பெங்களூரு: இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூலை 2018 உடன் ஒப்பிடும் போது ஜூலை 2019-ல் 1.2 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். ஆனால் ஜூன் 2019-ஐ விட ஜூலை 2019-ல் 14.6 சதவிகிதம் கூடுதலாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து இருக்கிறார்களாம்.
ஆனால் அதற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் பெட்ரோல் இறக்குமதி கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறதாம். கடந்த 2011-ம் ஆண்டு காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோல் அளவை விட தற்போது கூடுதலாக பெட்ரோல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறதாம்.
எல் என் ஜி எரிவாயு இறக்குமதி கடந்த பிப்ரவரி 2018 காலத்துக்குப் பிறகான மாதங்களிலேயே மிகக் குறைவான அளவே இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறதாம். கடந்த ஜூலை 2019-ல் 8.5 லட்சம் டன் எல் என் ஜி கேஸ் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறதாம்.
தற்போது ஜூலை 2019-ல் மட்டும் 2.30 லட்சம் டன் பெட்ரோல் இறக்குமதி செய்திருப்பதாக பெட்ரோலியப் பொருட்கள் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் அமைப்பினர் (PPAC - Petroleum Planning and Analysis Cell) கணக்கு சொல்கிறார்கள்.
கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் கேஸ், பெட்ரோல் ஆகியவைகளின் விற்பனை சுமாராக 8.8 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இதை டன் கணக்கில் சொல்ல வேண்டுமானால் தற்போது கேஸ் மற்றும் பெட்ரோல் விற்பனை சுமாராக 2.52 மில்லியன் டன்னாக இருக்கிறதாம்.
கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டு இருக்கிறது. அதோடு நிலக்கரி மற்றும் எல் என் ஜி ரக எரி பொருட்களின் இறக்குமதியும் குறைந்து இருக்கிறது. இதற்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக, இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியாததும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஆனால் இந்தியாவில் மற்ற கச்சா எண்ணெய் சார் பொருட்களின் இறக்குமதி கடந்த ஜுலை 2018-ஐ விட ஜூலை 2019-ல் 9 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் பொருட்களின் அளவும் கடந்த ஜூலை 2018-ஐ விட ஜூலை 2019-ல் சுமாராக 5 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நாப்தா, கடந்த அக்டோபர் 2015-க்கு பிறகான காலங்களிலேயே மிகக் குறைந்த அளவில் ஏற்றுமதி செய்து வருகிறதாம்.
இத்தனை பிரச்னைகளையும் அரசு கவனித்து வருகிறது. ஏற்கனவே மின்சார வாகனங்களை வெறித்தனமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது அரசு. இப்போது பெட்ரோல் இறக்குமதி வேறு அதிகரித்தால் நாட்டின் கஜானா தொடங்கி, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய இறக்குமதி பொருட்கள் குறைப்பு கொள்கை வரை பெரிய பாதிப்புகள் ஏற்படும். எனவே எப்படியாவது இந்த இறக்குமதி சிக்கல்களைச் சரி செய்ய அரசு வழி தேடும். அதில் முதல் வழியே பெட்ரோல் விலை ஏற்றம் தானே..? என்கிறார்கள் அனலிஸ்டுகள்.