போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்கள் சொல்வதனை போல், பிட்காயின் தங்கத்தினை ஓரங்கட்டி விடும் போல் இருக்கிறது. ஏனெனில் கிடு கிடு ஏற்றத்தில் இருந்து வருகிறது.
கடந்த 2020லேயே கொரோனா ரணகளத்திற்கு மத்தியிலும், பிட்காயின் விலையானது, தங்கத்தினை ஒரங்கட்டி புதிய வரலாற்று உச்சத்தினை எட்டியது. இதற்கிடையில் தற்போது புத்தாண்டு முடிந்து சில தினங்களே ஆன நிலையில், மீண்டும் புதிய உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது.
சில நாடுகளில் தற்போது க்ரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. அதோடு கொரோனா காலத்திலும் பிட்காயின் விலையானது, எந்தவொரு முக்கிய காரணிகளாலும் பாதிக்கப்படவில்லை. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் கூட, க்ரிப்டோ கரன்சியில் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதனால் க்ரிப்டோ கரன்சி விலையும் பலமான ஏற்றம் கண்டு வருகின்றது.

பிட்காயின் புதிய உச்சம்
இதற்கிடையில் பிட்காயின் மதிப்பு 30,000 டாலர்களை முதல் முறையாக தாண்டியுள்ளது. இது கடந்த சனிக்கிழமையன்று 30,800 ரூபாயினை தொட்டுள்ளது. இது மிகப்பெரிய முதலீட்டாளர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தின் மத்தியில், இதன் விலையானது அபரிதமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் இந்த டிஜிட்டல் கரன்சியானது, கிட்டதட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டின் டிசம்பர் 16 அன்று கூட இது 20,000 டாலர்களாகத் தான் இருந்தது.

பிட்காயினில் முதலீட்டாளர்கள் ஆர்வம்
குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்க முதலீட்டாளர்களால் பிட்காயின் தேவை அதிகரித்துள்ளது. ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங், விரைவான ஆதாயம் உள்ளிட்ட பல காரணிகளால் முதலீட்டாளர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிட்காயின் விலையானது வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு வருகின்றது.

நீண்டகால நோக்கில் முதலீடுகள் அதிகரிப்பு
சமீபத்தில் ஜேபி மார்கன் சேஸ் அண்ட் கோ ஒரு அறிக்கையில், முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக் கொள்வது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பாதிக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது. அதோடு தங்கத்தில் உள்ள முதலீடுகள் வெளியே எடுக்கப்படலாம் என்றும் கூறியது. அதோடு முதலீட்டாளர்கள் க்ரிப்டோகரன்சியில் நீண்ட கால நோக்கில், முதலீடுகளை அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறைந்து, பிட்காயினில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்காயின் வரலாற்று உச்சம்
தற்போது பல நாடுகளில் க்ரிப்டோகரன்சி தடை விதிக்கப்பட்ட நிலையிலும் கூட, இதுவரை இல்லாத அளவு 30,800 டாலரை தொட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வளர்ந்து வரும் முதலீட்டு ஆப்சனான பிட்காயினில் முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் கூட கிரிப்டோகரன்சி 5000 டாலர்கள் என்று இருந்த நிலையில், இன்று நினைத்து பார்க்க முடியாத அளவு எழுச்சி கண்டுள்ளது. இதே கடந்த டிசம்பரில் இருந்து 50% ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் Vs பிட்காயின்
ஆக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பிட்காயினுக்கு மாற்ற தொடங்கினால், வரும் ஆண்டுகளில் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு இது சிக்கலாக இருக்கும். இப்போதே நிறுவன முதலீட்டாளர்கள் பிட்காயின் முதலீட்டினை தேர்தெடுக்க தொடங்கியுள்ளனர். ஆக இதனால் தங்கம் விலை பாதிக்கப்படுமா? அப்படியே பாதித்தாலும் விலை குறையுமா? அல்லது பாதுகாப்பு புகலிடமாகவே இருக்குமா? கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே. எப்படி இருந்தாலும் சமீபத்தில் பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் தான்.