முதலீட்டுச் சந்தையில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் பல கோடி முதலீட்டாளர்களின் முதலீட்டைக் காப்பாற்றிய தங்கம், இந்த ஆண்டு ரிஸ்க் எடுத்து கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்தவர்களுக்கு 1.5 மடங்கு லாபம் கிடைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா.
அதிலும் குறிப்பாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு எனக் கருதப்படும் தங்கம் மீதான முதலீட்டில் கிடைத்த லாபத்தை விடவும் அதிகப்படியான லாபம் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துள்ளது.
தங்கத்தில் இப்போது முதலீடு செய்வது சரியா..?!

2020ல் தங்கத்தின் பயணம்
2020ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி சர்வதேச சந்தையில் ஸ்பாட் ரேட் வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (டிசம்பர் 07) 4,932 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு கிராம் தங்கம் அதிகப்படியாக 5,500 ரூபாய் வரைக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மீதான லாபம்
ஜனவரி 1ஆம் தேதி இருந்த 3500 ரூபாய்க்கும் இன்றைய விலை நிலவரத்திற்கும் ஒப்பிடுகையில் சுமார் 40 சதவீத லாபம் கிடைத்துள்ளது. இதேபோல் அதிகப்படியான 5500 ரூபாய் விலையுடன் ஒப்பிடுகையில் 57.14 சதவீத லாபம்.
இது ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கும் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த லாபமாக இருக்கலாம். ஆனால் ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்குக் கிரிப்டோகரன்சி முதலீட்டில் கிடைத்த லாபம் மிகப்பெரியது.

பிட்காயின் முக்கிய முதலீடு
கிரிப்டோகரன்சி உலகின் மிக முக்கியக் கரன்சியாக விளங்கும் பிட்காயின் 2020ஆம் ஆண்டுக் கொரோனா பாதிப்பின் மூலம் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களில் முக்கிய முதலீட்டுத் தளமாக மாறியுள்ளது. குறிப்பாகத் தனியார் முதலீட்டு நிறுவனங்கள், நிறுவன பங்கு முதலீட்டாளர்கள், பென்ஷன் பண்ட் முதலீட்டாளர்கள், டெக் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி முக்கிய முதலீடாக மாறியுள்ளது.

2020ல் பிட்காயின் பயணம்
கொரோனா பாதிப்புகளும் தொற்றின் ஆரம்பக்கட்டமான ஜனவரி மாதம் 1ஆம் தேதி வெறும் 7,100 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று டிசம்பர் 7ஆம் தேதி 19,189.33 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் பிட்காயின் அதிகப்படியாக 19,464 டாலரை அடைந்து, இது பிட்காயினின் வரலாற்று உச்ச அளவீடான 19,920 டாலருக்கும் மிகவும் நெருக்கமான விலை.

பிட்காயின் தொடர் உயர்வு
2020ஆம் ஆண்டில் தங்கம் அதன் உச்ச விலையான 5,500 ரூபாய் அடைந்த பின்பு தொடர் சரிவை எதிர்கொண்டு தினமும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பிட்காயின் முதலீட்டில் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 170.27 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.
ஆனால் பிட்காயின் தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது குறிப்பாகத் தங்கம் உச்ச விலையை அடைந்த அதே காலகட்டத்தில் பிட்காயின் மீதான முதலீடு அதிகரித்து ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடையத் துவங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து
அதுமட்டும் அல்லாமல் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டின் மக்களுக்குச் செலுத்த அனுமதி அளிக்கப்பட்ட பின்பு தங்கம் விலை சரிந்ததைப் போல் பிட்காயின் மதிப்பு சரியவில்லை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள்
தனியார் முதலீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்கு முதலீட்டாளர்கள், பென்ஷன் பண்ட் முதலீட்டாளர்கள், டெக் முதலீட்டாளர்கள் எனச் சந்தையில் புதிய முதலீட்டுத் தளத்தைத் தொடர்ந்து தேடும் குழு பிட்காயின் மீது அதிகளவில் முதலீடு செய்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு விலை குறையாமல் உள்ளது.

20,000 டாலரை தொடும் பிட்காயின்
மேலும் அடுத்தச் சில நாட்களுக்குள் பிட்காயின் அதன் வரலாற்று உச்ச விலையான 19,920 டாலரை தாண்டி 20000 டாலரை தொடும் என முதலீட்டாளர்கள் எதிர் பார்த்து வருகின்றனர்.

Paypal கிரிப்டோ பேமெண்ட்
மேலும் அமெரிக்கா போன்ற டிஜிட்டல் பேமெண்ட் துறையில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் Paypal போன்ற ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் பேமெண்டுக்கு கிரிப்டோகரன்சியைப் பெறுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியிலும் இதன் பிட்காயின் மீது ஆர்வம் குறையவில்லை.

பேஸ்புக்கின் லிப்ரா காயின்
இதேபோல் பேஸ்புக் தனது LIBRA காயினை அறிமுகம் செய்ய முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களும், இச்சந்தைக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. அமெரிக்காவில் பல முன்னணி டெக் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி சந்தைக்குள் நுழையச் சரியான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும் கருத்து நிலவுகிறது.