ஏற்கனவே கொரோனா வைரஸ் உலக பொருளாதாரம் தொடங்கி உள்ளூர் இடலிக் கடை வரை எல்லோரையும் துவைத்து தொங்க போட்டுக் கொண்டு இருக்கிறது.
இதற்கு மத்தியில் ஆம்பன் புயல் வேறு வந்து இந்தியாவின் சில மாநிலங்களை சோதித்துவிட்டுப் போய் இருக்கிறது.
இப்படி உலகத்தில் எங்கு என்ன அபாயகரமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் வியாபாரிகள் தங்கள் வியாபாரங்களை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு உதாரணம் அமேசான்.

அமேசான்
அமேசான் நிறுவனம், ஏற்கனவே இந்தியாவில் பெரிய அளவில் கடை விரித்து சில்லறை வணிகர்களை காலி செய்து கொண்டு இருக்கிறது. இப்போது உணவு டெலிவரி வியாபாரத்தில் Amazon Food என்கிற பெயரில், தன் வலது காலை எடுத்து வைத்து, ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சொமேட்டோ போன்ற கம்பெனிகளுக்கு கிளி கிளப்பி இருக்கிறது.

என்ன ஸ்பெஷல்
எல்லோரையும் போல, அமேசான் கம்பெனியும் தொடர்பு இல்லாத (Contactless) டெலிவரி செய்வார்கள், உணவு விலை கொஞ்சம் கம்மியாக இருக்கும் போன்றவைகளைத் தாண்டி, ஒரு ஸ்பெஷல் ஐட்டத்தை இறக்கி இருக்கிறார்கள். அது தான் Hygiene Certification Bar. அப்படி என்றால் என்ன..?

விளக்கம்
அமேசான் நிறுவனம், ஒரு உணவகத்தில் சுத்த பத்தம் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவுக்கு சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். இந்த விதிமுறைகளை கடைபிடித்துக் கொண்டிருக்கும் உணவகங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் இருந்து மட்டும் தான் உணவு டெலிவரி செய்ய இருக்கிறார்களாம். இது தான் அமேசான் ஃபுட் கம்பெனியின் சிறப்பு.

எங்கு எல்லாம் கிடைக்கும்
இப்போதைக்கு பெங்களூர் நகர் புறத்தில் பெல்லந்தூர், ஹரலுர், மரதஹல்லி, வொயிட் ஃபீல்ட் போன்ற இடங்களில் தான் சேவையைத் தொடங்கி இருக்கிறார்களாம். கூடிய விரைவில், அடுத்த சில வாரங்களில், அதிக மக்கள் இருக்கும் நகரங்களுக்கு விரிவுபடுத்த இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

வியாபாரம் டல்
ஏற்கனவே உணவு டெலிவரி வேலையைப் பார்த்து வரும் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற டெலிவரி கம்பெனிகளுக்கே, கொரோனா வைரஸ் பிரச்சனையால், டெலிவரி வியாபாரம், வரலாறு காணாத அளவுக்கு மிகவும் டல்லாக இருக்கிறதாம். ஆனால் சுத்தத்தை முன்னிலைப் படுத்தி அமேசான் ஃபுட் தன் வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பார்ப்போம்
அமேசான் உணவு டெலிவரி வியாபாரத்தில், குறிப்பாக இந்தியாவில் ஜொலிக்குமா..? ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற கம்பெனிகள் அமேசான் ஃபுட் கம்பெனிக்கு எப்படி போட்டி போடுவார்கள்..? இப்படி பல கேள்விகளுக்கு, அடுத்த சில மாதங்களில் விடை தெரிந்து விடும். பொறுமையாகப் பார்ப்போம்.