2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற போது, "இந்தியப் பொருளாதாரத்துக்கு இனி வசந்த காலம் தான்" என்கிற ரீதியில் கொண்டாடினார்கள்.
2014-க்குப் பின் பொருளாதாரமும் ஓரளவுக்கு வளர்ந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்தியப் பொருளாதாரம் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.
அதற்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மற்றும் விலை வாசியை கவனித்தால் போதுமானதாக இருக்கும். முதலில் ஜிடிபியில் தொடங்குவோம்.
இதோ வந்தாச்சில்ல மூன்றாவது தனியார் ரயில்.. காசி மஹாகல் எக்ஸ்பிரஸ்.. எங்கு.. எப்போது ஆரம்பம்..!

ஜிடிபி
- கடந்த 2016 - 17 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2016 காலாண்டில்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 9.2 % வளர்ச்சி கண்டது. அதற்கு அடுத்தடுத்த காலாண்டில் மெல்ல சரியத் தொடங்கியது.
- செப்டம்பர் 2016 காலாண்டில் 8.7 %,
- டிசம்பர் 2016 காலாண்டில் 7.4 %,
- மார்ச் 2017 காலாண்டில் 6.9 % என ஜிடிபி மெல்ல சரிந்தது.

அடுத்த நிதி ஆண்டு
அதற்கு அடுத்த நிதி ஆண்டான 2017 - 18 நிதி ஆண்டில்
ஜூன் 2017 காலாண்டில் 6.0 %
செப்டம்பர் 2017 காலாண்டில் 6.8 %,
டிசம்பர் 2017 காலாண்டில் 7.7 %,
மார்ச் 2018 காலாண்டில் 8.1 % என மீண்டும் ஒரு வழியாக ஏற்றம் கண்டது.

சரிவு தான்
- ஆனால் அதற்குப் பின் தொடர்ந்து சரிவு தான். கடந்த 2018 - 19 நிதி ஆண்டில்
- ஜூன் 2018 காலாண்டில் 8.0 %
- செப்டம்பர் 2018 காலாண்டில் 7.0 %,
- டிசம்பர் 2018 காலாண்டில் 6.6 %,
- மார்ச் 2019 காலாண்டில் 5.8 % என ஜிடிபி வளர்ச்சி சரிந்து கொண்டே வந்தது.

தற்போது
இந்த சரிவு தற்போதைய 2019 - 20 நிதி ஆண்டில் இன்னும் அதிகரித்து விட்டது. கடந்த ஜூன் 2019 காலாண்டில் 5.0 % மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி வெறும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது. ஆக கடந்த ஜூன் 2016 காலாண்டில் 9.2 % ஜிடிபி வளர்ச்சியில் இருந்து, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 %-க்கு சரிந்து இருக்கிறது ஜிடிபி வளர்ச்சி. பாதிக்கு பாதி கூட வளர்ச்சி காணவில்லை. இது தான் ஜிடிபியின் நிலை என்றால் விலை வாசி இன்னும் கொடூரமாக இருக்கிறது.

விலை வாசி பூதம்
கடந்த ஜனவரி 2019-ல் 1.97 சதவிகிதமாக இருந்த நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (விலை வாசி), கடந்த டிசம்பர் 2019-ம் மாதத்துக்கு 7.35 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை விட கொடுமையான விஷயம் வெங்காயத்தின் விலை ஏற்றம். கிலோவுக்கு 250 - 300 ரூபாய் கொடுத்து வாங்கியதை எல்லாம் மறந்து இருக்கமாட்டீர்கள் என நம்புகிறோம்.

கணிப்பு
இந்தியாவின் விலை வாசி (நுகர்வோர் பணவீக்கக் குறியீடு) பற்றி, ராய்டர்ஸ் (Reuters) நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், 40 பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கருத்துக் கணிப்பில் தான், இந்தியாவின் விலை வாசி பற்றிய ஒரு திடுக்கிடும் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதிகரிக்கலாம்
இதில் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் "இந்திய பொருளாதாரத்தின் விலைவாசி (நுகர்வோர் பணவீக்கம்) கடந்த மே 2014-க்குப் பின் இல்லாத அளவுக்கு அதிகரிக்கலாம். வரும் ஜனவரி 2020-க்கான (சிபிஐ குறியீடு) விலைவாசி 7.40 % தொடலாம்" என குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள்.

ஆர்பிஐ
ஏற்கனவே, இந்திய பொருளாதாரத்தின் விலை வாசி அதிகமாக இருப்பதால், ஆர்பிஐ, தன் வட்டி விகிதங்களை மேலும் குறைக்க முடியாது எனச் சொன்னது நினைவில் இருக்கலாம். ஆக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆர்பிஐ என பல தரப்பினரும் இந்தியாவின் விலை வாசியை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள் எனும் போது, கொஞ்சம் பயம் வரத் தான் செய்கிறது.