பொதுவாக அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளிலும் பணிபுரியும் புலம் பெயர் ஊழியர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்.
எனினும் கொரோனாவின் வருகைக்கு பிறகு பல நாடுகளும் சொந்த நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கிய நிலையில், வேலை வாய்ப்புகள் என்பது இந்தியர்களுக்கு கணிசமாக குறைந்தது.
ஆரம்பத்தில் கொரோனா, தற்போது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையால் உலகின் பல நாடுகளும் மந்த நிலையில் சிக்கித் தவித்து வருகின்றன. பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி பாதைக்கு தள்ளப்பட்டுள்ளன. வேலையின்மை அதிகரித்து வருகின்றது. ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கூட கனடாவில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்
சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் 10 லட்சத்திற்கும் அதிகமான வேலை கனடாவில் காலியாக இருப்பதாக கூறப்பட்டது. இதனால் வெளி நாட்டவர்களை பணியில் அமர்த்த கனடா ஆர்வம் காட்டி வருகின்றது. கனடா தனது குடியேற்ற இலக்குகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகரிக்க திட்டம்
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான புதியவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக, கனடாவிற்கு நிறைய பேர் தேவை என அந்த நாட்டின் அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய அறிக்கை ஒன்றில் கனடாவில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆக எதிர்காலத்தில் கனடாவின் தேவை இன்னும் அதிகரிக்கும். வெளி நாட்டு குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என கூறியிருந்தது.

7ல் ஒருவர் வயதானவர்
தற்போது கனடாவில் 7 பேரில் ஒருவர் 55 - 64 வயதிற்குள் உள்ளனர். இந்த காலகட்டத்தில் கனடாவில் வேலை வாய்ப்பு என்பது இதுவரை இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால் அது வணிகத்தில் பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தும் என்பதால், கனடா வெளி நாட்டு ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விசா நடவடிக்கையில் தளர்வுகளை அறிவித்து வருகின்றது.

மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும்
மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க வேண்டிய அவசியத்தினை பற்றி கூறிய ஃப்ரேசர், தொடர்ந்து குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது 2021ல் 4,05,000 பேரை வரவேற்றுள்ள நிலையில், இதன் எதிர்கால இலக்குகளையும் மாற்றி அமைத்துள்ளது.

5 லட்சம் பேர் இலக்கு
2023ம் ஆண்டில் இந்த இலக்கு 4,65,000 பேராகவும், 2024ம் ஆண்டில் 4,85,000 பேராகவும், 2025ல் 5 லட்சம் பேராக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. 2016 முதல் 2021 வரையில் கனடாவில் 1.3 மில்லியன் புலம் பெயர் மக்கள் கனடாவில் குடியேறியுள்ளனர் என சுட்டிக் காட்டியுள்ளார்.

மொத்த மக்கள் தொகை
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கனடாவின் மொத்த மக்கள் தொகை 39 மில்லியன் ஆகும். ஒவ்வொரு 4 பேரிலும் ஒருவர் வெளி நாட்டில் பிறந்தவர். இந்த எண்ணிக்கையானது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களுக்கு வாய்ப்பு
2025ல் ஆண்டுக்குள் புலம்பெயர் பொருளாதாரத்தில் 60% வளர்ச்சி அடைவதை நாடு இலக்காக கொண்டுள்ளது.
மொத்தத்தில் தகுதி வாய்ந்த இந்திய ஊழியர்களுக்கு கனடா நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்தில் மேம்படவும், திறமைக்கு ஏற்ப வேலையும் கிடைக்க வாய்ப்பாகவும் அமையலாம்.