சம்பளம், சமூக பாதுகாப்பு, தொழிற்துறை உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் தொடர்பான 4 தொழிலாளர் மசோதாக்கள் அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் 13 மாநிலங்கள் மட்டுமே வரைவுகளை வெளியிட்டுள்ளன. பெரும்பாலான வரைவு அறிவிப்புகள் சம்பள குறியீட்டிலேயே உள்ளன.
வேலை வாய்ப்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழிலாளர் குறியீடுகளின்படி, விதிகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே நான்கு தொழிலாளர் சட்டங்களின் கீழ் சட்டங்களை வெளியிட்டுள்ளன. நான்கு குறியீடுகளின் கீழ் விதிகளை உருவாக்க எஞ்சியுள்ள மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று ராஜ்யசபாவில் பூபேந்தர் திங்கட்கிழமையன்று கூறியிருந்தார்.
eShram: கூலி வேலை முதல் சுயதொழில் வரை.. அனைவருக்கும் 2 லட்சம் இன்சூரன்ஸ்.. சூப்பர் திட்டம்..!

வார இறுதியா?
உண்மையில் இந்த 4 சட்டங்களால் என்ன பலன்? இது ஊழியர்களுக்கு பயன் அளிக்குமா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வார இறுதி என்றாலே நம்மையும் அறியாமலேயே பலருக்கும் சந்தோஷம் பொங்கிக் கொண்டு வரும். ஏனெனில் அடுத்த நாள் விடுமுறை. மூக்குபிடிக்க சாப்பிட்டு, பகலில் தூங்கிவிட்டு, மாலை நேரத்தில் குடும்பத்தோடு ஜாலியாக வெளியில் செல்லலாம். இது தான் இன்றைய நடுத்தர மக்கள் பலரின் வழக்கமாக இருக்கும்.

4 நாள் தான் வேலையா?
அதிலும் சில மாதங்களில் அலுவலக கூட்டம், இலக்கினை எட்ட முடியவில்லை எனில், அந்த ஞாயிற்றுகிழமைகளில் கூட சில நேரம் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். அந்த நேரங்களில் அடுத்த ஞாயிற்றுகிழமை எப்போது வரும் என்று நாட்களை எண்ணி எண்ணி காத்திருப்பதுண்டு. ஆனால் இப்படி இருப்போருக்கு வாரத்தில் 4 நாள் தான் வேலை என்றால் அது எப்படியிருக்கும்.

தினசரி 12 மணி நேரம்
மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். அதாவது தினசரி 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது குறித்த இறுதி வரைவுகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரம்
தற்போது பெரும்பாலான நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரம் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

உடன்பாடு வேண்டும்
ஆனால் இந்த விதிகளை அமல்படுத்துவதில் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே ஒரு உடன்பாடு வேண்டும். எனினும் இது குறித்து நாங்கள் ஊழியர்களையோ அல்லது முதலாளிகளையோ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இது ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும். இது மாறிவரும் கலாசாரத்து ஏற்ப இருக்கும் என்றும் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியது நினைவுகூறத்தக்கது.

சம்பள மசோதா
New Wage Code Bill மசோதா மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, அகவிலைப்படி, டிராவல் அலவன்ஸ் மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு என அனைத்திலும் மாற்றம் ஏற்படலாம். புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, அகவிலைப்படி, பயணப் படி மற்றும் ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் என அனைத்தும் 50%க்கு மேல் இருக்காது.

டேக் ஹோம் சம்பளம் குறையும்
அதாவது அடிப்படை சம்பளத்தின் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 50%-க்கு குறைவாக இருந்தால் அவை விரைவில் மாறிவிடும், மேலும் உங்களது அடிப்படை சம்பளத்துடன் சிடிசி (CTC) மேலும் அதிகரிக்கும். பல நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தினை மிகக் குறைவாக கொடுத்து, மற்ற அலவன்சுகளை அதிகமாக கொடுத்து வருகின்றன. இதன் மூலம் உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு குறையும். ஆனால் இந்த புதிய மசோதாவால் இனி அதெல்லாம் குறையும். மாறாக உங்களது அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்.இதனால் டேக் ஹோம் சம்பளம் குறையும்.

பிஎஃப் அதிகரிக்கும்
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின் உங்களது Take Home Salary குறைவாக இருக்கும். எனினும் அடிப்படை சம்பளத்தில் தான் 12 + 12 = 24% வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். புதிய விதிகளின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படலாம் என்பதால், உங்களது சேமிப்பு அதிகரிக்கும். அதாவது பிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்.

இப்படி தான் சம்பளம்?
உதாரணத்திற்கு ஒரு ரமேஷின் சம்பள விகிதம் 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொண்டால், அதில் சம்பளதாரரின் மற்ற அலவன்ஸ்கள் 50,000 ரூபாய்க்கு மேல் இருக்க முடியாது. ஆனால் அவரின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக இருக்கும். ஏனெனில் இந்த அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கும்பொருட்டு நிறுவனங்கள் மற்ற அலவன்ஸ்களை குறைக்க முயலும்.
தற்போது அவரின் அடிப்படை சம்பளம் 40,000 எனில், ஊழியரும், ஊழியருக்காக நிறுவனமும் தலா பிஎஃப்க்கு 4800 ரூபாய் கொடுப்பார்கள். ஆக தற்போது அந்த ஊழியரின் Take home salary என்பது 90,400 ரூபாயாக இருக்கும்.
ஆனால் புதிய சட்டத்தின் படி, அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக ஆக உயர்ந்தால், அவரின் பிஎஃப் பங்களிப்பு தலா 6,000 ரூபாயாக அதிகரிக்கும். இதனால் ஊழியரின் டேக் ஹோம் சம்பளம் என்பது 88,000 ரூபாயாக இருக்கும். ஆக முன்பை விட 2,400 ரூபாய் குறையும்.

கிராஜ்விட்டி அதிகரிக்கும்
அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது கிராஜ்விட்டியும் அதிகரிக்கும். ஏனெனில் ஒவ்வொரு வருட சேவைக்கும் கடைசியாக கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தின் 15 நாட்களுக்கு சமமான தொகையாக நிறுவனங்கள் கிராஜ்விட்டியாக கொடுக்கும். ஆக அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என்பதால், இந்த கிராஜ்விட்டி தொகையும் அதிகரிக்கும்.

1 வருடம் போதும் - கிராஜ்விட்டி உண்டு
புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜ்விட்டியிலும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இருந்த விதிகளின் படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, 1 ஆண்டு பணிபுரிந்தாலே கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆக இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பயன்பெறுவர்.

முழு விவரம் எப்போது?
ஆக இவ்வளவு நல்ல விஷயங்களுக்கு மத்தியில் தான் இந்த 4 தொழிலாளர் மசோதாக்கள் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகின்றன. எனினும் இது அமல்படுத்தப்பட்ட பின்னர் தான் முழுமையான விவரம் என்ன என்பது தெரியவரும்.
எப்படியிருப்பினும் இது தொழிலாளர்களுக்கு சாதகமான ஒரு அறிவிப்பாகத் தான் உள்ளது.