இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 23% அதிகரித்து, 1556 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் 1262 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் 17% அதிகரித்து, 8,910 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 7,640 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன விற்பனை அதிகரிப்பு
புனேவை தலைமிடமாகக் கொண்ட இந்த வாகன நிறுவனத்தின் விற்பனை மொத்தமாக 9 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி கடந்த ஆண்டினை காட்டிலும் 26 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே உள்நாட்டில் 8 சதவீதம் வளர்ச்சியினைக் கண்டுள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனையானது 36 சதவீதம் கடந்த ஆண்டை காட்டிலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

வாகன சந்தையில் பங்கு
இந்த நிறுவனம் இந்தியாவின் மோட்டார் சைக்கிள் சந்தையில் இதன் பங்கினை 17.5 சதவீதத்தில் இருந்து, 18.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டில் இதன் பங்கு 18.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. எப்படி இருப்பினும் கடந்த சில காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது அதன் சந்தை பங்கினை சற்று அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகின்றது.

மூன்று சக்கர வாகன பிரிவில் சரிவு தான்
அதுவும் கொரோனாவுக்கும் மத்தியில் இரு சக்கர வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது, இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்புக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரு சக்கர வாகன பிரிவில் தனது ஆதிக்கத்தினை நிலை நாட்டினாலும், தேவை அதிகரித்து காணப்பட்டாலும், உள்நாட்டு வர்த்தக வாகன வணிகத்தில் சற்று அழுத்தத்தினை கண்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவை அதிகம்
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களான பல்சர், டாமினாரெ, கேடிஎம், Husqvarna. Pulsar125 உள்ளிட்ட வாகனங்களுக்கு உள் நாட்டு சந்தையில் பலமான தேவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக பல்சர் 125 வாகனத்தின் சந்தையில் 22.8% பங்கினை வகிப்பதாகவும், இதே உள்நாட்டு கமர்ஷியல் வாகன வர்த்தகத்தில் தாக்கம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.