ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புதுமைகளையும், நவீன தொழில்நுட்பத்தையும் ஏற்காமல் அதை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காத நிறுவனம் இனி வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இது இந்தியச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் அமெரிக்கச் சந்தைக்கும் பொருந்தும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தையில் 90 வருடங்களாக முதல் இடத்தை ஆட்சி செய்து வந்த ஒரு நிறுவனத்தை முதல் முறையாக ஜப்பான் நிறுவனம் கீழே இறக்கியுள்ளது.
பிரதமர் மோடியின் டிரில்லியன் பொருளாதார கனவு.. இலக்கை எட்ட 8% வளர்ச்சி அவசியம்.. !

கார் விற்பனை
கார் விற்பனை சந்தையை மிகப்பெரிய அளவில் வைத்திருக்கும் மிக முக்கியமான நாடுகளில் அமெரிக்கா முதன்மையாகவும், முக்கியமானதாகவும் விளங்குகிறது. இதனால் அமெரிக்க கார் விற்பனை சந்தையில் ஏற்படும் மாற்றம் தான் உலக ஆட்டோமொபைல் சந்தையின் மாற்றம் எனக் கருதப்படுகிறது.

ஃபோர்டு டூ டெஸ்லா
இதை அன்றைய ஃபோர்டு உற்பத்தி தொழில்நுட்பத்தில் இருந்து இன்றைய டெஸ்லா எலக்ட்ரிக் கார் வரையில் பொருந்தும். இந்நிலையில் அமெரிக்கா கார் விற்பனை சந்தையில் 90 வருடத்திற்குப் பின்பு நடந்திருக்கும் மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

90 வருட ஆதிக்கம்
1931ஆம் ஆண்டுக்கு பின்பு முதல் முறையாக 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகம் கார் விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஜப்பான் கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான டோயோட்டா-விடம் 90 வருடங்களுக்குப் பின்பு இழந்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் உற்பத்தி துறையில் மிகவும் முக்கியமான நிறுவனமாக உள்ளது, அமெரிக்காவின் Detroit மாகாணத்தை ஆட்டோமொபைல் உற்பத்தி சந்தையாக மாறியதற்கு மிகமுக்கியமான காரணம் ஜெனரல் மோட்டார்ஸ் தான்.

ஜெனரல் மோட்டார்ஸ் ஆதிக்கம்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் பல பிராண்டுகள் இருக்கும் காரணத்தால் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களிடமும் தனது கார்களை விற்பனை செய்யும் நிலையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்தது.

டோயோட்டா நிறுவனம்
ஆனால் 2021ஆம் ஆண்டில் ஜப்பான் டோயோட்டா நிறுவனம் அமெரிக்காவில் 23.32 லட்சம் கார்களை விற்பனை செய்த நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் 22.18 லட்சம் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதனால் ஜெனரல் மோட்டார்ஸ் தனது முதல் இடத்தையும் இழந்துள்ளது.

விற்பனை அளவீடுகள்
2021ஆம் ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் 13 சதவீதம் சரிந்துள்ள நிலையில் டோயோட்டா வர்த்தகம் 10 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. 2020ல் ஜெனரல் மோட்டார்ஸ் 25.5 லட்சம் கார்களும், டோயோட்டா 21.1 லட்சம் கார்களும், ஃபோர்டு 20.4 லட்சம் கார்களையும் விற்பனை செய்துள்ளது.

பிராண்ட் மற்றும் வர்த்தகப் பகுதி
ஜெனரல் மோட்டார்ஸ் கீழ் ஏற்கனவே பல பிராண்டுகள் இருக்கிறது எனக் கூறியிருந்தோம். இதன் படி ஜெனரல் மோட்டார்ஸ் எந்தப் பிராண்டில் எந்த நாட்டில் வர்த்தகம் செய்கிறது என்பதற்கான முழு விளக்கம்.
செவ்ரோலெட் (Chevrolet) - அமெரிக்கா, சீனா, மத்திய கிழக்கு, சிஐஎஸ் நாடுகள், தென் கொரியா, பிலிப்பைன்ஸ்
ப்யூக் ( Buick) - சீனா, வட அமெரிக்கா
GMC - வட அமெரிக்கா, மத்திய கிழக்கு
காடிலாக் ( Cadillac) - வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பா
Baojun - சீனா
வுலிங் ( Wuling) - சீனா, இந்தோனேசியா