அதிநவீன கார் தயாரிப்பில் முன்னோடியான BMW கொரோனா பாதிப்பின் காரணமாகத் தனது உலகளாவிய வர்த்தகத்தில் மிகவும் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்ட காரணத்தினால் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பையும், நிதி நெருக்கடியும் எதிர்கொண்டுள்ளது.
இதன் எதிரொலியாகச் செலவுகளைக் குறைக்கவும், புதிய திட்டத்தில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் முடிவு செய்து யாரும் எதிர்பார்க்காத வகையில் முக்கியமான முடிவை BMW நிர்வாகம் எடுத்துள்ளது.
ஐடிசி புதிய திட்டம்.. விவசாயிகளுடன் கூட்டணி..!

ஊழியர்கள் பணிநீக்கம்
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பைச் சமாளிக்க, BMW நிர்வாகம் ஜெர்மன் வொர்க்ஸ் கவுன்சில் அமைப்பிடம் ஆலோசனை செய்துள்ளது. இந்த ஆலோசனை முடிவில் BMW நிர்வாகம் செலவுகளைக் குறைக்கப் பல்வேறு திட்டங்களில் இருந்து சுமார் 6000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலையும் ஜெர்மன் வொர்க்ஸ் கவுன்சில் அமைப்பிடம் பெற்றுள்ளது.
இது மட்டும் அல்லாமல் அடுத்த சில மாதங்களுக்குப் புதிதாக யாரையும் பணியில் அமர்த்த கூடாது என்றும் BMW நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முக்கியத் திட்டம்
மேலும் சர்வதேச ஆட்டோமொபைல் துறையில் ஆட்டோமேட்டிங் டிரைவிங் டெக்னாலஜி தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக இருக்கும் நிலையில், BMW நிறுவனமும் இத்துறையில் இறங்க முடிவு செய்து கடந்த வருடம் மிகப்பெரிய கூட்டணியை அமைத்தது.
ஆம் BMW மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் AG ஆகிய நிறுவனங்கள் கூட்டணியில் ஆட்டோமேட்டிங் டிரைவிங் டெக்னாலஜி உருவாக்கக் கூட்டணி அமைத்திருந்தது. தற்போது இக்கூட்டணியைத் தற்போதைய வர்த்தகம் மற்றும் நிதி நிலைமையில் தொடர முடியாது என இருதரப்பும் முடிவு செய்து ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

ஒரு வருடம்
கடந்த ஜூலை 2019இல் தான் BMW மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் AG நிறுவனங்கள் மத்தியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. கொரோனா தாக்கத்தல் வெறும் ஒரு வருடத்திலேயே சர்வதேச ஆட்டோமொபைல் துறைக்குத் தேவையான முக்கியமான ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது.
இது சர்வதேச ஆட்டோமொபைல் சந்தைக்கும் மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

2024
இக்கூட்டணி 2024ஆம் வருடத்திற்குள் தானியங்கி டிரைவிங் சிஸ்டம், தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வகையிலான தானியங்கி டிரைவிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் சிஸ்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து, இருநிறுவனங்கள் தயாரிக்கும் கார்களில் இதைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து ஆகியுள்ள நிலையில் இதுபோன்ற தொழில்நுட்பம் மக்களுக்குக் கிடைக்கும் இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அதுவரையில் தானியங்கி டிரைவிங் சிஸ்டத்தில் டெஸ்லா தான் ராஜா.