இந்தியாவில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது ரீடைல் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றி வரும் நிலையில், டாடா குழுமம் இந்த லாக்டவுன் காலத்தில் அதிகப்படியான ரீடைல் சேவைகளை அறிமுகம் செய்தது மட்டும் அல்லாமல் பல ரீடைல் நிறுவனங்களையும் கைப்பற்றியது.
இதன் மூலம் டாடா குழுமம் நாட்டின் மிக்பெரிய ரீடைல் நிறுவனமாக உருவாக வேண்டும் என்பதற்காக டாடா குழுமத்தில் இருக்கும் அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் டிஜிட்டல் வர்த்தகத் தளத்திற்குக் கொண்டு வந்தது.
Ratan Tata: பாட்டி வளர்ப்பு முதல் திருமணம் வரை..!

டிஜிட்டல் விற்பனை
அதாவது ஆன்லைன் விற்பனையில் இல்லாத நிறுவனங்களை ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறையில் வர்த்தகம் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியது டாடா குழுமம். தற்போது இந்த டிஜிட்டல் வர்த்தகங்கள் அனைத்தையும் ஓரே தளத்தில் கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சி தான் சூப்பர் ஆப்.

ஏப்ரல் 7ஆம் தேதி
இந்த முக்கியமான திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக இயங்கி வரும் டாடா குழுமம் வருகிற 7ஆம் தேதி டாடா நியூ என்ற பெயரில் சூப்பர் ஆப் அறிமுகம் செய்கிறது. இந்தச் சூப்பர் ஆப்-ல் டாடா குழுமத்தில் இருக்கும் இன்சூரன்ஸ் சேவை முதல் மளிகை பொருட்கள், ஆடைகள் வரையிலான அனைத்து ரீடைல் சேவைகளும் இருக்கும்.

விஸ்தாரா டூ வெஸ்ட்சைட் வரை
உதாரணமாக விஸ்தாரா, ஏர்ஏசியா, ஏர் இந்தியா விமானங்களின் டிக்கெட்டுகள், தாஜ் குரூப் ஹோட்டல்களின் புக்கிங் துவங்கி, பிக் பேஸ்க்ட்-ல் இருந்து மளிகை பொருட்கள், 1MG நிறுவனத்தில் இருந்து மருந்து, க்ரோமா-வில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வெஸ்ட்சைட் நிறுவனத்தில் இருந்து ஆடைகள் என அனைத்தையும் இந்த டாடா நியூ ஆப்பில் இருந்து மக்கள் வாங்கவும், பெறவும் முடியும்.

டாடா ஐபிஎல்
இதற்காக டாடா குழுமம் ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே விளம்பரம் செய்யத் துவங்கியுள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலும் டாடா நியூ சூப்பர் ஆப்-க்கான டீசர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஆப்
இந்தியாவில் இதுபோன்ற சூப்பர் ஆப் ஏற்கனவே உள்ளது, உதாரணமாக அமேசான், பேடிஎம், ரிலையன்ஸ் ஜியோ போன்ற அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்தச் சூப்பர் ஆப் வைத்துள்ளது. தற்போது டிஜிட்டல் சந்தையில் இந்த நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தான் டாடா குழுமம் டாடா நியூ சூப்பர் ஆப் அறிமுகம் செய்துள்ளது.

போட்டி
அமேசான், பேடிஎம், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே இத்துறையில் ஆதிக்கம் செய்து வரும் நிலையில் டாடா குழுமத்தின் பெரிய அளவிலான தாக்கத்தை உடனடியாக ஏற்படுத்த முடியாது என்றாலும் குறிப்பிட்ட வர்த்தகத்தைப் பெற முடியும். ஆனால் ஒரு பிரச்சனை உள்ளது.

டெலிவரி கட்டமைப்பு
மொத்த விற்பனையிலும், ரீடைல் கடை விற்பனையிலும் டாடா மிக்பெரிய கட்டமைப்பை உருவாக்கியிருந்தாலும், டிஜிட்டல் டூ கஸ்டமர் வர்த்தகப் பிரிவில் பெரிய அளவிலான அனுபவம் இல்லை. இதேவேளையில் டெலிவரி கட்டமைப்பை எந்த அளவிற்கு வைத்துள்ளது என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது. இதில் தான் டாடாவின் வெற்றியும் அடங்கியுள்ளது.

யூபிஐ பேமெண்ட்
இதேபோல் அமேசான் தளத்தில் இருப்பது போல் டாடா குழுமம் யூபிஐ பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் டாடா நியூ வாயிலாக டிஜிட்டல் பேமெண்ட் சேவையிலும் இறங்க உள்ளது டாடா குழுமம்.