டெல்லி: Faculty of Management Studies (FMS) என்கிற கல்லூரியில் எம் பி ஏ படிக்கும் மாணவர்கள் தான், தங்களின் இண்டேர்ன்ஷிப் என்று சொல்லப்படும் பணிப் பயிற்சிக் காலத்துக்கே சராசரியாக மாதம் 1 லட்சம் ரூபாய் என இரண்டு மாத பயிற்சி காலத்துக்கு 2 லட்சம் ருபாய் உதவிக் தொகை பெற இருக்கிறார்களாம்.
2019 - 21 கல்வி ஆண்டில் மொத்தம் 211 மாணவர்கள், வரும் கோடை காலத்தில் தங்கள் பணிப் பயிற்சிக் காலத்துக்குச் செல்ல இருக்கிறார்களாம். இந்த 211 மாணவர்கள் பெற இருக்கும், சராசரி மாதாந்திர உதவித் தொகை 1.15 லட்சம் ரூபாயாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள், தங்களின் பணிப் பயிற்சிக் காலத்துக்கு பெற இருக்கும் உதவித் தொகை 13.5 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்த பயிற்சி சுமாராக 2 மாதங்கள் வரை இருக்குமாம். அதன் பின் மீண்டும் தங்கள் வகுப்பறைக்கே மாணவர்கள் திரும்பி விடுவார்களாம்.
இந்த ஆண்டில் பணிப் பயிற்சிக் காலத்துக்குச் செல்லும் 80 சதவிகித மாணவர்களின் மாதாந்திர உதவித் தொகை (இரண்டு மாத காலங்களுக்கு) 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்க இருக்கிறார்களாம். அதோடு பெண்களுக்கான உதவித் தொகையும் நன்றாக அதிகரித்து இருக்கிறதாம். கடந்த ஆண்டில் இரண்டு மாத, பணிப் பயிற்சிக் காலத்துக்கு சராசரியாக 2.10 லட்சம் ரூபாய் உதவித் தொகையாக பெற்றுக் கொண்டிருந்த பெண்களுக்கு இப்போது இந்த ஆண்டு 11.2 சதவிகிதம் உதவித் தொகை அதிகரித்து இருக்கிறதாம். இப்போது அதே இரண்டு மாத கால பணிப் பயிற்சிக் காலத்துக்கு பெண்கள் சராசரியாக 2.33 லட்சம் ரூபாய் உதவித் தொகை பெற இருக்கிறார்களாம்.
சரி, எந்த துறையில் மாணவர்கள் அதிகம் தங்கள் பணிக் கால பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் எனப் பார்த்தால்... 22 % மாணவர்கள் ஆலோசனை மற்றும் பொது நிர்வாக பிரிவிலும், 17 % மாணவர்கள் நிதித் துறையிலும், 39 % மாணவர்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளிலும் தங்கள் பணிக்கால பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்களாம்.
தொழில்முனைவோர்களாக வர விரும்பும் துடிப்பான மாணவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் தங்கள் பணிப் பயிற்சிக் காலத்தைக் கழிக்க இருக்கிறார்களாம். ம்ம்ம்... ஒரு பக்கம், பணிப் பயிற்சி காலத்தின் போதே மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் உதவித் தொகையாக வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மற்றொரு பக்கம், பணி அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும், மாதம் 1 லட்சம் ரூபாய் என்கிற கனவு சம்பளத்தை தொட முடியாமல் தவிக்கிறார்கள்.