கடைக்குட்டி சிங்கம் அனந்த் அம்பானி-யின் கனவு திட்டம்.. 280 ஏக்கரில் பிரம்மாண்டம்..!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானியின் குடும்பம் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இந்நிலையில், தற்போது அம்பானி குடும்பத்தின் கடைக்குட்டியான அனந்த் அம்பானி விருப்பத்தின் பெயரில் உலகிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவை அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

உலகிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா
168 பில்லியன் டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜாம்நகரில் உலகிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா மற்றும் விலங்குகள் காப்பகத்தை அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சுமாப் 280 ஏக்கர் நிலத்தில் இந்த Greens Zoological Rescue and Rehabilitation Kingdom அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தத் திட்டம் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் 25 வயதாகும் இளைய மகனான அனந்த் அம்பானியின் பெட் பிராஜெக்ட் ஆகும்.

கடைக்குட்டி சிங்கம் அனந்த் அம்பானி
அனந்த் அம்பானி தற்போது ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி ஆகியோர் போல் நேரடி நிர்வாகப் பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினராக உள்ளார்.

குஜராத் ஜாம்நகர்
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமைக்க உள்ள, இப்புதிய உயிரியல் பூங்காவை ஜாம்நகரில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகிலேயே அமைக்க முடிவு செய்துள்ளது. ஜாம்நகரில் இருக்கும் இந்தக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தான் உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை ஆகும்.

100 வகை உயிரினங்கள்
இந்த உயிரியல் பூங்காவில் 100 வகையிலான விலங்குகள், பறவைகள், ஊர்வனவைகள் இருக்கும் என்றும், இதில் பெரும்பாலானவை உலக நாடுகளில் இருக்கும் விலங்குகளாக இருக்கும். குறிப்பாக ஆப்பிரிக்கச் சிங்கங்கள், pygmy hippo, வங்காள புலிகள், கோமோடோ டிராகன் ஆகியவை இந்த 280 ஏக்கர் பூங்காவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு எதிர்ப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டு வரும் இந்த 280 ஏக்கர் உயிரியல் பூங்கா 2023ஆம் ஆண்டு திறக்க முடிவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் கவ்ஹாத்தியில் இருக்கும் அரசு உயிரியல் பூங்காவில் இருக்கும் இரண்டு கருப்பு சிறுத்தைகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதேபோல் இஸ்ரேலில் இருந்து இரு வரிக் குதிரைகளையும் வாங்க ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.