை 09, 2019 அன்று சிறைக்குப் போன Saravana Bhavan உரிமையாளர் ராஜகோபால் இன்று உடல் நலக் குறைவால் காலமாகிவிட்டார்.