இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி..! நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்டோபர் 14, 2019 அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் பெற்றுக் கொண்டார்கள். அபிஜித் பேனர்ஜி (Abhijit Banerjee), எஸ்தர் டஃப்ளோ (Esther Duflo), மைக்கேல் க்ரிமெர் (Michael Kremer) தான் அந்த மூன்று பொருளாதார மேதைகள்.

 

இந்த மூன்று பேரில், அபிஜித் பேனர்ஜி, நம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இந்தியர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு வாங்கி இருக்கிறார் என்பது சந்தோஷம் தான். ஆனால் அதே நேரத்தில் அவர் ஒரு பத்திரிகையிடம் பேசும் போது, இந்திய பொருளாதாரத்தைப் பற்றிச் சொன்னது நம்மை கவலையிலும், பயத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.

அப்படி என்ன சொல்லிவிட்டார்..? ஏன் நாம் பயப்பட வேண்டும்..? எனக் கேட்கிறீர்களா..? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அபிஜித் பேனர்ஜி, ஒரு அமெரிக்க டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் "இந்தியப் பொருளாதாரம் நிலையற்றதாக, உறுதி இல்லாமல் இருக்கிறது. கடந்த 5 - 6 ஆண்டுகளாக இந்தியாவால் கொஞ்சமாவது வளர்ச்சி காண முடிந்தது. ஆனால் இப்போது அந்த வளர்ச்சி கூட உறுதிப்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது" என நம் ஊர் அரசியல்வாதிகள் நெற்றியில் அடித்தது போல் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

எதிர்காலம் சந்தேகமே

எதிர்காலம் சந்தேகமே

அதோடு விட்டாரா... பொருளாதார வல்லுநர் ஆயிற்றே, அதுவும் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு வல்லுநர் என்றால் சும்மாவா..? இனி வருங்காலத்தையும் கொஞ்சம் கணித்துச் சொல்லி நம் வயிற்றில் ஒரு கிலோ புளியை மொத்தமாகக் கரைத்து இருக்கிறார். "தற்போது இந்தியப் பொருளாதாரம் குறித்து வெளியாகி இருக்கும் தரவுகளைப் பார்க்கும் போது, இந்தியப் பொருளாதாரம் உறுதியற்ற நிலையில் இருக்கிறது. எப்போது இந்தியப் பொருளாதாரம் தன் பொருளாதார மந்த நிலை போன்ற சிக்கல்களில் இருந்து மீண்டு வரும் எனத் தெரியவில்லை" எனச் சொல்லி இருக்கிறார்.

உண்மை தானா..?
 

உண்மை தானா..?

சரி நேற்று அக்டோபர் 14, 2019, திங்கட்கிழமை பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜியின் கருத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு, உண்மையாகவே இந்தியாவின் பொருளாதார சூழ்நிலை மோசமாகத் தான் இருக்கிறதா..? எனப் பார்த்தால் கூட, பொருளாதார வல்லுநர் அபிஜித் பேனர்ஜி சொல்வது உண்மை தான் போல் இருக்கிறது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் இருந்து தொடங்குவோம்.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் கண்ணாடி தான் இந்த ஆட்டோமொபைல் துறை எனச் சொல்வார்கள். இந்திய ஆட்டோமொபைல் துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 கோடி குடும்பங்கள் (4 கோடி குடும்பம் * 3 குடும்ப உறுப்பினர்கள் (ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 3 பேர்) என 12 கோடி பேர்) வாழ்ந்து வருகிறார்கள். அதோடு இந்திய உற்பத்தித் துறையில் சுமார் 45 சதவிகிதம் பங்களிப்பது ஆட்டோமொபைல் துறை தான். அதோடு இந்திய ஜிடிபியிலும் 7.5 சதவிகிதம் நம் ஆட்டோமொபைல் தான் பங்களித்து வருகிறது.

சரிவு

சரிவு

பயணிகள் வாகனம், கண ரக வாகனம், இரு சக்கர வாகனம் என அனைத்து ரக வாகனங்களையும் சேர்த்தால், இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2019-ல் 20,04,932 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். செப்டம்பர் 2018-ல் 25,84,062 வாகனங்கள் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை சுமார் 22.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்து இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடித் துறையான ஆட்டோமொபைலுக்கே இவ்வளவு பெரிய சரிவு. அதுவும் கடந்த ஒரு ஆண்டாக என்றால் என்ன செய்ய முடியும்..?

வேலை இழப்பு

வேலை இழப்பு

கடந்த ஒரு ஆண்டு காலமாக, இந்திய ஆட்டோமொபைல் துறையில் இந்த விற்பனை சரிவு பெரிய அளவில் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் சுமார் 275 டீலர்கள் தங்களால் விற்பனை சரிவுச் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் கடையை இழுத்து மூடிவிட்டார்கள். டீலர்கள் கடையை மூடியதன் கோர விளைவு என்ன தெரியுமா..? சுமார் 30,000 டீலர்கள் சார்ந்த ஆட்டோமொபைல் ஊழியர்கள், தங்கள் வேலையை இழந்து நடுத் தெருவுக்கு வந்தார்கள்.

சிக்கல்கள்

சிக்கல்கள்

அதோடு நின்று இருந்தால் கூடப் பரவாயில்லை. மாருதி சுசூகி சுமார் 3,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலை இல்லை என வீட்டுக்கு அனுப்பியது. கடந்த செப்டம்பர் 2019-ல், அசோக் லேலண்ட் தன் உற்பத்தி ஆலைகளில் சுமார் 10 - 15 நாட்கள் வேலை இல்லா நாட்களாக அறிவித்தார்கள். சமீபத்தில் தமிழக ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ப்ரிகால் கூட தன் உற்பத்தி ஆலைகளில், வேலை இல்லா நாட்களை அறிவித்து தன் ஊழியர்கள் மனதில் பயத்தை விதைத்தது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் விட நம்மை பயமுறுத்தும் விதமாக இன்னும் சில செய்திகள் இருக்கின்றன.

ஏ சி எம் ஏ கணிப்பு

ஏ சி எம் ஏ கணிப்பு

Automotive Components Manufacturers Association of India (ACMA) கணிப்பின் படி, ஏற்கனவே கடந்த சில மாதங்களில் இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்களில் சுமார் 1,00,000 பேருக்கு மேல் வேலை பறி போய்விட்டதாகவும், மேற்கொண்டு, இந்திய ஆட்டோமொபைல் துறையில், இதே மந்த நிலை நீடித்தால், அடுத்த 3 - 4 மாதங்களில், மேலும் 10 லட்சம் பேர் வரை தங்கள் வேலையை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக, ACMA இயக்குநர் வின்னி மேத்தா சொல்லி இருந்ததும் தானாகவே நினைவுக்கு வருகிறது.

Team lease

Team lease

இந்தியாவின் முன்னணி மனித வள மேம்பாட்டுத் துறை நிறுவனமான Team lease "இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சுமார் 10 சதவிகிதம் ஊழியர்கள் தொடர்ந்து வேலையில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்" எனச் சொல்லி இருந்தது. இந்த காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர் 2019) சுமார் 5 லட்சம் பேர் இந்த ஆட்டோமொபைல் துறையில் தங்கள் வேலையை இழக்கலாம் எனச் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான இந்த மந்த நிலை சுமார் 6 - 9 மாதங்கள் வரை தொடரலாம் எனச் சொல்லி இருந்ததையும் இங்கு நினைவு கூற வேண்டி இருக்கிறது.

வேலை இல்லா திண்டாட்டம்

வேலை இல்லா திண்டாட்டம்

இந்த சிக்கல்களுக்கு மத்தியில், இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த வேலை இல்லா திண்டாட்டம் பிரச்னைக்கு மத்தியில் இப்படி மேலும் பலரின் வேலை பறி போனால் இந்திய பொருளாதாரம் என்ன ஆகும் என யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா..? மனதை திடப்படுத்திக் கொண்டு மேலே படியுங்கள்... இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்னும் மந்தமடையும்.

தேவை = சப்ளை

தேவை = சப்ளை

சில வாரங்களுக்கு முன், பாஜக தலைவர் சுபரமணியன் சுவாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசும் போது "இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை அள்ளிக் கொடுத்தால், சப்ளை தான் அதிகரிக்கும். இந்தியாவில் தேவை (டிமாண்ட்) அதிகரிக்க வேண்டும் என்றால், மக்கள் கையில் அதிகமாக பணம் புழங்க வேண்டும் இல்லை என்றால், தேவை (டிமாண்ட்) அதிகரிக்காது, அதற்கு மக்கள் செலுத்தும் வருமான வரியைத் தள்ளுபடி செய்து இருக்க வேண்டும்" எனச் சொல்லி இருந்தார்.

வேலை போனால்

வேலை போனால்

சு.சுவாமி சொல்வது போல, வருமான வரியை இந்த அரசு தள்ளுபடி செய்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் தற்போது இருக்கும் வேலை வாய்ப்புகளே பறி போகும் பயம் வந்தால், மேற்கொண்டு மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கத் தான் பார்ப்பார்கள். செலவழிக்கவே மாட்டார்கள். மக்கள் செலவழிக்கத்ட் ஹயாராக இல்லை என்றால், இந்தியப் பொருளாதாரம் மேலும் மந்தமடையும். இதற்கு மேற்கு வங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் துர்கா பூஜை காலத்தில் கூட வழக்கம் போல பண்டிகை கால வியாபாரம் நடக்காததே சாட்சி..! இப்படி மக்கள் மனதில், வேலை பறி போகும் பயம் எப்படி வருகிறது..?

பயம்

பயம்

ஒரு நிறுவனத்தின் வருமானம் சரிந்தால் தான் ஆட் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். ஆக ஒரு நிறுவனத்தின் விற்பனை குறைந்து வருவாய் சரியும் போது வேலையில் இருந்து சிலர் நீக்கப்படுகிறார்கள். வேலையை விட்டு நீக்கப்பட்டவர்கள் செலவழிக்கும் பணம் பெரிய அளவில் சரிகிறது. இதனால் மேலும் பல (FMCG, Consumer Durables, Automobile, Bank loans) துறை சார்ந்த பொருட்கள், சேவைகள், கடன்கள் வாங்குவதும் பெரிய அளவில் குறைகிறது.

தொடர்ச்சி

தொடர்ச்சி

இதனால், மேலே சொன்ன நிறுவனங்களின் வருவாய் குறைந்து லாபம் குறையும். எனவே, இப்போது மீண்டும் FMCG, Consumer Durables, Automobile, Bank என பல துறைகளில் இருந்தும் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள், மேலும் நுகர்வு குறையும். மீண்டும் பல நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். சரி எந்த எந்த துறைகள் எல்லாம் இந்த பொருளாதார அழுத்தத்தில் மாட்டுவார்கள்..? கிட்டத்தட்ட எல்லா துறைகளும் மாட்டுவார்கள்.

ஏன்..?

ஏன்..?

பொதுவாக FMCG நிறுவனமே ஒரு ரெசசன் ஃப்ரூப் துறை எனச் சொல்வார்கள், ஆனால் இந்த முறை பல முன்னணி FMCG நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சியே முந்தைய காலாண்டுகளை விட கொஞ்சம் பலமாக சரிவு கண்டிருக்கிறது. கடந்த சில காலாண்டுகளாக ஒற்றை இலக்கத்தில் தான் FMCG நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி இருப்பதாகச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதை செய்திகளில் நம்மால் பரவலாக பார்க்க முடிகிறது. ஆக FMCG நிறுவனமே அடி வாங்கி இருப்பதால் எல்லா துறைகளிலும் இந்த பொருளாதார மந்த நிலை ஒரு குறைந்தபட்ச பாதிப்பையாவது ஏற்படுத்தும் வாய்ப்புகள் நிறைய இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

எந்த துறையில் எப்படி

எந்த துறையில் எப்படி

1. வங்கி - பணி நிரந்தரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை இல்லாத போது, புதிதாக கடன் வாங்கத் தயங்குவார்கள்.

2. இன்சூரன்ஸ் - வேலை நிச்சயமாக இருக்குமா..? எனத் தெரியாததால், அவசரப்பட்டு புதிய பாலிசிகளை எடுத்து பிரீமியம் செலுத்த தயங்குவார்கள்.

3. ஆட்டோமொபைல் - வேலை நிச்சயம் இல்லா தன்மையினால் கையில் இருக்கும் 50,000 - 1,00,000 ரூபாய் வரைக்குமான பணத்தை பத்திரப்படுத்துவார்கள், புதிதாக கடன் வாங்கி எல்லாம் வாகனங்களை வாங்க பயப்படுவார்கள். அதோடு எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான குழப்பம், பாரத் ஸ்டேஜ் 6 Vs பாரத் ஸ்ஏஜ் 4 குழப்பம், பதிவுக் கட்டணம் உயர்வு, மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு என எப்படிப் பார்த்தாலும் வாகனங்கள் வாங்குவதை கூடுமானவரை தள்ளிப் போடுவார்கள்.

அடுத்த துறைகள்

அடுத்த துறைகள்

மீடியா, விளம்பரம் - வியாபாரம் மந்தமாக இருக்கிறது, நிறுவனங்களின் லாபமும் கணிசமாக குறைந்து இருக்கும் சூழலில் மீடியா மற்றும் விளம்பரம் சார்ந்த துறைகளில் புதிய விளம்பரங்களை கொடுக்கத் தயங்குவார்கள். விளம்பரங்கள் கொடுப்பது கணிசமாக குறையும்.

டெலிகாம் - ஏற்கனவே நஷ்டத்தில் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது இதில், பொருளாதார மந்த நிலை வேறு படுத்திக் கொண்டு இருக்கிறது என்றால் எப்படி விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது..? ஆக இருக்கும் பணியாளர்களை வைத்து சமாளிப்பதிலேயே பொழுது சரியாக இருக்கிறது. இதில் ஏற்கனவே பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை பறி போகாமல் இருந்தால் சரி...

ஐடி, ரியல் எஸ்டேட்

ஐடி, ரியல் எஸ்டேட்

ஐடி - வழக்கம் போல உலக பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்க சீன வர்த்தகப் போர், அமெரிக்கர்களுக்கே அமெரிக்க வேலை போன்ற சிக்கல்கள் காரணமாக, புதிய ஆர்டர்கள் பெரிதாக இல்லை. வழக்கம் போல, இந்திய ஐடி நிறுவனங்கள் உள்ளே வெளியே ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய பெரிய உதாரணம் டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் 2019 காலாண்டின் நிகர லாபம் 1.8% மட்டுமே அதிகரித்து இருப்பது தான்.

ரியல் எஸ்டேட் - இந்தியாவில் ஏற்கனவே கட்டி முடித்து இருக்கும் வீடுகளை வாங்கவே ஆள் இல்லை, ஏற்கனவே மேலே சொன்ன வேலை பறி போகும் பயம் எல்லா துறைகளிலும் இருப்பதால், கடன் வாங்கிக் கூட வீடுகளை வாங்க யாரும் தயாராக இல்லை. இதில் எங்கிருந்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது.

பலவீனம் தானே

பலவீனம் தானே

ஆக, நோபல் பரிசு வாங்கிய பொருளாதார வல்லுநர் அபிஜித் பேனர்ஜி சொல்வது சரி தானே..! இந்தியாவின் வங்கி, இன்சூரன்ஸ், ஐடி, ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் என பல துறைகளும் கடுமையான சவால்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கும் போது, இந்தியப் பொருளாதாரம் மட்டும் எப்படி வளர்ச்சி காணும். ஆக இந்த பொருளாதார வல்லுநர்களின் அக்கறை மிகுந்த அறிவை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது, நம் அரசின் கடமை. அதை அரசு செய்யும் என நம்புகிறோம். நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian economy warning: Noble prize for economics winner Abhijit Banerjee warns Indian economy is unsteady

Noble prize for economics winner Abhijit Banerjee said that the condition of Indian economy is shaky. After seeing the present growth data, we can't be sure about revival of economy in short term.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X