பிப்ரவரி மாதம் சாமானிய மக்களுக்கு மிகவும் மோசமான காலமாக மாறியுள்ளது. இம்மாத துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிச் சலுகை, வரிப் பலகையில் தளர்வு, முதலீட்டுச் சலுகை போன்ற பல அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாமானிய மக்களுக்குச் சாதகமான அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளித்தது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் சாமானிய மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் வகையில் சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் மூலம் மக்களின் தினசரி வாழ்க்கையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

சமையல் சிலிண்டர்
மத்திய அரசு இந்தியாவில் சமையல் எரிவாயு விலையைச் சர்வதேச சந்தையில் நிலவும் எரிவாயு விலை, டாலர் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டு விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இதன் படி சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்தைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் மட்டும் சுமார் 3 முறை விலையை உயர்த்தியுள்ளது.

100 ரூபாய் உய்ர்வு
இதன் மூலம் பிப்ரவரி 4ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 14ஆம் தேதி 50 ரூபாயும், பிப்ரவரி 25 தேதி 25 என ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 100 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 694 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 794 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கொடுக்கும் மானியத்தின் அளவீடும் பெரிய அளவில் குறைந்துள்ளது.

பெட்ரோல் விலை
ஜனவரி மாதம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86.53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் அதிகப்படியாகத் தற்போது 92.91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஜனவரி மாதத்தில் 2.30 ரூபாயும், பிப்ரவரி மாதம் 4.08 ரூபாய் எனப் பெட்ரோல் விலை லிட்டருக்கு கிட்டதட்ட 6 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.08 ரூபாய்க்கு உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை
இதேபோல் டீசல் விலை பிப்ரவரி மாதம் 81.72 ரூபாயில் இருந்து 86.32 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டருக்கு 4.60 ரூபாய் டீசல் விலை உயர்ந்துள்ளது.
டீசல் விலை உயரும் காரணத்தால் போக்குவரத்தை நம்பியிருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக உற்பத்தி சந்தையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்துள்ளது.

மக்களின் நிலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்து காய்கறி, பால், போக்குவரத்துச் செலவுகள் என அனைத்தும் அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதால் நடுத்தரக் குடும்பங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது.

பால் விலை
எரிபொருள் விலை உயர்வின் காரணமான பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் செலவுகள் கூடியுள்ளதால் மத்தியப் பிரதேசத்தில் பால் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் மார்ச் 1 முதல் இம்மாநிலத்தில் பால் விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதே நிலை தமிழ்நாட்டிலும் உருவாகும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

சைக்கிள்-க்கு மாறிய அஜித்
எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் கடுமையாகப் பாதித்து வரும் நிலையில், சமுக வலைத்தளத்தில் விலை உயர்வு குறித்துப் பல மீம்கள் கலக்கி வருகிறது. இன்று நடிகர் அஜித் சைக்கிள் ஓட்டும்படி போட்டோ வெளியானது, இதை நெட்டிசன்கள் பெட்ரோல் விலை உயர்வைக் குறிக்கும் வகையில் தான் பைக், கார் ஓட்டும் தல அஜித் தற்போது சைக்கிள் ஓட்டுகிறார் என்ற வகையிலும் மீம் வெளியாகியுள்ளது.