மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையின் படி மாதம் 50 லட்சம் ரூபாய் டர்ன்ஓவர் செய்யும் அனைத்து வர்த்தகங்களும் 1 சதவீத ஜிஎஸ்டி தொகையைப் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். இந்த இப்புதிய விதிமுறையின் படி நாட்டில் போலி பில் மோசடி செய்வது அதிகளவில் குறைக்க முடியும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் படி தற்போது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை வெளியிட்டுள்ள விதி 86B கீழ் ஜிஎஸ்டி வரிக்கு வர்த்தகங்களின் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பணத்தைப் பயன்படுத்தும் அளவு 99 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்யும் அனைத்து வர்த்தகங்களும் 1 சதவீத ஜிஎஸ்டி வரியை இனி பணமாகச் செலுத்த வேண்டும்.
இதேபோல் ஒரு நிறுவனத்தின் டர்ன்ஓவரை கணக்கிடும் போது ஜிஎஸ்டி வரி இல்லாத பொருட்களும், 0% ஜிஎஸ்டி வரி உள்ள பொருட்கள் மீதான வர்த்தகத்தையும் கணக்கில் சேர்க்கக் கூடாது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அல்லது ஏதேனும் ஒரு பார்ட்டனர் 1 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரி செலுத்தி இருந்தாலோ, அல்லது பதிவு செய்யப்பட்ட நபர் முந்தைய வருடத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகப்
பயன்படுத்தப்படாத இன்புட் டாக்ஸ் கிரெடிட் தொகை ரீபென்ட் பெற்று இருந்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய 89B கட்டுப்பாடு பொருந்தாது.
GSTR 3B சமர்ப்பிக்காத நிறுவனங்களுக்கு ஈபில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது போல் தற்போது GSTR1 அறிக்கை சமர்ப்பிக்காத நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 2வது வாரத்தில் போலி ஜிஎஸ்டி பில் (Invoice) மோசடிக்கு எதிராக மத்திய ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவு மற்றும் CGST கமிஷனர்ஸ் ஆகிய அமைப்பு இணைந்து எடுத்த நடவடிக்கையில் இதுவரை 4 பட்டய கணக்காளர்கள் மற்றும் போலி பில்களை ஒப்புதல் அளிக்கும் ஒரு பெண் உட்படச் சுமார் 132 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் 1,430 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, நாடு முழுவதும் சுமார் 4,586 போல் GSTIN கண்டறியப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் பெரிய அளவில் நடக்கும் மோசடியாகவும் பார்க்கப்படும் காரணத்தால் மத்திய அரசு கடந்த 2 மாதமாகக் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் தான் தற்போது புதிதாக 89B கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.