பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்ட முக்கியமான அறிவிப்பாக மட்டும் அல்லாமல் வரலாற்று முக்கிய அறிவிப்பாகவும் விளங்குவது ரிசர்வ் வங்கி வெளியிடும் டிஜிட்டல் ரூபாய் தான்.
இப்படி டிஜிட்டல் ரூபாய் மூலம் என்ன நன்மை..? யாருக்கெல்லாம் பிரச்சனை..?
தேர்தலுக்கு மயங்காத பட்ஜெட்.. ஆனா டிமாண்ட்-ஐ உருவாக்க மறந்துவிட்டது மோடி அரசு..!

டிஜிட்டல் ரூபாய்
முதலில் டிஜிட்டல் ரூபாய் பற்றிச் சில அடிப்படைகளைத் தெரிந்துகொண்டால் மட்டுமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். டிஜிட்டல் ரூபாய் அறிமுகத்தின் மூலம் சீனா, ஐரோப்பா போன்ற எலிட் நாடுகள் இருக்கும் பட்டியலில் நுழைய உள்ளது.

கிரிப்டோகரன்சி - டிஜிட்டல் கரன்சி
இதற்கு முதல் படியாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது பிட்காயின், எதிரியம் போன்ற கிரிப்டோகரன்சிக்கு முற்றிலும் மாறுபட்டது டிஜிட்டல் கரன்சி. இதை ஒரு நாட்டின் ரிசர்வ் வங்கியால் மட்டுமே உருவாக்க முடியும். கிரிப்டோ-வை போல் யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பது இல்லை.

central bank digital currency அமைப்பு
ரிசர்வ் வங்கி தான் இந்தியாவில் அனைத்து ரூபாய் மற்றும் நாணயங்களை வெளியிடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் டிஜிட்டல் நாணயமான டிஜிட்டல் ரூபாயை வெளியிடுவது ரிசர்வ் வங்கி இல்லை, புதிதாக உருவாக்கப்படும் central bank digital currency (CBDC) என அமைப்பு தான்.

ரூபாய் நோட்டு
இந்தியாவில் எப்படி 2000 ரூபாய், 500 ரூபாய், 100 ரூபாயை பயன்படுத்துகிறோமோ அதேபோலத் தான் டிஜிட்டல் கரன்சியையும் பயன்படுத்த முடியும், ஆனால் டிஜிட்டல் முறையில் பயன்படுத்தப்படும்.

டிஜிட்டல் பொருளாதாரம்
இந்தியாவில் ஆன்லைன், ஆப்லைன் பேமெண்ட் சேவைகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் டிஜிட்டல் ரூபாய் ஆரம்பம் முதலே பெரிய அளவில் பிரபலம் அடையும். இதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகப்பெரிய உயரத்தை அடையும்.

பணப்புழக்கம் மற்றும் கருப்புப் பணம்
டிஜிட்டல் கரன்சி பயன்பாடு அதிகரித்தால் ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு நாட்டின் பணப்புழக்கத்தை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கருப்புப் பணத்தை மத்திய அரசால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.

வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம்
மேலும் டிஜிட்டல் கரன்சி மூலம் உள்நாட்டுப் பணப் பரிமாற்றம் மட்டும் அல்லாமல் தங்கு தடையில்லாத வெளிநாட்டுப் பணப் பரிமாற்றமும் 24*7 செய்ய முடியும். டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சியை உருவாக்கும் பிளாக்செயின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படுவதால் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமும் சாத்தியப்படும்.

ரூபாய் நோட்டு அச்சிடும் செலவு
மேலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் மற்றும் பயன்பாட்டின் மூலம் இந்திய அரசுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் செலவுகள் பெரிய அளவில் குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதேபோல் ரூபாய் நோட்டுக்கான பாதுகாப்பை அதிகரிக்கச் செலவிடப்படும் தொகையையும் சேமிக்க முடியும்.

ஆபத்து இல்லை
central bank digital currency (CBDC) அமைப்பு ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இயங்கும் என்பதால் டிஜிட்டல் ரூபாய்க்கு எவ்விதமான ஆபத்தும் இல்லை, மக்கள் எவ்விதமான பயமும், தயக்கமும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

ரூபாய் மதிப்பு
மேலும் மக்கள் இந்த டிஜிட்டல் கரன்சியை ரூபாய் மதிப்புக்கு இணையான மதிப்புக்குப் பெற முடியும். இதற்கு எவ்விதமான வரியும் இல்லை, சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வங்கியில் பழைய ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு புதிய ரூபாய் நோட்டைப் பெறுவது போலத் தான்.