இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளை மற்றும் சிகிச்சைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்யும் பணியில் தற்போது அரசு மட்டும் அல்லாமல் பல தனியார் மருத்துவ அமைப்புகளையும் தாண்டி பல கார்ப்பரேட் நிறுவனங்களும் உதவிக் கரம் நீட்டியுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கச் சேவையானவற்றைத் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிறுவனங்களுடன் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து சுமார் 5000 தனிப்பட்ட நோயாளிகள் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் இலவச கொரோனா டெஸ்ட் கிட்.. கிரண் மசும்தார் அதிரடி அறிவிப்பு..!

பிராஜெக்ட் ஸ்டே 1
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாகத் தனிப்பட்ட சிகிச்சை அறை உருவாக்க அப்போலோ மருத்துவமனை நிறுவனத்துடன் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாச்சீஸ் வங்கி, OYO, சோமோட்டோ மற்றும் லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனிச் சிகிச்சை அறைகளை உருவாக்கியுள்ளது.

5000 அறைகள்
இத்திட்டத்தில் OYO, லெமன் ட்ரீ ஹோட்டல் மற்றும் ஜின்ஜர் ஹோட்டல் நிறுவனங்கள் சுமார் 5000 படுக்கைகள் கொண்ட அறைகளைக் கொரோனா சிகிச்சைக்காகக் கொடுத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தற்போது கொடுக்கப்பட்டுள்ள இட வசதிகள் வைத்து தேவைக்கு ஏற்ற படுக்கைகளை அதிகரித்துக்கொள்ள முடியும் வகையில் இருப்பதால் 5000க்கும் அதிகமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.

செலவுகள்
தனிச் சிகிச்சை அறைகள் அமைப்பதற்கான செலவுகளை எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாச்சீஸ் வங்கி ஏற்க உள்ளது. முதலில் அவர்கள் தான் இச்செலவுகளை ஏற்க முன்வந்ததாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இம்மூன்று நிறுவனங்கள் தங்கும் செலவுகள், மருந்து செலவு, வைபை ஆகியவற்றுக்கான செலவுகளை ஏற்க உள்ளது.

தொடர் அதிகரிப்பு
இத்திட்டத்தின் படி முதற்கட்டமாக நாடு முழுவதும் 500 படுக்கைகள் தற்போது தயாராக உள்ள நிலையில் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் 50 முதல் 100 அறைகள் அதிகரிக்கப்படும் என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டணம்
OYO கொடுத்துள்ள அறைகளில் 50 சதவீதம் கட்டணம் இல்லாமல் கொடுத்துள்ளது. லெமென் ட்ரீ ஹோட்டல் நிறுவனம் ஒரு அறைக்கு 3000 ரூபாயும், ஜின்ஜர் ஹோட்டல் 2000 ரூபாய் பணம் வசூல் செய்கிறது. இந்தக் கட்டணத்தில் உணவும் அடக்கம், இந்த உணவை சோமேட்டோ கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.