இந்திய ரீடைல் துறையின் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் ஒப்பந்தம் அமேசான் தலையீட்டால் தடைப்பெற்று நிற்கிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் இந்திய ரீடைல் சந்தையின் பெரும் பகுதி வர்த்தகத்தை அடுத்த சில வருடங்களுக்குள் பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானியின் வளர்ச்சிக்கு அமேசான் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
அமேசான் - ரிலையன்ஸ் நிறுவனங்களின் வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் தற்போது பியூச்சர் குரூப் சிக்கிக்கொண்டு உள்ளது.

கிஷோர் பியானி
பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி சில நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மீதான தடைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும், ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யக் கோரியும் வேண்டுகோள் விடுத்தார்.

அமேசான்
இதை எதிர்த்து அமேசான் நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பிற்குச் சிங்கப்பூர் நடுவர் அமைப்பான SIAC-ன் இறுதித் தீர்ப்பு வரும் வரை ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் குறித்து எவ்விதமான அறிவிப்பையும், முடிவையும் அறிவிக்கக் கூடாது என்று கடிதம் அனுப்பியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கிஷோர் பியானியின் வேண்டுகோள்-ஐ ஏற்று மறு ஆய்வு செய்யும் பணியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு
இதோடு டிசம்பர் 21ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பிற்கு மேல் முறையீடும் செய்துள்ளது. கடந்த மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் அமேசானுக்குச் சாதகமாகத் தீர்ப்பை அளித்தாலும், ரிலையன்ஸ் பியூச்சர் ஒப்பந்தம் குறித்த முடிவை அந்தந்த அமைப்புகள் எடுக்க முழு உரிமை உண்டு எனவும் தெரிவித்தது.
இதற்கு எதிராக முடிவுகளை அறிவிக்க உரிமை அளிக்கக் கூடாது என அமேசான் மேல்முறையீடு செய்துள்ளது.

அமேசான் விதிமீறல்
இதேவேளையில் அமேசான் தனது இந்திய வர்த்தகப் பிரிவின் வாயிலாகப் பியூச்சர் குருப் உடன் செய்த ஒப்பந்தம் வாயிலாக, பியூச்சர் குரூப்-ஐ மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் அமேசானிடம் விளக்கம் கேட்டுள்ளது.
அமேசானின் இந்த ஒப்பந்தம் FEMA FDI விதிமுறைகளை மீறுவதாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கான பதிலை இன்னும் அமேசான் வழங்கவில்லை.