சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்த நிலையில் மத்திய அரசு எடுத்த இன்னொரு அதிரடி நடவடிக்கை காரணமாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் விலை ஏறிய வேகத்தில் இறங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றின் விலை கிட்டத்தட்ட 100 சதவீதம் உயர்ந்தது.
இந்த நிலையில் சமையல் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மூலப் பொருட்களை வரி இன்றி இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு..!

வரியில்லா இறக்குமதி
இந்த நடைமுறை மே 25ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை வரியில்லாமல் இறக்குமதி செய்துகொள்ளலாம் என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஆலோசனை
சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைப்பது மட்டுமின்றி செஸ் வரி மற்றும் விவசாயக் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியை தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து குறைப்பது அல்லது முழுமையாக ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பதுக்கல் தடுக்கப்படும்
இந்தியாவைப் பொறுத்தவரை 60 சதவிகிதம் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து பயன்படுத்தி வரும் நிலையில் இந்த முடிவு எண்ணெய் விலை குறைப்புக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமாயில் மற்றும் சோயாபீன் உள்பட பல எண்ணெய் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதன் காரணமாக பதுக்கலை தடுக்கலாம் என்பது மத்திய அரசின் எண்ணமாக உள்ளது.

இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி
உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் சமையல் எண்ணெய் விலை கிடுகிடு என உயர்ந்த நிலையில் மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஏறிய வேகத்தில் சமையல் எண்ணெய் விலை இறங்கும் வாய்ப்பு உள்ளது என்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.