ஜிஎஸ்டி செய்கூலி சேதாரம் இல்லை! பேப்பர் தங்கம் வாங்க கடைசி தேதி! போனா வராது பொழுது போனா கிடைக்காது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் வாங்கப் போனால், நாம் டிவியிலோ அல்லது இணையத்திலோ பார்க்கும் விலையை விட கூடுதல் விலைக்கு தான் வாங்க முடியும். காரணம் ஜிஎஸ்டி, செய் கூலி மற்றும் சேதாரம்.

பொதுவாக ஒரு கிராம் தங்கத்துக்கு 4 சதவிகிதம் முதல் செய் கூலி கணக்கிடத் தொடங்குகிறார்கள். அதே போல சேதாரம் நாம் வாங்கும் நகைகளைக் பொறுத்து 6 சதவிகிதம் முதல் வசூலிக்கிறார்கள்.

இந்த செய் கூலி சேதாரம் போன்றவைகள், ஒவ்வொரு நகைக் கடைக்கும் மாறுபடும். இதில் வரும் மார்ஜின் லாபத்தைக் குறைத்துக் கொண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள நினைக்கும் நகைக் கடைக்காரர்களும் உண்டு தானே..! சரி தங்க பத்திரம் (Sovereign Gold Bond) விஷயத்துக்கு வருவோம்.

24 கேரட் தங்கம்

24 கேரட் தங்கம்

தலைப்பில் சொன்னது போல தங்கத்தை வாங்க முடியுமா..? செய் கூலி, சேதாரம் இல்லாமல் அரசு வெளியிடும் தங்க காசுகளை வாங்கலாம். ஆனாலும் சரக்கு மற்றும் சேவை வரி எல்லாம் செலுத்தாமல் வாங்க முடியுமா..? அப்படியே வாங்கினாலும் அரசுக்கு தெரிய வந்தால் பெரிய பிரச்னையாகி விடாதா..? என பல கேள்விகள் இருக்கிறதா..? வாருங்கள் எல்லாவற்றுக்கும் விடை காண்போம்.

விலை ஏற்ற பயம்

விலை ஏற்ற பயம்

உலக அளவில் தங்கக் காதலர்கள் அதிகம் வாழும் நாடு நம் இந்தியா தான். தங்கம் விலை என்ன தான் ஏற்ற இறக்கம் கண்டாலும் புள்ளிங்கோ தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இப்படி தங்க நகைகளை வாங்கிப் போடுபவர்கள் ஒரு பக்கம் என்றால், தங்கத்தின் மீது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிற எண்ணம் கொண்டவர்களும் நம் ஊரில் அதிகம். அதோடு 24 கேரட் தங்கம் இன்றே சுமார் 3,950 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அடுத்த 5 வருடத்தில் இந்த விலை சுமார் 5,000 தொட்டாலும் தொடும் என்கிற பயத்தில் இப்போதே தங்கத்தை வாங்கிக் குவிப்பர்களும் உண்டு.

பேப்பர் கோல்ட்

பேப்பர் கோல்ட்

இப்படி இன்றே தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், அடுத்த ஐந்து வருடங்களில் அல்லது எட்டு வருடங்களுக்குள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு நகை வாங்கிப் போட இன்றே தங்கத்தை வாங்கிப் போடுவது போன்ற தேவைகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்த ஒரு அருமையான வழி தான் பேப்பர் கோல்ட். அதாவது தங்க பத்திரம். ஆங்கிலத்தில் Sovereign gold bond என்பார்கள். இந்த தங்க பத்திரம் வாங்கினால் நீங்கள் தங்கம் வாங்கியதற்கு சமம். சொல்லப் போனால் தங்கத்தை விட ஒரு படி மேல்.

எப்படி தங்கமும், தங்க பாண்டும் சமம்

எப்படி தங்கமும், தங்க பாண்டும் சமம்

நீங்கள் தங்கத்தை வாங்கினால் என்ன எல்லாம் செய்வீர்கள்..? மார்வாடிக் கடையில் அடகு வைப்பீர்கள், அவசர பணத் தேவைக்கு வங்கிகளில் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவீர்கள். இந்த வேலைகளை எல்லாம், தங்க பத்திரம் வைத்துக் கொண்டும் செய்யலாம். சொல்லப் போனால் தங்க பத்திரம் சுத்தமான தங்கமா என உரசிப் பார்க்க வேண்டிய வேலையே கிடையாது. தங்க பத்திர பேப்பர்களில் சொல்லப்பட்டு இருப்பது போல அது அக்மார்க் 24 கேரட் சுத்த தங்கத்துக்கு சமம். சரி இனி ஆர்பிஐ வலைதளத்தில் சொல்லப்பட்டிருப்பது போல ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண்போம்.

யார் வெளியிடுகிறார்கள்

யார் வெளியிடுகிறார்கள்

மத்திய ரிசர்வ் வங்கி தான் இந்த தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond) மத்திய அரசு சார்பாக வெளியிடுகிறார்கள். தங்க பத்திரங்களை வெளியிடும் போது, என்ன விலையில் விற்க வேண்டும் என்பதையும் மத்திய ரிசர்வ் வங்கி தான் தீர்மானிக்கிறார்கள். ஆர்பிஐ விற்கும் இந்த தங்க பத்திரங்கள் 99.9 சதவிகிதம் சுத்தமான 24 கேரட் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2019 - 20 சீரிஸ் V தங்க பத்திரங்களை, அக்டோபர் 11 வரை வெளியிடுகிறார்கள். அக்டோபர் 15 அன்று இந்த பேப்பர் தங்க வாங்கியவர் கணக்குக்கு வந்துவிடும். இது போக வரும் அக்டோபர் 21 - 25 வரை மீண்டும் வெளியிடப் போகிறார்களாம். அதோடு ஆன்லைன் வழியாக இந்த தங்க பத்திரங்களை வாங்கினால் இன்னும் 50 ரூபாய் குறைவாக வாங்கலாமாம்.

ஏன் Sovereign Gold Bond

ஏன் Sovereign Gold Bond

தங்கத்தை நகைக் கடைகளில் வாங்கும் போது 3% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால் பேப்பர் கோல்டுக்கு (தங்க பத்திரத்துக்கு) செலுத்தத் தேவை இல்லை. அதே போல தங்கத்தை நகைக் கடைகளில் வாங்கும் போது செய் கூலி, சேதாரம் போன்றவைகளைக் கணக்கிடுவார்கள். ஆனால் நம் பேப்பர் கோல்டான தங்க பத்திரங்களுக்கு (Sovereign Gold Bond) இந்த இரண்டுமே கணக்கிட முடியாது, கணக்கிடமாட்டார்கள். எனவே நகைக் கடையில் தங்கம் வாங்குவதை விட குறைந்தபட்சம் 20 சதவிகிதம் குறைந்த விலையில் தங்கத்தை தங்க பத்திரம்வழியாக வாங்கலாம்.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

அதோடு தங்க நகைகள் திருடு போகும் என்கிற பயம் தேவை இல்லை. குறிப்பாக நகைகளைப் பாதுகாக்க வங்கி லாக்கர்களை எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் வாங்கும் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) திருடிச் சென்றாலும், அவர்களால், அதை பணமாக்க முடியாது. எப்படியும் தங்க பத்திரங்களை நாம் மீண்டும் வங்கிகளிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாம் என்பதால் பாதுகாப்பு மிகவும் அதிகம்.

என்ன ரிஸ்க்

என்ன ரிஸ்க்

பணத்தின் மதிப்பு குறையும். உதாரணமாக நீங்கள் 10 கிராம் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) கிராம் ஒன்றுக்கு ரூ.3,800-க்கு வாங்குகிறீர்கள். ஆக வாங்கும் போது 38,000 ரூபாய். 8 வருடம் கழித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,500 ரூபாய் என குறைந்து விட்டால், நம் கைக்கு 35,000 ரூபாய் + 8 வருடத்துக்கு 2.5 சதவிகிதம் வட்டி மட்டும் தான் வரும். இந்த பண மதிப்பு குறைவு தான் நாம் எடுக்கும் ரிஸ்க். ஆனால் நம் கையில் எப்போதும் அந்த 10 கிராம் தங்கம் இருக்கும் என்பது பெரிய பிளஸ்.

யார் வாங்கலாம்

யார் வாங்கலாம்

இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே இந்த தங்க பத்திரங்களை வாங்க முடியும். தனி நபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர்கள், ட்ரஸ்டுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தான தர்மங்களைச் செய்யும் அமைப்புகள் (Charitable trust) இந்த தங்க பத்திரங்களை வாங்கலாம். தனி நபர்கள் தங்களின் குழந்தைகள் பெயரிலும் வாங்கிப் போடலாம். தனி நபர்கள் கணவன் மனைவியாகச் சேர்ந்தும் (Joint Holder) வாங்கலாம். குறிப்பாக மைனர்கள் பெயரில் கார்டியன்களும் வாங்கலாம்.

எங்கு விண்ணப்பம் கிடைக்கும்

எங்கு விண்ணப்பம் கிடைக்கும்

அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், பங்குச் சந்தைகள் அல்லது பங்குச் சந்தை ஏஜெண்ட்கள் என பலர் வழியாக ஆர்பிஐ தன் தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond) விற்கிறார்கள். எனவே இவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், ஆர்பிஐ வலைதளத்திலேயே விண்ணபங்கள் கிடைக்கின்றன. பல வங்கிகள் இந்த தங்க பத்திரங்களை ஆன்லைன் வழியாகவும் விற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்க பத்திரங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் பான் அட்டையைக் கொடுக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம்

ஆன்லைனில் விண்ணப்பம்

தங்க பத்திரத்தில் (Sovereign gold Bond) முதலீடு செய்ய விரும்புபவர், எங்கும் அலையாமல் தங்கள் ஆன்லைன் பேங்கிங் முறையிலேயே விண்ணப்பிக்கலாம். உதாரணமாக ஹெச் டி எஃப் சி வங்கியின் ஆன்லைன் பேங்கிங் முறையில், லாக் இன் செய்த பின் ஆஃபர்கள் என்கிற டேப்பின் கீழ் இருக்கிறது இந்த தங்க பத்திரங்களை வாங்குவதற்கான ஆப்ஷன். ஆன்லைனில் வங்கி கேட்கும் விவரங்களைக் கொடுத்து விண்ணப்பித்தால் போதும். தங்க பாண்டுகள் ஒதுக்கீடு ஆன பின் வங்கிகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக தங்க பத்திரங்களை ஆன்லைனில் விண்ணப்பித்தால், ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய் குறைவாகக் கிடைக்கும்.

ஒருவருக்கு ஒரு கணக்கு

ஒருவருக்கு ஒரு கணக்கு

ஒரு நபர் பல தங்க பத்திர கணக்குகளைத் தொடங்க முடியாது. ஒரு நபர் எவ்வளவு தங்க பத்திரங்களை வாங்கினாலும், அவைகள் அனைத்தும் ஒரே தங்க பத்திர கணக்கின் கீழ் தான் வரும். எனவே ஒரு நபர் ஒரு தங்க பாண்டு கணக்கை மட்டுமே துவங்க முடியும். அதே போல தங்க பத்திரங்களை டீமேட் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் தனியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாம்.

குறைந்தபட்சம் அதிகபட்சம்

குறைந்தபட்சம் அதிகபட்சம்

ஒரு தனி நபர் குறைந்தபட்சம் 1 கிராம் தங்க பத்திரம் தான் வாங்க முடியும். ஒரு கிராமுக்கு குறைவாக தங்க பத்திரம் கிடையாது. எனவே எப்போது வாங்கினாலும் முழுமையாக ஒரு கிராம் தான் வாங்க வேண்டி இருக்கும். தனி நபர்கள் 1 கிராம் தொடங்கி அதிகபட்சமாக ஒரு நிதி ஆண்டில் 4000 கிராம் அதாவது 4 கிலோ கிராம் வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக் குடும்பத்தினருக்கும் இந்த 4 கிலோ கிராம் தான் உச்ச வரம்பு என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அமைப்புகள் 20 கிலோகிராம் வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த உச்ச வரம்பை அரசு அவ்வப்போது மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 4 கிலோ தங்கமா

ஒவ்வொரு ஆண்டும் 4 கிலோ தங்கமா

ஒரு குடும்பத்தில் 3 பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் 3 பேரும் தனித் தனியாக 4 கிலோ தங்க பாண்டு * 3 பேர் = 12 கிலோ தங்க பத்திரங்களை வாங்கலாம். இது ஒரு நிதி ஆண்டுக்கு மட்டும். இப்படி ஒவ்வொரு நிதி ஆண்டும் அந்த 3 பேர் கொண்ட குடும்பம் 12 கிலோ கிராம் தங்க பத்திரங்களை வாங்கிக் குவிக்கலாம். ஏற்கனவே சொன்னது போல, அரசு அவ்வப் போது இந்த உச்ச வரம்புகளை மாற்றும்.

நமக்கு என்ன லாபம்

நமக்கு என்ன லாபம்

முன்பே சொன்னது போல இந்த தங்கம், நகைக் கடையில் வாங்கும் தங்கத்துக்கு இணையாக எல்லா வகையிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக தங்க பத்திரங்களாக வாங்கப்படும் தங்கத்துக்கு தேய்மானம் கிடையாது. அதோடு ஒவ்வொரு ஆண்டுக்கும் 2.5 சதவிகிதம் வட்டி வேறு கொடுப்பார்கள். தங்கத்துக்கான வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை நம் வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்கள். 8 வருட முடிவில் மொத்த அசல் + வட்டி என சேர்த்து போட்டு விடுவார்கள்.

பாண்டுகள் எப்போது கைக்கு வரும்

பாண்டுகள் எப்போது கைக்கு வரும்

தங்க பத்திரங்களுக்கு (Sovereign gold bond) நாம் விண்ணப்பித்த பின், நம் விவரங்களைச் சரி பார்த்து, நமக்கான தங்க பத்திரங்களை வழங்குவார்கள் அதை ஆங்கிலத்தில் Certificate of Holding என்று சொல்வார்கள். இந்த சான்றிதழ் நமக்கு தங்க பத்திரம்கள் கொடுத்த உடனேயே நம் வங்கி, அஞ்சலக அலுவலகம், பங்குச் சந்தை வழியாக நாம் பெற்றுக் கொள்ளலாம். தங்க பத்திரங்களை டீமேட் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் தனியாக அதைக் குறிப்பிட்டுக் கேட்க வேண்டும். அப்போது தான் நம் டீமேட் கணக்கில் நம் தங்க பாண்டுகள் வரும்.

எப்படி பணம் செலுத்துவது

எப்படி பணம் செலுத்துவது

20,000 ரூபாய் வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய ரொக்கமாகவே செலுத்தலாம். ஆனால் 20,000 ரூபாய்க்கு மேல் போகும் பட்சத்தில், காசோலை (Cheque), டிடி அல்லது மற்ற ஆன்லைன் பேங்கிங் வழியாக பணத்தை அனுப்பலாம். நாம் பணம் செலுத்திய பின் அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டு நாம் குறிப்பிட்டு இருக்கும் தங்கத்தின் அளவுக்கு ஒரு தங்கப் பத்திரம் வரும். அது தான் Sovereign gold bond. அதற்கு நிகரான பணம் நாம் செலுத்திய தொகையில் இருந்தோ அல்லது வங்கிக் கணக்கில் இருந்தோ எடுத்துக் கொள்வார்கள்.

எவ்வளவு காலம்

எவ்வளவு காலம்

இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள் 8 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பே நம் கையில் இருக்கும் தங்க பத்திரங்களை விற்க விரும்பினால், நமக்கு வட்டி போடும் தேதிகளில் நம் கையில் இருக்கும் தங்க பத்திரங்களை விற்று பணமாக நாம் வங்கிக் கணக்கு வழியாக எடுத்துக் கொள்ளலாம். இதில் வட்டி மற்றும் அன்றைய தங்கத்துக்கான விலை என அனைத்தும் ஒன்றாக வந்துவிடும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இப்படி 5 ஆண்டுகள் கழித்து தங்க பத்திரங்களை விற்க வேண்டும் என்றால், வட்டி போடும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பே நாம் தங்க பத்திரங்கள் வாங்கியவர்களிடம் சென்று முறையாக தெரியப்படுத்த வேண்டும். நம் மொபைல் எண், மின்னஞ்சல், வங்கிக் கணக்கு போன்றவைகளில் ஏதாவது மாற்றம் இருக்கிறது என்றால் கூட அதை இந்த 30 நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுச் சொல்லி மாற்றிக் கொள்வது நல்லது.

பரிசு கொடுக்கலாமா

பரிசு கொடுக்கலாமா

இந்த தங்க பத்திரங்களை நம் உறவினர்களுக்கு பரிசாகக் கொடுக்கலாம். அதே போல் வங்கிகளில் கூட தங்கத்துக்கு இணையாக சொத்துக்களைப் போல பணையம் வைத்து கடன் வாங்கலாம். இந்த தங்க பத்திரங்களில் இருந்து வரும் வட்டி வருமானத்துக்கு (Sovereign Gold Bond) டிடிஎஸ் கிடையாது. ஆனால் வரும் வட்டி வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும். இந்த தங்க பத்திரங்கள் தொடர்பாக என்ன பிரச்னை வந்தாலும், தங்க பாண்டுகளை நாம் யாரிடம் வாங்கினோமோ அந்த வங்கி, அஞ்சலகம், பங்குச் சந்தை ஏஜெண்ட்களிடம் தான் முறையிட முடியும்.

விற்கலாமா

விற்கலாமா

நாம் வாங்கிய தங்க பத்திரங்களை டீமேட் கணக்கு வழியாக பங்குகளை விற்பது போல அன்றைய குறிப்பிட்ட விலைக்கு விற்கலாம். இந்த தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bonds) ஆர்பிஐ அனுமதித்த பின் தான் பங்குச் சந்தைகள் வழியாக வர்த்தகம் ஆகத் தொடங்கும். ஆர்பிஐ குறிப்பிடும் வரை, நம் தங்க பத்திரங்கள் டீமேட் கணக்கில் இருந்தால் கூட வர்த்தகம் செய்ய முடியாது.

நாமினேஷன்

நாமினேஷன்

பொதுவாக முதலீட்டுத் திட்டங்களுக்கு நாமினிக்களைக் குறிப்பிடுவது போல இந்த தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bond) திட்டத்திலும் நாமினிகளைக் குறிப்பிடலாம். எனவே ஒருவர் தங்க பத்திரங்களில் முதலீடு செய்து இருக்கும் போது இறந்துவிட்டால், அவரின் தங்க பத்திரங்கள் அந்த நாமினிக்குச் சென்று சேர்ந்துவிடும். எனவே சொத்துப் பிரச்னைகள், அடி தடி, நீதிமன்ற வழக்குப் பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். மேற்கொண்டு எந்த பிரச்னை குறித்தும் ஆர்பிஐ இடம் புகார் செய்ய அல்லது விசாரிக்க [email protected] என்கிற மின்னஞ்சல்லைப் பயன்படுத்தலாம்.

Sovereign Gold Bond பற்றி ஆர்பிஐயின் கேள்வி பதில் பகுதியை ஆங்கிலத்தில் காண சொடுக்கவும் - https://m.rbi.org.in/Scripts/FAQView.aspx?Id=109

 

வரிச் சலுகைகள்

வரிச் சலுகைகள்

இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்து 8 ஆண்டுகள் கழித்து விற்றால் மூல தன ஆதாய வரி கிடையாது. இந்த வரிச் சலுகை வேறு எந்த கோல்ட் இடிஎஃப், கோல்ட் ஃபண்ட்ஸ் அல்லது தங்க நகைகளுக்கும் இந்த வசதி கிடையாது. ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பே தங்க பாண்டுகளை விற்று பணம் பார்த்தால் மூல தன ஆதாய வரி செலுத்த வேண்டும். குறிப்பாக இந்த தங்க பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. தங்க பத்திரங்களுக்கு கொடுக்கப்படும் 2.5 சதவிகித வட்டிக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யமாட்டார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Sovereign Gold Bond: No gst no making charges no wastage no depreciation for this gold

What is Sovereign Gold Bonds and SGB does not have GST, wastage charges, making charges. Which means we don't need to pay gst, wastage and making charges for sovereign gold bonds.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X