கொரோனா வைரஸ், லாக்டவுன், பொருளாதார மந்தம், தேவை சரிவு, நுகர்வு சரிவு, ஜிடிபி சரிவு, வேலை நிறுத்தம், பணி நீக்கம், சம்பள குறைப்பு என பலவும் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி கேட்கும் வார்த்தைகளாக உள்ளன.
இதற்கிடையில் மீண்டும் ஓமிக்ரான் அதிகரித்து வரும் இந்த சூழலில், மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் மறுபடியும் 2020ன் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்பது போல ஒரு உணர்வு இருந்து வருகின்றது.
5 வருட முடிவில் ரூ.20 லட்சத்திற்கு மேல்.. எவ்வளவு முதலீடு.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்..!
இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பினை, பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் குறைத்து வருகின்றன.

பொருளாதாரம் வீழ்ச்சி காணுமோ?
தற்போது தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள பொருளாதாரம், ஓமிக்ரானால் மீண்டும் சரிவினைக் காணுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் அரசும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் தான் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த ஒரு நல்ல யோசனையை முன் வைத்துள்ளார், பாஜகாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி. .அதுவும் பட்ஜெட் 2022 நெருங்கி வரும் இந்த சமயத்தில் கூறியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சு சுவாமியின் பரிந்துரை
அப்படி என்ன பரிந்துரை? இது ஏன் சம்பளதாரர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம் என கூறப்படுகின்றது. அப்படி என்ன தான் கூறினார் வாருங்கள் பார்க்கலாம்.
பிசினஸ் டுடே நடத்திய பேட்டியில், பட்ஜெட் 2022 நெருங்கிக் கொண்டுள்ள இந்த தருணத்தில் , நீங்கள் நிதியமைச்சராக இருந்திருந்தால், பெருந்தொற்றின் தாக்கத்தினை குறைக்க என்ன செய்வீர்கள்? உங்களின் உடனடி நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு ஏப்ரல் 1 முதல் இயல்பு நிலை திரும்பும் வரையில் யாருக்கும் வருமான வரி கிடையாது என அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

வட்டியை குறைக்கணும்
இயல்பு நிலை திரும்பியவுடன், அதனை நிரந்தரமாக்க தொடங்க வேண்டும். அடுத்ததாக கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 12%ல் இருந்து 9% ஆக குறைப்பேன். அதேபோல வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை 6%ல் இருந்து 9% ஆக அதிகரிப்பேன். இதனால் மக்கள் அதிகம் சேமிப்பார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% சேமிப்போம். ஆனால் இன்று 31% ஆக குறைந்துள்ளது. ஆக சேமிப்பினை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும்.

தோல்வி கண்டு வரும் அரசு
அடுத்ததாக சாலைகள் அமைப்பதை இயன்ற அளவு அதிகரிக்க கேட்டுக் கொள்வேன். அதற்கும் நிதியுதவி செய்வோம். ஜூன் 2016ல் இருந்து மோடி அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. ஏனெனில் 2016 முதல் ஜிடிபி வளர்ச்சி குறைந்து வருகின்றது. இது 8%ல் இருந்து 3% ஆக குறைந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சாத்தியமா?
வருமான வரியை குறைத்தால் அரசுக்கு கிடைக்கும் வருமான குறைந்து விடுமே, இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்விக்கு மத்தியில், பொருளாதாரம் முன்னேறினால் மக்கள் வரி கொடுக்க தயாராக உள்ளனர். மறுமூதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என விதியை கொண்டு வாருங்கள், இதனால் முதலீடும் அதிகரிக்கும். வளர்ச்சியும் பெருகும். அரசுக்கு மாற்று ஆதாரங்களுக்கு பஞ்சமில்லை. ஆக அவற்றை பயன்படுத்தலாம் என பல வழிகளையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

நிலையான வளர்ச்சி மற்றும் வேலையை உருவாக்க?
இதற்கு தேவையை அதிகரிப்பதே சிறந்த வழி. உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான உந்துதல் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜம் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என கருதினார். ஆனால் வட்டி விகிதத்தினை அதிகரித்தால், MSME-க்கள் வணிகத்தினை விட்டு அதிகம் வெளியேறுவார்கள். இதன் மூலம் நீங்கள் வேலையின்மையை அதிகரிப்பீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று வேலையின்மை அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொருளாதாரத்தினை நிலைப்பாடு?
முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது சரிந்த வளர்ச்சியினையே, இன்னும் நாம் மீட்கவில்லை. 2022ம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 9.2% ஆக இருக்க வேண்டும் என கணிப்புகள் கூறுகின்றன. முதலில் எம் எஸ் எம் இ கணக்கீட்டில் இல்லை. 3ம் காலாண்டு தரவு இன்னும் வரவில்லை. அதே சமயம் உலக வங்கி ஜிடிபி கணிப்பினை 8.2% ஆக குறைத்துள்ளது. 2016ல் தொடங்கிய சரிவானது, இன்று வரையில் சரிவிலேயே உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

5 டிரில்லியன் கனவு
ஆரம்பத்தில் அதிக சப்ளையுடன் தொடங்கினோம். பொருட்கள் அதிகமாக இருந்தன. ஆனால் தேவை அதிகரிக்க வேண்டிய நிலை இருந்தது. அதனை செய்ய தவறிவிட்டோம். ஆக அதனை ஊக்குவிக்க வேண்டும்.
5 டிரில்லியன் டாலர் இலக்கு பற்றி கூறியவர், அதனை அடைய ஆண்டுக்கு 14.8% வளர்ச்சி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இவை உண்மையில் பொருளாதாரத்தினை மேம்படுத்த சரியான வழியாக இருந்தாலும், இதனை செயல்படுத்துவது தற்போதைக்கு இயலுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.