இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது, அவர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்பு தொகையும், ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று வரையில் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தினை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போதும், அல்லது பிஎஃப் கணக்கில் ஏதேனும் மற்ற பிரச்சனைகள் இருந்தாலே அதனை மாற்றுவது கடினமான காரியமாகவே இருந்து வந்தது.
ஆனால் பிஎஃப் நிறுவனம் தனது சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மேம்படுத்தி வருகிறது.

ஆதார் கார்டினை ஆவணமாக பயன்படுத்த அனுமதி
இதனையடுத்து தற்போது வருங்கால வைப்பு நிதி உரிமையாளர்களின் பிறந்த தேதி, பிஎஃப் ஆவணங்களில் தவறாக இருந்தால், அதில் திருத்தம் செய்ய ஆதார் கார்டு சரியான ஆதாரமாக பயன்படுத்த அனுமதிக்கும் என்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கடந்த ஞாயிற்றுகிழமையன்று தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இது குறித்து வெளியான அறிக்கையில், பிஎஃப் ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்வதற்கு, செல்லத் தகுந்த ஆவணமாக ஆதார் ஏற்றுக் கொள்ளப்படும். ஆதார் மற்றும் பிஎஃப் ஆவணங்களில் உள்ள பிறந்த தேதிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 3 ஆண்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த திருத்தம் செய்ய பிஎஃப் சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

உடனே நிறைவேற்றுங்கள்
இது மட்டும் அல்ல, அதை உடனே பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என பிஎஃப் நிறுவனம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பிஎஃப் நிதியில் இருந்து 75% தொகையை சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பிஎஃப் சந்தாதாரர்கள் விண்ணப்பிக்க வசதியாக புதிய வழிகாட்டி குறிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஎஃப் தொகையிலிருந்து பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் தத்தம் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையில், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்குக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது மத்திய அரசு.

விரைவில் கிடைக்க உதவி
மேலும் தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டது. இது மற்ற திட்டங்களைப் போல் அல்லாமல், பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி செய்வதாகவும் செய்திகள் வெளியாகியது.

நல்ல விஷயம் தான்
ஆனால் மக்கள் தங்கள் அவசரத்தேவைக்காக பணம் எடுக்க முற்பட்ட போது, இரண்டு பிஎஃப் கணக்குகளில் ஒன்றில் கேஓய்சி பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உங்கள் பிஎஃப் பணத்தினை பெறுவதில் சிக்கலானதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் பிஎஃப் பணியிடங்களின் ஆதரவு இதற்கு தேவைப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையிலேயே இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ம்ம்.. அஹுவும் நல்லதுக்கு தான்..