கொரோனா பாதிப்பின் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைவாக இருக்கும் நிலையில், சவுதி அரேபியா ரஷ்யா உடனான பிரச்சனையின் காரணமாகத் தேவைக்கு அதிகமான அளவில் உற்பத்தி செய்து கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 20 டாலர் என்ற மோசமான நிலைக்குக் கொண்டு வந்தது.
தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்திய முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

சவுதி பேச்சுவராத்தை
சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகளவில் குறைந்துள்ள நிலையிலும் சவுதி அதிகளவிலான உற்பத்தி செய்து மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் அடுத்த சில வாரங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தியை 4 பில்லியன் பேரல் அளவுக்குக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விலை உயர்வு
சவுதி தனது உற்பத்தி குறைந்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குக் கட்டாயம் 40 டாலர் வரையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் உயரும். இதேவேளையில் கொரோனா பிரச்சனை தீர்ந்து உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் அப்போதும் நிச்சயம் 40 டாலர் என்ற அளவை எளிதாக அடையும். இந்த நிலை அடையும் முன்னர் இந்தியா முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவின் முடிவு
தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போதே அதைச் சேமிக்கும் இடம் இருக்கும் வரையில் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. அதுவும் சவதி அளிக்கும் தள்ளுபடி விலையைப் பயன்படுத்திக் கொண்டு அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சீனா
ஏப்ரல் மாத துவக்கத்தில் சீனா சர்வதேச சந்தையில் நிலவும் குறைவான விலை நிலையைப் பயன்படுத்திக்கொள்ள அதிகளவிலான கச்சா எண்ணெய்யை வாங்கிச் சேமிக்கத் திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவும் இதே முடிவு எடுத்துள்ளது. இதற்காக மத்திய அரசு சவுதி அரசு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
இந்தியா தேவைக்கு அதிகமாகக் கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தால் கொரோனா பாதிப்பு முடிவிற்குப் பின் விற்பனை அதிகமாகும் போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 மாதமாக கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் சவுதி உட்பட அனைத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளும் கடுமையான வருவாய் சரிவை சந்தித்துள்ளது.