இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலை, இரு நாட்டு எல்லையிலும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் சீனாவில் அரசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தால், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 30 வருடமாகச் சீனா இந்தியாவிடம் அரசி வாங்காத நிலையில் முதல் முறையாக இப்போது வாங்குகிறது.

அண்டை நாடுகள்
சீனாவிற்கு நீண்ட கால அரிசி ஏற்றுமதி நாடாக இறுக்கும் தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக ஏற்றுமதியில் அதிகளவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சீனா தற்போது இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க முடிவு செய்துள்ளது.

அரிசி இறக்குமதி
இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடாக இருக்கும் நிலையில், சீனா உலகின் மிகப்பெரிய அரசி இறக்குமதி நாடாக உள்ளது. வருடத்திற்கு 40 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்யும் சீனா இந்திய அரசியின் தரம் குறைவாக இருக்கும் காரணத்தால் இது நாள் வரையில் இந்தியாவிடம் இருந்து அரசி வாங்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்த அதிகரிக்கும்
30 வருடங்களுக்குப் பின் சீனா இந்தியாவிடம் அரிசி வாங்குகிறது. இந்த முறை இந்தியாவின் அரிசியின் தரத்தைப் பார்த்து அடுத்த வருடம் இன்னும் அதிகளவில் இந்தியாவிடம் இருந்து அரிசியைச் சீனா இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது என அரிசி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் பிவி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

1 லட்சம் டன்
இந்தியாவில் இருந்து டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் சுமார் 1 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய ஆர்டர் பெற்றுள்ளது. ஒரு டன் 300 டாலர் என்ற அளவீட்டில் ஏற்றுமதி செய்யப்பட்டும் நிலையில், சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை குறைந்தபட்சம் 30 டாலர் அதிகமாக இருக்கும் என இந்திய அரிசி வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி சரிவு
இந்தியாவிற்கு அடுத்து உலகின் 2வது பெரிய அரிசி ஏற்றுமதி நாடாக இருக்கும் தாய்லாந்தில் பருவமழை குறைவாக இருக்கும் காரணத்தால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தாய்லாந்தின் அரசி ஏற்றுமதி அளவு 2020ல் வெறும் 6.5 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இது சுமார் 20 வருடச் சரிவாகும்.
இதேபோல் வியட்நாம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அரிசி உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் வேறு வழி இல்லாமல் சீனா இந்தியாவிடம் வாங்க வந்துள்ளது.

சீனாவிற்குத் தடை
எல்லை பிரச்சனை காரணமாக இந்தியாவில் சீன முதலீடுகளுக்கு அதிகளவிலான தடை விதிக்கப்பட்டுள்ளது, இதேபோல் பல சீன செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்தியாவில் சீனா முதலீடுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒவ்வொரு முதலீடும் அரசு அனுமதியுடன் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சீன முதலீடுகள் தற்போது இந்தியாவில் அதிகளவில் குறைந்துள்ளது.

முதலீடுகள்
இதனால் இந்திய ஸ்டாட்ர்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் டென்சென்ட், அலிபாபா, பையிட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களின் முதலீட்டு விருப்பம் பெரிய அளவில் மாறியுள்ளது.
மேலும் எல்லை பிரச்சனையின் எதிரொலியாக இந்தியாவில் இதுவரை சுமார் 220 சீன செயலிகளைத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தரக்கது.