7வது சம்பள கமிஷன் அடிப்படையில் நடப்பு ஆண்டுக்கான அகவிலைப்படி மத்திய அரசு 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி 1, 2022 முதல் அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசின் கீழ் பணிகளில் இருக்கும் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் கூடுதலான சம்பளம் பெற உள்ளனர்.
சரி இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் ஒரு மத்திய அரசு ஊழியரின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா..?!
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..!

34 சதவீத அகவிலைப்படி
உதாரணமாக ஒரு ஜூனியர் லெவலில் இருக்கும் மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஜனவரி 1, 2022க்கு முன்பு 31 சதவீத அகவிலைப்படி அடிப்படையில் 5580 ரூபாய் பெற்று இருப்பார். தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக இருக்கும் நிலையில் அகவிலைப்படி 6120 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 540 ரூபாய் அதிகரித்துள்ளது.

கிளாஸ் 1 பிரிவு ஊழியர்
இதுவே கிளாஸ் 1 பிரிவில் இருக்கும் மத்திய அரசு அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56100 ரூபாயாக இருக்கும் பட்சத்தில் 34 சதவீதம் அகவிலைப்படி என்றால் சம்பளத்தில் 1,683 ரூபாய்க் கூடுதலாகக் கிடைக்கும். இதன் மூலம் கிளாஸ் 1 பிரிவில் இருக்கும் அதிகாரியின் அகவிலைப்படி 17,391 ரூபாயில் இருந்து 19,074 ரூபாயாக உயர உள்ளது.

ஒய்வூதியதாரர்கள்
இதேபோல் மத்திய அரசு பணியில் இருந்த ஒய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் வாங்குபவர்கள் ஆகியோருக்கும் இந்த அகவிலை நிவாரணம் உயர்வின் மூலம் தக்க பலன்களும் கூடுதலான ஓய்வூதியமும் கிடைக்க உள்ளது.

ஜனவரி 1 மற்றும் ஜூலை 1
மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி பணவீக்கத்தின் அடிப்படையில் வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதி மறு ஆய்வு செய்து அகவிலைப்படி அளவீட்டை நிர்ணயம் செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு கடுமையான நிதிச் சுமையில் இருக்கும் போதும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை டிசம்பர் மாதம் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதகாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி மூலம் பெரும் தொகையின் அளவு 82 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022-23 பட்ஜெட் அறிக்கை
இந்நிலையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதலான 3% அகவிலைப்படி எப்போது கிடைக்கும் என்பது பல லட்சம் அரசு ஊழியர்களின் கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சம்பள உயர்வின் மூலம் கூடுதலான நிதி சுமை உருவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.