கொரோனா லாக்டவுன் காரணமாகவும் முழுமையான அளவில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தாலும், மக்கள் தங்கள் வேலைகளை இழந்து தவிக்கும் நேரத்தில், எப்படி தங்களது செலவுகளை குறைத்து வருகின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.
சிலருக்கு சம்பள குறைப்பு, சிலருக்கு வேலையிழப்பு, சிலர் எல்லாம் இருந்தும் வேலைக்கு செல்ல முடியாமை என தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எந்த மாதிரியான பொருளாதார சிரமங்களை மேற்கோண்டு வருகின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.

நகை அடமானம்
ஈரோட்டினை சேர்ந்த தோழர் வேலுச்சாமியிடம் இதனை பற்றி பேசியபோது, தான் ஒரு கல்வி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர். இந்த லாக்டவுன் காலத்தில் வருமானமே இல்லை. சொல்லப்போனால் தன் கையில் இருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்பும் சிறிது காலத்திலேயே கரைந்து போனது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதன் காரணமாக நகைகளை அடமானம் வைத்து செலவு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

டிடிஹெச் மற்றும் பெட்ரோல் செலவுகள் கட்
சொல்லப்போனால் லாக்டவுன்னுக்கு முன்னால் என்னதான் வீட்டில் டீ காபி என சாப்பிட்டாலும், தனது நண்பர்களுடன் வெளியில் சென்று டீக்கடையில் டீ சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளவராம். ஆனால் தற்போது வெளியில் செல்வதையே நிறுத்தி விட்டாராம். இன்னும் சொல்லவேண்டுமானல் வெளியில் சென்றாலும் கூட பைக்கை கையில் தொடுவதில்லையாம். பெட்ரோலுக்கு ஆகும் செலவினை குறைக்க நடந்தே செல்வதாக கூறியுள்ளார். டிடிஹெச்-க்கு கூட மூன்று மாதமாக ரீசார்ஜ் செய்வதில்லையாம். ஏனெனில் அதற்கு மாதம் 200 ரூபாய் என கணக்கு வைத்தால் கூட, மூன்று மாதத்திற்கு 600 ரூபாய் மிச்சமாகும்.

சைக்கிளில் தான் செல்கிறேன்
இதே திருப்பூரை சேர்ந்த கார்த்தி என்பவர் அங்குள்ள கார்மென்சில் வேலை பார்த்து வருபவர். ஆனால் இவரின் வீடு பெருந்துறையில் உள்ளதாம். கிட்டதட்ட 40 கிலோ மீட்டர் தொலைவு. தற்போது திருப்பூரில் வேலை தொடங்கப்பட்டிருந்தாலும் அங்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் செல்வதில்லையாம். தற்போது தனது வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வேலைக்கு சென்று வருகிறாராம். அதுவும் பைக்கில் சென்றால் பெட்ரோல் செலவு அதிகரிக்கும் என்பதால், சைக்கிளில் செல்வதாக கூறுகிறார். சாதாரணமாக லாக்டவுனுக்கு முன்பு மதிய சாப்பாடு எடுத்து செல்லாதவர், இன்று மூன்று வேளையும் வீட்டு சாப்பாடு தானாம். இப்ப தான் வீட்டு சாப்பாட்டின் அருமை புரிஞ்சிருக்கு.

மட்டன் செலவு கட் & நாட்டு மருந்துகள் தான் பெஸ்ட்
திருச்செங்கோட்டினை சேர்ந்த குடும்ப தலைவி கீதா, தனது வீட்டில் வாரத்தில் இருமுறையாவது அசைவம் சாப்பிடுபவார்களாம். ஆனால் தற்போது இரு வாரத்திற்கு ஒரு முறை கூட செய்வதில்லையாம். குழந்தைகளுக்கு ஏதேனும் சின்ன பிரச்சனைகள் என்றால் கூட, உடனே மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வோம். ஆனால் தற்போது வருமானம் இல்லை. இதனால் முடிந்த அளவு வீட்டில் இருந்தே நாட்டு வைத்தியம் செய்து கொள்கிறோம். வீட்டில் பால் வாங்குவதை கூட நிறுத்தி விட்டோம். முடிந்த அளவு வீட்டு செலவுகளை குறைத்துள்ளேன். வேறு வழியில்லையே பாஸ்.. லாக்டவுனால் சம்பளம் பாதி தான். அதுதான் செலவும் பாதி என்று கூறுகிறார்.

ரீசார்ஜ் செய்வதையே கூட நிறுத்தி விட்டேன்
இதே தம்பிதுரை என்ற ஈரோட்டினை சேர்ந்த இளைஞர் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர். தற்போது லாக்டவுன் காரணமாக மூன்று மாதத்திற்கும் மேலாக வீட்டிற்குள் முடங்கியுள்ளார். இதன் காரணமாக தனது மொபைல் போனில் ரீசார்ஜ் செய்வதை கூட நிறுத்தி விட்டாராம். ஏன் கட்டிங் சேவிங்க் என்றால் கூட சலூன் கடைகளை தேடிச் செல்வேன்,. ஆனால் தற்போது சுயமாக வீட்டிலேயே செய்து கொள்கிறேன். இதன் மூலம் மாதம் கொஞ்சம் மிச்சமாகிறது. இப்படி சின்ன செலவுகளை கூட குறைத்து விட்டேன். முடிந்த மட்டில் எனது செலவுகளை குறைத்து விட்டேன். இருப்பதை வைத்து சமாளிக்கிறோம். இன்னும் என்ன சொல்ல போங்க..

தண்ணிக்கு கூட காசு கொடுக்கிறதில்ல
சேலத்தினை சேர்ந்த திவ்யா என்ற குடும்ப தலைவியிடம் பேசிய போது, நாங்கள் லாக்டவுனுக்கு முன்பு வரை குடி தண்ணீருக்காக வாட்டர் கேன்களை வாங்கி வந்தோம். அதுவே மாதம் 1000 ரூபாய்க்கு மேல் செலவாகும். ஆனால் தற்போது மூன்று மாதங்களாக தூரத்தில் இருந்தாலும் பரவாயில்லை என, குடி தண்ணீர் வரும் குழாய்களிலேயே பிடித்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு தேவையான சினாக்ஸ்களை வீட்டிலேயே செய்து கொடுத்து விடுகிறேன். அதனால் பேக்கரிக்களுக்கு செல்வதில்லை. சில நேரங்களில் மர்கெட்டுக்கே சென்றாலும், விலை குறைந்த காய்கறிகளைத் தான் வாங்குகிறேன். இப்படி பல செலவுகளையும் குறைத்துள்ளதாகவும், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செலவு செய்வதாக கூறியுள்ளார்.
சரி சரி நீங்க எப்படி உங்க செலவ குறைச்சிருக்கீங்க.. மறக்காம உங்க கமாண்ட்டா பதிவு செய்யுங்க..