இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் 3 வங்கிகள் கிட்டத்தட்டத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுப் பிற வங்கிகளின் முதலீட்டாலும், கைப்பற்றலின் காரணமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்திய வங்கிகளில் வராக்கடன் பிரச்சனை அதிகமாகி வரும் இந்த வேளையில் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ள முக்கியமான ஒரு திட்டத்தை முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய வங்கித் துறையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்திய கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியாவில் வங்கிகளை அமைக்கும் உரிமையை அளிக்கலாம் என ரிசர்வ் வங்கியின் Internal Working Group பரிந்துரை செய்துள்ளது.
இதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும், முன்னாள் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா-வும் ரிசர்வ் வங்கியின் பரிந்துரை 'bad idea' என நேரடியாக விமர்சனம் செய்துள்ளனர்.
சோலார் மின்சாரத்தில் முதலீடு செய்யும் கோல் இந்தியா.. சும்மா இல்லை 5,650 கோடி ரூபாய் திட்டம்..!

ரகுராம் ராஜன்
இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை நிறுவனங்களுக்கு வங்கிகளைத் துவங்க அனுமதி கொடுத்தால் பொருளாதாரத்தில் அவர்களின் ஆதிக்கம் மேலும் மோசமடையச் செய்யும் என ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் IWG பரிந்துரை குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

IL&FS மற்றும் யெஸ் வங்கி
இந்தியா இன்னும் IL&FS மற்றும் யெஸ் வங்கிகளின் தோல்வியில் இருந்து பாடம் கற்க முயற்சி செய்து வரும் நிலையில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது. ரிசர்வ் வங்கியின் IWG பல சிறப்பான பரிந்துரைகளை இதுவரை தெரிவித்துள்ளது. ஆனால் இந்தப் பரிந்துரையை முதலில் நிராகரிக்க வேண்டும் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தரமான கேள்வி
இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை நிறுவனங்களே கடனில் இருக்கும் போது எப்படி இந்த நிறுவனங்கள் துவங்கப்படும் வங்கிகள் லாபம் அளிக்கும் கடனை கொடுக்க முடியும்.
ரிசர்வ் வங்கி போன்ற மத்தி வங்கி அமைப்புகளுக்கு அனைத்து விதமான தகவல்களுக்கும், உரிமையும், உலக நாடுகளின் புள்ளிவிவரமும் தெரிந்த நிலையிலும் வங்கிகள் கொடுக்கும் மோசமான கடனை கட்டுப்படுத்த முடியாத போது வர்த்தகம் மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள் துவங்கும் வங்கிகளால் எப்படி இதைச் செய்ய முடியும்.

வங்கிகள் திவால் மற்றும் வராக்கடன்
இந்திய வங்கிகள் அடுத்தடுத்த திவாலாகி வருவது மட்டும் அல்லாமல் பல வங்கிகள் அதிகளவிலான வராக்கடனில் தவித்து வரும் இந்தச் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஏன் புதிய கொள்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது..?
தற்போது இருக்கும் பிரச்சனையைத் தீர்க்காமல் அவசர அவசரமாகக் கொள்கை மாற்றம் செய்வதில் குறியாய் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது என ரகுராம் ராஜன் மற்றும் விரால் ஆச்சார்யா தங்களது அறிக்கையில் கேட்டுள்ளனர்.

ரகுராம் ராஜன் மற்றும் விரால் ஆச்சார்யா
ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ் பல்கலைக்கழகத்திலும், விரால் ஆச்சார்யா ஸ்டெர்ன் கல்லூரியில் நிதியியல் மற்றும் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளனர்.