நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் கச்சா எண்ணெய் விலையானது , சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் எதிரொலியானது இறக்குமதி நாடுகளில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
குறிப்பாக பணவீக்கம் மிக மோசமான உச்சத்தினை எட்ட தொடங்கியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டும் அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது சாமானிய மக்கள் முதல், அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
இலங்கையை போன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனை வரலாம்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!

மக்கள் பாதிப்பு
குறிப்பாக சாமானிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். இது மக்களின் கைகளில் பணப்புழக்கத்தினை குறைக்கலாம். இது தேவையை குறைக்க வழிவகுக்கலாம். ஆக மொத்தத்தில் இது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏற்கனவே கொரோனாவில் முடங்கிபோன மக்கள் அதிலிருந்து தற்போது தான் மெல்ல மெல்ல மீளத் தொடங்கியுள்ளனர்.

சாமானியர்களுக்கு பிக் ரீலிப்
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தான் இந்திய அரசு வரி விகிதத்தினை குறைத்துள்ளது. குறிப்பாக பெட்ரோலுக்கு லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர அசின் உஜ்வாலா சிலிண்டருக்கும் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் ரீலிப் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு குறையும்
குறிப்பாக பெட்ரோல் , டீசல் மீதான வரி குறைப்பால், எரிபொருள் செலவினை மிகப்பெரிய அளவில் குறைக்கலாம். இது பணவீக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றும். இது உணவு பொருள் விலை குறைய வழிவகுக்கலாம். மொத்ததில் சாமானியர்களின் செலவினைக் குறைக்க வழிவகுக்கலாம். சாமானியர்களின் பட்ஜெட்டில் உபரி கிடைக்கலாம். ஆனால் இதனால் அரசுக்கு ஆண்டு தோறும் 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படலாம்.

சாமானயர்களுக்கான சிலிண்டர் மானியம்
இன்றைய காலகட்டத்தில் சமையலறை தேவைகயான அடிப்படை தேவைகளில் சமையல் எரிவாயும் ஒன்றாக மாறியுள்ளது. ஆக எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானிய அறிவிப்பானது மேற்கொண்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். மத்திய அரசு ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானிய தொகையினை 12 சிலிண்டர்களுக்கு வழங்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசின் உஜ்வாலாவில் இணைந்துள்ள 9 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் அரசுக்கு 6100 கோடி ரூபாய் கூடுதலாக செலவழிக்க நேரிடலாம்.

விவசாயிகளுக்கு உதவும் உர மானியம்
மத்திய அரசின் பட்ஜெட்டில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மானியமாக 1.05 லட்சம் கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்புகளில் கூடுதலாக 1.10 லட்சம் கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் உரங்களின் விலையானது மிகப்பெரியளவில் உயர்ந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம், இது விளை பொருட்கள் விலையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசின் இந்த மானிய அறிவிப்பானது, விவசாயிகள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தொழில் துறையினருக்கு பலன்
இந்தியா இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் சில பொருட்களுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் இடை பொருட்கள் மீதான சுங்க வரியையும் குறைக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது உற்பத்தி செலவினை குறைக்கலாம். ஆக இது பொருட்களின் விலையை குறைக்க வழிவகுக்கலாம். குறிப்பாக இரும்பு மீதான வரி குறைப்பானது தொழில் துறை வளர்ச்சிக்கு உதவலாம். மேலும் வீடு கட்டுமானத்தில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரியளவில் உதவலாம்.