அனைத்துத் தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பட்ஜெட் அறிக்கையில் தனிநபர்கள் குறிப்பாக மாத சம்பளக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் மிக முக்கியமான சலுகையை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபக்கம் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் வர்த்தகம் மற்றும் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், 5 மாநில தேர்தல் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்கும் நிலையில் தனிநபர்களையும், மாத சம்பளக்காரர்களையும் கவரும் வகையிலான அறிவிப்புகள் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்-ல் குட்நியூஸ்.. வருமான வரிச் சலுகை அதிகரிப்பு..!

தனிநபர் மற்றும் மாத சம்பளக்காரர்கள்
மத்திய அரசு தனிநபர் மற்றும் மாத சம்பளக்காரர்களுக்கு அளிக்கப்படும் சேமிப்பு திட்ட முதலீட்டுக்கான வரிச் சலுகை மற்றும் standard deduction அளவீட்டை கிட்டதட்ட இரட்டிப்பு செய்யும் முக்கியமான அறிவிப்பை இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்க ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

200000 ரூபாய்
தற்போது தனிநபர் வருமான வரி சட்டதிட்டத்தின் படி 80சி பிரிவின் கீழ் 1,50,000 ரூபாயும், standard deduction மூலம் அனைவருக்கும் 50,000 ரூபாய்க்குமான வரிச் சலுகை கிடைத்து வருகிறது.

முதலீடு
இந்த அளவீட்டை அதிகரிப்பது மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களது முதலீட்டைப் பல பிரிவில் விரிவாக்கம் செய்ய முடியும், இதேபோல் அரசு முதலீட்டுத் திட்டத்தில் மக்கள் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் அரசு கையில் கிடைக்கும் பணத்தின் அளவும் அதிகரிக்கும்.

எப்படி..?
மத்திய அரசு, சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கும் வரிச் சலுகை ஒவ்வொரு திட்டத்திற்கும் மாறுபடுவதால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் புதிதாக வருமான வரிச் சேமிப்புத் திட்டத்தைக் கொண்டு வர உள்ளதா அல்லது ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் முதலீட்டு வரம்பை அதிகரிக்க உள்ளதா அல்லது முதலீட்டு முறை மற்றும் வரி கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய உள்ளதா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

EET முறை தான் சரி
இதேபோல் தற்போது அரசின் நிதிநிலையைப் பாதிக்காத வண்ணம், தனிநபர் முதலீட்டுக்கு அதிகப் பலன் கொடுக்க வேண்டும் என்றால் மத்திய அரசு exempt-exempt-tax (EET) முறையைத் தான் பயன்படுத்த வேண்டும்.
அதாவது EET முறையின் கீழ் ஒரு சேமிப்புத் திட்டமானது பங்களிப்பின் போது மற்றும் கார்பஸ் குவிக்கும் போது வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும், மேலும் திரும்பப் பெறும்போது மட்டுமே வரி விதிக்கப்படும். இதோடு கேப்பிடல் கெயின்ஸ் சேர்க்கப்படும்.
இந்த முறையைப் பயன்படுத்தித் தான் பட்ஜெட் 2022ல் வருமான வரிச் சலுகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

standard deduction அதிகரிப்பு
மேலும் கடந்த சில வாரமாகவே மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் standard deduction பிரிவில் அளிக்கப்பட்டு வரும் 50,000 ரூபாய் வரி சலுகையை 75,000 முதல் 1,00,000 ரூபாய் வரைவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருத்து நிலவி வரும் நிலையில், அதிக வருமானத்தைப் பெற வேண்டும் என இலக்கில் இருக்கும் மத்திய அரசுக்கு இதைச் செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.

பிரதமர் மோடி
இதனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனிநபர்களுக்கும், மாத சம்பளக்காரர்களுக்கும் எப்படி இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறது என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.