இந்தியர்களின் ஐடி திறமைக்கு சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை, விஜய் சேகர் சர்மா, நாராயண மூர்த்தி, விஷால் சிக்கா... என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஆனால் இப்போது அமெரிக்காவில் இருக்கும் ஐடி வேலைகளுக்கு நம் இந்தியர்கள் வேண்டாம் என இந்திய நிறுவனங்களே சொல்கின்றனவாம். இந்த மறுப்புக்குக் காரணம் திறமையோ அல்லது கல்வியோ கிடையாது. எதார்த்த சிக்கல்கள் மற்றும் நிதிப் பிரச்னைகள் தான்.
ஆம், டிரம்பின் கெடு பிடியான விசா சட்டங்கள் மற்றும் அதிகமான கட்டணங்கள் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களே, தற்போது அமெரிக்கர்களை, பெரிய அளவில் வேலைக்கு எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தியாவை எச்சரிக்கும் ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க்.. வளர்ச்சி இவ்வளவு தான்!

இன்ஃபோசிஸ்
இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், அடுத்த 2023-ம் ஆண்டுக்குள், தன் டெக்னாலஜி அண்ட் இன்னொவேஷன் சென்டரில் வேலை பார்க்க சுமார் 1,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இன்ஃபோசிஸ் நிறுவனம், ஏற்கனவே 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுப்பதாகச் சொல்லி இருந்தது. சொன்ன படி 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுத்து முடித்துவிட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவன தரப்பிலேயே சொல்கிறார்களாம்.

டிசிஎஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விடுங்கள். இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திலேயே, இதுவரை சுமார் 30,000 அமெரிக்க ஊழியர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்களாம். அமெரிக்க ஐடி துறையில், அதிக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கும் இந்திய ஐடி நிறுவனங்களில் டாடா கன்சல்டன்சி முதல் இடத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறதாம். இதே கதை தான் காக்னிசெண்ட் நிறுவனத்திலும்.

ஹெச் சி எல்
மற்றொரு இந்திய ஐடி நிறுவனமான ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனமும் தன்னுடைய அமெரிக்க அலுவலகங்களில் சுமார் 17,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்களாம். அதில் சுமார் 65 சதவிகி ஊழியர்கள் அமெரிக்கர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியாக இந்திய ஐடி நிறுவனங்கள், சிக்கலான மற்றும் அதிகம் செலவு பிடிக்கும் ஹெச்1பி விசா பயன்பாட்டை குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அது இந்திய ஐடி இளைஞர்கள் கனவை நேரடியாக பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.

தற்போதைய நிலை
தற்போது இந்தியாவில் இருந்து மொத்தம் 85,000 பேர் மட்டுமே ஹெச் 1 பி விசா வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல முடியும். அதில் 20,000 பேர் அமெரிக்காவிலேயே பெரிய பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு என சிறப்பு கோட்டா ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த 20,000 சிறப்புக் கோட்டா போக, பாக்கி இருக்கும் 65,000 விசாக்கள் தான் சராசரி இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு. இந்த நேரம் பார்த்து, அமெரிக்க ஐடி துறையில் இந்தியர்களை வேலைக்கு எடுப்பது குறைந்தால் என்ன ஆகும்..?

நோ அப்ரூவல்
கடந்த ஜூன் 2019-ல் வெளியான அறிக்கையில் அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையான ஒரு ஆண்டு காலத்தில் 3.35 லட்சம் விசாக்கள் மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டில் 3.73 லட்சம் விசாக்கள் கொடுக்கப்பட்டதாம். இந்த எண்ணிக்கை ஹெச் 1 பி விசா ரெனிவல் கணக்குகளையும் சேர்த்ததாம். இப்படியாக ஹெச் 1 பி விசா கொடுப்பது மற்றும் ரெனீவ் செய்வது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.