ரிலையன்ஸ் குழுமத்தில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கார்லைன் குரூப் Mphasis நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் திட்டமிட்டு உள்ளது.
இந்தப் பங்கு விற்பனை தான் இந்திய ஐடி துறையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mphasis நிறுவனத்தின் சுமார் 56.12 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பிளாக்ஸ்டோன் குரூப் இந்தப் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், கார்லைல் குரூப் இதை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

விருப்ப விண்ணப்பம்
புதன்கிழமை வர்த்தக முடிவில் Mphasis நிறுவனத்தின் ஒரு பங்கு 1,701.70 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தின் 56.12 சதவீத பங்குகளை 1450 முதல் 1500 ரூபாய் விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் Mphasis நிறுவனப் பங்குகளைக் கைப்பற்ற வேறு யாரும் விருப்பம் தெரிவிக்காத நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தப் பங்கு விற்பனை கவனத்தை ஈர்த்துள்ளது.

நிர்வாக மாற்றம்
இந்த விற்பனை மூலம் Mphasis நிறுவனத்தின் நிர்வாக உரிமை கார்லைல் குரூப்-க்குச் செல்லும் என்பதால் இந்நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
பொதுவாக நிர்வாக மாற்றத்தின் போது நிறுவனத்தில் மறுசீரமைப்பு, ஊழியர்கள் குறைப்பு போன்ற நடவடிக்கை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் பெறத் திட்டம்
இந்த விற்பனை உறுதியாகும் பட்சத்தில், இந்நிறுவனத்தின் 26 சதவீத பங்குகள் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதால், கார்லைல் குரூப் இந்நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்யப் பல வெளிநாட்டு வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முக்கியப் பேச்சுவார்த்தை
கார்லைல் குரூப் தற்போது டாச்சீஸ் வங்கி, பார்க்லேஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, நோமுரா மற்றும் கனடா ஓய்வூதியத் திட்ட முதலீட்டு வாரியம் ஆகியவற்றுடன் கடன் பெறுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் பங்கு பரிமாற்றத்திற்கான ஆலோசனைக்கு ஜேபி மோர்கன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

12 சதவீத தள்ளுபடி விலை
கார்லைல் குரூப் முதற்கட்டமாக Mphasis நிறுவனப் பங்குகளை 1450 முதல் 1500 ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது நிலையில் 56.12 சதவீத பங்குகளின் மொத்த விலை 15,730 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது கார்லைல் சந்தை விலையை விடவும் 12 சதவீத தள்ளுபடி விலையில் பங்குகளைக் கோரியுள்ளது.

ஹெச்பி நிறுவன
2016ல் ஹெச்பி நிறுவனத்திடம் இருந்து ஒரு பங்கு விலை 430 ரூபாய் வீதத்தில் சுமார் 1 பில்லியன் டாலருக்கு 56.12 சதவீத பங்குகளைப் பிளாக்ஸ்டோன் கைப்பற்றியது. தற்போது 100 சதவீத லாபத்திற்கு விற்பனை செய்யப் பிளாக்ஸ்டோன் திட்டமிட்டுள்ளது.

பங்கு விலை
இன்றைய வர்த்தக முடிவில் Mphasis நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1,699 ரூபாயில் இருந்து 1651 ரூபாய்க்குக் குறைந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 310 பில்லியன் ரூபாயாகக் குறைந்துள்ளது.
மேலும் 2021ஆம் ஆண்டில் 1,519 ரூபாயில் இருந்து அதிகப்படியாக 1745 ரூபாய் வரையில் உயர்ந்து Mphasis நிறுவனப் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.