இந்தியாவில் 4ஜி சேவை அறிமுகத்தின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைப் பெற்றும் வெறும் 5 வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் அடுத்த சில மாதத்தில் மத்திய அரசு விற்பனை செய்ய உள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் இச்சேவையை மக்களுக்கு அளிப்பதற்காகத் தயாராகி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவைக்காகப் பல்வேறு நிறுவன கூட்டணி உடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டு முடிவதற்குள் ரிலையன்ஸ் ஜியோ முழுமையான 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உறுதியாக இருக்கிறது.

5ஜி சேவை
இந்நிலையில் 4ஜி சேவையைப் போல் 5ஜி சேவையிலும் ஜியோ உடன் போட்டிப்போட யாருமே இல்லை என நினைத்திருந்த நிலையில், பல்வேறு வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பிற்கு இடையிலும் ஏர்டெல் இந்தியாவில் 5ஜி சேவையைக் கொடுக்கத் தயாராகியுள்ளது.

பார்தி ஏர்டெல்
இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் தற்போது செயல்பாட்டில் இருக்கும் டெலிகாம் கட்டமைப்பின் வாயிலாகவே 5ஜி சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.

ஸ்மார்ட்டான ஐடியா
ரேடியோ சொத்துக்கள் மற்றும் Antenna-க்களில் எவ்விதமான மாற்றமும் செய்யாமலேயே, எவ்விதமான கூடுதல் செலவுகளும் இல்லாமலும் ஏர்டெல் நிறுவனத்தால் தற்போது இருக்கும் டெலிகாம் கட்டமைப்பைக் கொண்டு 5ஜி சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. மென்பொருள் மேம்பாடு மூலம் 5ஜி சேவையைச் சிறப்பாக அளிக்க முடியும் என ஏர்டெல் நம்புகிறது, இதைத்தான் செய்ய முடிவு செய்துள்ளது.

ஏர்டெல் அலைக்கற்றை
ஏர்டெல் நிறுவனத்திடம் தற்போது இருக்கும் 600-850 MHz ஸ்பெக்ட்ரம் கொண்டு 50-250 Mbps வேகத்திலும் (4G சேவையை விடவும் சற்று அதிகம்), 2.5-3.7 GHz ஸ்பெக்ட்ரம் கொண்டு 100-900 Mbps வேகத்திலும், 25-39 GHz ஸ்பெக்ட்ரம் கொண்டு 1.8 Gbps வேகத்திலும் டெலிகாம் சேவை அளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் கையில் இருக்கும் ஸ்பெக்டரம் அலைக்கற்றை கொண்டு 10 மடங்கு அதிக வேகத்தில் இண்டர்நெட் இணைப்பை அளிக்க முடியும் என்று நம்புகிறது.

ஸ்பெக்ட்ரம் ஏலம்
இந்நிலையில் வருகிற மார்ச் 1ஆம் தேதி மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தில் எடுக்க விண்ணப்பம் பெற உள்ளது. இந்நிலையில் டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் 5ஜி அலைக்கற்றைக்கு ஒரு மெகா MHz-க்கு 492 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள்
இந்த ஏலத்திற்குப் பின் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கும் எனப் பல அமைப்புகள் கணித்துள்ளது, ஏற்கனவே நிலுவை தொகை, வர்த்தகப் போட்டி, குறைந்த வருமானம் எனப் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியுள்ள டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவை அறிமுகம், ஏலம், வர்த்தக விரிவாக்கம் என அதிகளவிலான நிதி சுமைக்குத் தள்ளப்பட உள்ளது.