கிரிப்டோ முதலீட்டின் மீது 30 சதவீதம் வரி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்நிலையில் கிரிப்டோ வர்த்தகத் தளமான CoinSwitch Kuber செவ்வாய்க்கிழமை காலை முதல் அதன் மொபைல் வர்த்தகத் தளத்தில் ரூபாய் டெபாசிட் சேவைகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
ரிஷி சுனக் போட்ட புதிய உத்தரவு..! பிரிட்டன் நாட்டில் கிரிப்டோ ஹப்..!

காயின்ஸ்விட்ச் குபெர்
காயின்ஸ்விட்ச் குபெர் நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷனில் யூபிஐ மற்றும் NEFT/RTGS/IMPS வாயிலாகச் செய்யப்படும் வங்கி பரிமாற்ற ரூபாய் டெபாசிட்களை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் இத்தளத்தில் இருக்கும் முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கிரிப்டோ விதிமுறைகள்
இந்தியாவில் கிரிப்டோ விதிமுறைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் கிரிப்டோகரன்சி மசோதா வெளியாகும் நிலையில், WazirX, ZebPay மற்றும் Giottus போன்ற முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் வர்த்தகத் தளத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு வர்த்தகங்கள் குறைந்தன.

மொபிகிவிக்
இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் மொபிகிவிக், இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகத் தளங்களுக்கு வங்கிகள் சேவை அளிக்கக் கூடாது என ஆர்பிஐ சில வருடங்களுக்கு முன்பு உத்தரவிட்டது அனைவருக்கும் தெரியும். இதனால் அனைத்து முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமும் மொபிகிவிக் இ-வேலெட் சேவையைப் பயன்படுத்தித் தான் இயங்கி வந்தது.

இ-வேலெட் சேவை
இந்த நிலையில் மொபிகிவிக் திடீரென தனது இ-வேலெட் சேவையைக் கிரிப்டோ வர்த்தகத் தளத்திற்கு அளிப்பதை நிறுத்தியது. இதன் வாயிலாகவே வர்த்தகங்களின் எண்ணிக்கை மளமளவெனக் குறைந்துள்ளது. மொபிகிவிக் இ-வேலெட் சேவையில் ஏப்ரல் 9ஆம் தேதி யூபிஐ சேவை நிறுத்தியது.

காயின்பேஸ்
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Coinbase இந்தியாவில் தனது வர்த்தகச் சேவைகளைத் தொடங்கிய மூன்றே நாட்களில் யூபிஐ வாயிலான பேமெண்ட்டை நிறுத்தியது. ஏப்ரல் 7 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற பிக்-பேங் நிகழ்வின் மூலம் இந்தியாவில் தனது வர்த்தக அறிமுகத்தை அறிவித்தது.

யூபிஐ சேவை
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ தளமான காயின்பேஸ், அதன் வாடிக்கையாளர்களை யூபிஐ மூலம் பணத்தைச் செலுத்த முடியும் என அறிவித்த அடுத்த நொடி, யூபிஐ சேவை அளிக்கும் நேஷ்னல் பேமெண்ட் கார்பரேஷன் ஆப் இந்தியா கண்காணிப்புக்குள் வந்தது. இதன் மூலம் சேவையைத் தொடங்கிய மூன்றே நாட்களில் யூபிஐ வாயிலான பேமெண்ட்டை நிறுத்தியது.