ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் - அமேசான் நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பிரச்சனை மற்றும் வழக்குகளில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. டெல்லி உயர் நிதீமன்றத்தில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான் தொடுத்த வழக்கின் விசாரணை நடந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் அரசு அமைப்புகளான தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், CCI மற்றும் செபி ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் மீதான நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்துள்ளது. இதேபோல் அமேசான் கோரிக்கை விடுத்துள்ள ஒரு வாரக் கால அவகாசமும் அளிக்க முடியாது என அறிவித்துத் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்நிலையில் அமேசானுக்கு இந்தத் தீர்ப்பு குறித்து ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் அதாவது அடுத்த விசாரணை நடப்பதற்குள் தனது கருத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் பியூச்சர் குரூப் தனது சொத்துக்களை 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தின் படி அரசு மற்றும் நிர்வாக அமைப்புகள் ஒப்புதல் அளிக்கப்படுமாயின் ஒப்பந்தத்தைத் தொடரலாம். கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் குறித்து நடந்த விசாரணையில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தற்காலிக தடை விதிக்கப்பட்டு அமேசான் நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது.
இந்நிலையில் பியூச்சர் குரூப் கடந்த வார தீர்ப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனுவில், இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் பின்வாங்கினால் தானும், தன் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று குறிப்பிட்டு மனு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தீர்ப்பு ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் சாதகமாக வந்துள்ளது.